மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கட்சியில் மோதல் உருவானது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரியை நீக்குவதாக ஜவாஹிருல்லா அறிவித்தார்.
இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமீமுன் அன்சாரி தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
கடந்த 2009-ல் மனிதநேய மக்கள் கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தோம். கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி மத்திய நிர்வாகக்குழு மற்றும் மத்திய பொதுக் குழுவுக்கு பொதுச்செயலாளர்தான் தலைமை வகிப்பார். கடந்த 2012 முதல் கட்சியின் பொதுச்செயலாளராக நீடித்து வருகிறேன்.
ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் தன்னிச்சையாக தாம்பரத்தில் பொதுக்குழு வைக் கூட்டி அதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளராக பி.அப்துல் சமது, பொருளாளராக ஓ.யு.ரகமத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித் துள்ளனர். அந்தக் கூட்டத்தை மத்திய நிர்வாகக்குழு அங்கீகரிக்கவில்லை. எனவே, அந்தக் கூட்டத்தை சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூட்ட முடிவுகளை செல்லாது எனவும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமீமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் இருந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால், எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 2015 செப்டம்பர் 21-ம் தேதியுடன் தமீமுன்அன்சாரியின் பதவிக் காலம் முடிந்துவிட்டதாக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும் 2011-ம் ஆண்டு செப்டம்பர் 30-ல் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி, கட்சியின் அனைத்து கூட்டங்களுக்கும் தலைமை வகிக்கும் அதிகாரம் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித் துள்ளனர். பதவியிலேயே இல்லாதபோது அவரால் இந்த மனுவை மமக சார்பில் தாக்கல் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, அவருடைய மனுவை ஏற்க முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு குறித்து ‘தி இந்து’விடம் ஜவாஹிருல்லா கூறும்போது, ‘‘நியாயம் வென்றுள்ளது. இது நீதிக்கு கிடைத்த வெற்றி. இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் மமக-வில் நீடித்து வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. இனி தமீமுன் அன்சாரி எங்களின் கட்சிப் பெயரையோ, கட்சிக் கொடியையோ பயன்படுத்தக் கூடாது. சட்டரீதியாக பயன்படுத்தவும் முடியாது’’ என்றார்.
தகவல்:
தி இந்து |