நஹ்வீ அப்பா நற்பணி மன்றம் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு, அதில், சமுதாயச் சேவையாற்றிய மூவருக்கு நஹ்வியப்பா நினைவு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில், நஹ்வியப்பா தைக்காவை செயல்களமாகக் கொண்டு இயங்கி வருகிறது நஹ்வியப்பா நற்பணி மன்றம். இதன் சார்பில், நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா, மஹான் நஹ்வியப்பா நினைவு நாள் விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், 12.03.2016. (ஹிஜ்ரீ 1437, ஜமாதியுல் ஆகிர் 02ஆம் நாள்) சனிக்கிழமையன்று, சொளுக்கார் தெருவில் நடைபெற்றது.
அன்று 06.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி இமாம் மவ்லவீ எம்.எல்.முஹம்மத் அலீ தலைமையில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, ஈஸால் தவாப் செய்யப்பட்டது. பெண்கள் பங்கேற்ற மவ்லித் மஜ்லிஸ், நஹ்வியப்பா தைக்கா வளாகத்தில், 10.00 மணிக்கு நடைபெற்றது.
மாலை நிகழ்ச்சிகள் சொளுக்கார் தெரு நஹ்வியப்பா திடலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்றன.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையில் நபிகளார் புகழ் பாடும் புர்தா மஜ்லிஸ் 16.45 மணியளவில் நடைபெற்றது. ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் வழிநடத்தலில், மத்ரஸா மாணவர்கள் தஃப்ஸ் முழங்கி மஜ்லிஸை நடத்தினர்.
மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆவுடன் மாலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
19.00 மணியளவில் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துவங்கியது. குருவித்துறைப் பள்ளி - மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார். மார்க்க அறிஞர்களும், நகரப் பிரமுகர்களும் முன்னிலை வகித்தனர்.
காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளி இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் எம்.எம்.எல்.அஹ்மத் இப்றாஹீம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அனைவரும் எழுந்து நின்று, அஹ்மதுல்லாஹ் பைத் பாடினர். மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நடப்பாண்டு வைபவக் கமிட்டி தலைவர் கே.எம்.செய்யித் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, “வலிமார்களின் வல்லமை” எனும் தலைப்பில், ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் மவ்லவீ எஸ்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ பாக்கவீ சிறப்புரையாற்றினார்.
“மஹான் நஹ்வியப்பா அவர்களின் வரலாறு” எனும் தலைப்பில், ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, காயல்பட்டினத்தில் சன்மார்க்கச் சேவைகளும், பொதுநலச் சேவைகளும் ஆற்றி வரும் மூவருக்கு, நஹ்வியப்பா நினைவு விருது வழங்கப்பட்டது.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் & திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா மூலமாக எண்ணற்ற மாணவர்களுக்கு மார்க்க அறிவைப் புகட்டி, நூற்றுக்கணக்கான ஹாஃபிழ்களை உருவாக்கி வரும் - அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையின் செயலாளர் எம்.ஏ.எஸ்.அபூதல்ஹாவிடமும்,
முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி எனும் மகளிர் கல்லூரியை நிறுவி, ஏராளமான ஆலிமாக்களை உருவாக்கி வருவதோடு, தமிழ் பேசும் பகுதிகள் முழுக்க தன் நாவாற்றலால் சன்மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தி, மார்க்கச் சேவையாற்றி வருவதற்காக மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் துணைச் செயலாளர் ஜெஸ்மின் ஏ.கே.கலீலிடமும்,
இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளராக இருந்து, பொதுநலச் சேவைகளைத் தொடர்ந்து ஆற்றி வரும் சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், சிறிய - பெரிய குத்பா பள்ளிகளின் நிர்வாகி எஸ்.ஏ.ஜவாஹிரிடமும் விருதுகளைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை, ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் நெறிப்படுத்த, விருது பெற்றோர் குறித்த பாராட்டுரையை, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு மாணவர் எஸ்.ஏ.பி.ஜைனுல் ஆப்தீன் ரவாஹா ஆற்றினார்.
விருது பெற்றோரைப் பாராட்டி, JASS Perfumes தனியார் நிறுவனம் சார்பில் நறுமணப் பொருள் பரிசாக வழங்கப்பட்டது.
அண்மையில் சிறிய குத்பா பள்ளியின் கத்தீபாக நியமிக்கப்பட்டுள்ளமைக்காக, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ இந்நிகழ்ச்சியில் கண்ணிப்படுத்தப்பட்டார். குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் அவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
நன்றியுரையைத் தொடர்ந்து, நஹ்வியப்பா கந்தூரி கமிட்டி தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
விழா நிகழ்ச்சிகளில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை, எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்கு அப்துல் காதிர், எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன், எஸ்.ஏ.ஸிராஜ் நஸ்ருல்லாஹ் உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
கடந்தாண்டு நடைபெற்ற நஹ்வியப்பா கந்தூரி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நஹ்வியப்பா நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|