சவுதி அரேபியா - ஜித்தாவில் கடந்த 04.03.2016,வெள்ளிக்கிழமை நடந்தேறிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 93-ஆவது செயற்குழு கூட்ட விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-
எல்லாம் வல்ல ஏக நாயனின் பேரருளால், சவுதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 93-ஆவது செயற்குழு கூட்டம், கடந்த 04.03.2016 வெள்ளிக்கிழமை மஃரிபுக்கு பின் ஜித்தா – ஷரஃபியாவில் அமைந்துள்ள, இம்பாலா கார்டன் உணவகத்தில், இம்மன்றத்தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹமது முஹிய்யதீன் தலைமையில் சகோ. ஜட்னி. எஸ்.எம். முஹம்மது லெப்பை இறைமறை ஓதி துவக்க, சகோ. எம்.ஐ.செய்யது நூஹு அப்துல் பாஸித் வந்திருந்த அனைவரையும் அக மகிழ வரவேற்றார்.
தலைமையுரை:
அதனை அடுத்து தலைமையுரையாற்றிய சகோ. குளம் எம்.ஏஅஹமது முஹிய்யதீன் இன்று 93-வது செயற்குழுவில் நாம் ஓன்று கூடி இருக்கிறோம். இதுவரை இம்மன்றம் பல சேவைகளை நமதூர் நலனுக்காக செய்தும் தொடர்ந்து பயணிக்கிறது என்றால் அது நம் அனைவரின் ஒற்றுமையால் நடந்த நன்மையே. இந்த ஒற்றுமையும் சேவை மனப்பான்மையும், ஆதரவும் நம் அனைவர்க்கும் தொடர்ந்து இருக்க வல்ல அல்லாஹ் அருள் புரிவானாகவும் என எடுத்துக்கூறி விரிவான விளக்கம் தந்து நல்ல பல கருத்துகளையும் தந்து அமர்ந்தார்.
மன்ற செயல்பாடுகள்:
நாம் இதோ 93-வது கூட்ட தொடரில் அமர்ந்து இருக்கிறோம். கடந்த 03.01.2003 ல் முதலாவது மன்ற அறிமுக கூட்டம் நடந்தது அன்று இம்மன்றம் நல்லமுறையில் உருவாக உழைத்த உதவிய மூத்த உறுப்பினர்களில் பலர் இன்று வயது மூப்பின் காரணமாக மற்றும் சொந்த தொழில் வேறு பணி நிமித்தமாக தாயகத்திற்கும் மற்றும் பல்வேறு இடங்களுக்கும் மாற்றலாகி சென்றுவிட்டார்கள். மேலும் சிலர் இறைவனின் நாட்டப்படி அவனளவில் சேர்ந்து விட்டார்கள். வல்ல அல்லாஹ் மறைந்த இவர்களின் பாவ பிழை பொறுத்து மேலான சுவனபதியை வழங்கிடவும் பிரார்த்திப்பதுடன் இவர்களின் நல்ல எண்ணத்தின் பிரகாரம் தொய்வில்லாமல் நம் பணிகள் தொடர்கிறது.
இன்று 13 ஆண்டுகள் நிறைவுற்று 14-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்பது நம் அனைவருக்கும் அகம் மகிழும் நற்செய்தியாகும் அல்ஹம்துலில்லாஹ் என தன் உரையை துவக்கிய மன்றச்செயலாளர் சகோ.ஜட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் கடந்த செயற்குழுக்கூட்ட அறிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விபரமாக எடுத்துக்கூறினார்.
நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டதினால் தேவையுடைய நம் மக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறோம். நாம் இங்கொன்றும், அங்கொன்றுமாக தனிப்பட்ட முறையில் இருந்திருந்தால் நம்மால் இத்தனை உதவிகளை செய்திருக்க முடியுமா ? இது ஒன்றும் பெரிய சாதனையல்ல, அல்லாஹ் நமக்கு வழங்கிய வாய்ப்பினை நாம் ஒரு அமைப்பின் மூலம் பயன் படுத்துகின்றோம்.
நாம் செய்யும் இந்த உதவியால் நமக்கும் நம்மை சார்ந்தோருக்கும் இவ்வுலகத்திலும்,மறு உலகத்திலும் வல்லோன் அல்லாஹ்வின் புறத்தில் ஓர் பெரிய வெகுமதி இருக்கிறது. என்றதுடன் மன்றத்தின் சீரிய பணிகள் மற்றும் காயலர் குடும்ப சங்கமமாக அடுத்து நடக்கவிருக்கும் 35-ஆவது பொதுக்குழு குறித்து உறுப்பினர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறும் மன்றச்செயலாளர் சகோ.எம்.எ.செய்யிது இப்ராஹீம் வேண்டிக்கொண்டார்.
நிதி நிலை அறிக்கை:
கடந்தாண்டுகளில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டங்களின் ஏற்பாடுகள் அனுசரணையாளர்களால் பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் இது சம்பந்தமான வரவு செலவுகளோடு மீதம் வந்த தொகைகளின் நல்ல தகவல்களையும் பரிமாறியும் மேலும் இப்பொழுது வரவேண்டிய மற்றும் பெறப்பட்ட சந்தாக்கள், தற்போதைய இருப்பு மற்றும் சென்ற கூட்டத்தில் முடிவு செய்து வழங்கப்பட்ட தொகைகள் போன்ற முழு விபரங்களையும் மன்ற பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் நிதி நிலை அறிக்கையாக தந்து கொண்டார்.
மருத்துவ உதவிகள்:
ஷிஃபா மருத்துவ அறக்கட்டளை சமீபத்தில் பதிவு செய்யப்பட்டப்பின் புதியதோர் ஆரம்ப விண்ணப்ப எண்ணுடன் மருத்துவ உதவி வேண்டி வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறைப்படுத்தியும் உறுப்பினர்களால் வாசிக்கப்பட்டு, வந்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் கர்ப்பபை, கண், மூலம், தைராய்டு அறுவை சிகிச்சைகள் மற்றும் பக்கவாதம், மூட்டு வலி என பாதிப்புக்குள்ளான ஆறு பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குண்டான நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அவர்களின் பரிபூரண உடல் நலத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
சிறப்பு விருந்தினராக சவூதியின் தென் மாகாணம் ஏமன் நாட்டின் எல்லை அருகில் உள்ள ஜீஸான் நகரின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் நம்மண்ணின் மைந்தர் முனைவர் எஸ்.ஏ.தமீமுல் அன்சாரி அவர்கள் இச்செயற்குழுவில் கலந்து கொண்டும் தான் பிறந்து வளர்ந்தது ஓர் எளிய குடும்பத்தில் என்றும் இருப்பினும் இறை உதவியாலும் தனது விடா முயற்சியினாலும் நன்றாக படித்து இன்று இந்த நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதும் தங்களைபோன்றோர்கள் பயிலும் காலங்களில் ஊக்கமும் உதவியும் தந்து படிக்க வைக்க இதுபோன்ற நம் நகர் நல அமைப்புகள் இல்லை என்றும் மேலும் தான் இங்கு வந்து கலந்து கொண்ட பிறகு தான் உணர்ந்து உள்வாங்கி கொண்டதும் நம் ஊர் மக்களுக்காக போட்டி போட்டு ஒருவருக்கொருவர் நல்ல பல கருத்துக்களை பரிமாறிக்கொண்டு உதவ முனைவதுடன் இம்மன்றம் செய்து வரும் அளப்பரிய சேவைகளும், நல உதவிகளும் அறிந்து கொண்டதும், உங்களோடு தானும் சேர்ந்து பங்களிக்க விரும்புவதாயும் மிக பெருமையாக இருக்கிறது இந்த சேவை மனப்பாமை தொடரவும்,நமதூர் மக்களின் நன்மைக்கான இப்பணி தடையின்றி செல்லவும் வல்ல இறையை வேண்டியும் வாழ்த்தியும் தனது சிறப்புரையை மகிழ்வுடன் நிறைவு செய்தார்.
முன்னதாக சகோ சீனா எஸ்.எச்.மொஹ்தூம் முஹம்மது விருந்தினரை அறிமுகபடுத்தியும் கொண்டார். அமர்வில் பங்கேற்ற உறுப்பினர்கள் யாவரும் விருந்தினரை மனமகிழ வரவேற்று சிறப்பித்தார்கள்.
நன்றி நவிலல்:
சகோ. எஸ்.ஹெச்.அப்துல்காதர் நன்றி கூற சகோ. பிரபு எஸ்.ஜே.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
கூட்டத்திற்கான மற்றும் இரவு உணவிற்கான முழு அனுசரணையை சகோ. பொறியாளர் எம்.எம்.முஹம்மது முஹிய்யதீன் நல்லபடி ஏற்பாடு செய்து இருந்தார். ஜசாக்கல்லாஹ் ஹைரா.
தீர்மானங்கள்:
1 – இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஏப்ரல் மாதம் 01.04.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை மன்றத்தின் 35-ஆவது பொதுக்குழு கூட்டம் காயலர் குடும்ப சங்கமமாக,அனைவருக்குமான உள்ளரங்க வெளியரங்க விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் வழமையான குதூகலத்துடன் அல் சப்வா இஸ்திராஹ் எனும் விசாலமான ஓய்வில்லத்தில் நடைபெறும்.
2 - உறுப்பினர்களின் விரிவான கருத்து பரிமாற்றதில் நம் பொதுக்குழு சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் விளையாட்டு நிகழ்வுகளையும், ஓர் WhatsApp குழுமம் தற்காலிகமாக அமைத்து அதன் மூலம் எல்லா உறுப்பினர்களின் நல்ல பல கருத்துக்களை அதில் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் இந்நிகழ்வு முடியுற்ற பின் அதனை கலைத்து விடலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு குழுமம் அமைக்கப்பட்டது.
3 -இப் பொதுக்குழு சம்பந்தமாக வரவேற்பு ,உணவு ,வாகனம் , நிதி மற்றும் ஆண்கள் பெண்கள், குழந்தைகளுக்கான போட்டிகளின் ஏற்பாட்டு குழுக்கள் மற்றும் சிறப்பு துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும் இனிய இந்நிகழ்வை மிகச்சிறப்பாக விமரிசையாக நடத்த வேண்டியும் அதற்கான பணிகளை இப்போதே துவக்கி உறுப்பினர்களை களப்பணிகளில் ஆர்வமூட்டி தயார்படுத்த வேண்டுமென்றும் எனவும் அனைவரையும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
18.03.2016.
|