சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 2 லட்சத்து 38 ஆயிரத்து 500 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 53-வது செயற்குழு கூட்டம் (11-Mar) வெள்ளியன்று ETA நிறுவன ஊழியர்கள் தங்கும் இல்லத்தில் மன்ற செயற்குழு உறுப்பினர் SB முஹம்மது முஹீயத்தீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர்கள் இப்னு சவுத் மற்றும் விளக்கு மீரா லெப்பை அவர்களும், மேலும் பார்வையாளராக எம்மன்ற உறுப்பினர் சகோதரர் ஷாதுலி அவர்களும் பங்கு பெற்றனர்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் ப்ரைய்யுடன், இனிமையான பாயாசமும் பரிமாறப்பட்டது,
பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் செய்து இஸ்மாயில் வாசித்தபின் பின் இறைமறையை ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரீஸ் அவர்கள் ஓதினார்கள். அதன் பின் வந்தோரை மன்ற ஆலோசகர் MEL நுஸ்கி அவர்கள் வரவேற்று, தொடர்ச்சியாக தலைமையுரையில் SB முஹம்மது முஹீயத்தீன் அவர்கள் நம்மன்றம் மருத்துவத்திற்கு அதிகம் செலவு செய்யும் அதே நேரத்தில் கல்வி மற்றும் சிறு தொழிலில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது விருப்பத்தை வெளிபடுத்தினார்.
நிதி உதவிகள்: (ரூ. 2,38,500/-)
அடுத்து ஊரிலிருந்து உதவி கேட்டு வந்த விண்ணப்பங்களை சமர்பிக்கப்பட்டு அதனுடைய அவசர தேவை மற்றும் நடந்து முடிந்த மருத்துவத்திற்கு உதவிகள் கோரப்பட்டு மாஷா அல்லாஹ் மொத்தம் 10 கடிதங்களுக்கு ரூ. 1,92,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்துடன் பெறப்பட்ட சிறுதொழில் செய்வது சம்பந்தமாக வந்த 2 விண்ணப்பத்திற்கு ரூ. 21,500/ வும்,மற்றும் 1 கல்வி கடனுக்காக ரூ. 25,000/- வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட சாரம்சத்தை துணைப்பொருளாளர் வாவு கிதுர் முஹம்மது வாசித்தார்.
கட் ஆஃப்:
கடந்த 4 வருடங்களாக எம்மன்றத்தால் நடாத்த பட்டு வரும் மருத்துவம் , பொறியியல் பாட பிரிவின் வாங்கும் மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் பரிசு திட்டத்தினை மீளாய்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் பரிசு தொகை என்பதற்கு பதிலாக இக்ரஃ வுடன் இனைந்து மேலும் திறம்பட செய்யும் பொருட்டு நம் ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் இத்துறைக்கும் செல்ல ஆர்வம் உள்ள மாணவர்களை தேர்வு செய்து , சிறந்த ஆசிரியர்களை கொண்டு கடைசி 3 மாத காலம் சிறந்த பயிற்சி கொடுக்கலாம் என்று சகோதரர் வெள்ளி சித்தீக் அவர்கள் எடுத்து கூறி அது சம்பந்தமாக இக்ரஃ வுடன் பேச எம்மன்ற செயலாளர் முஹ்சின் பணிக்கப்பட்டுள்ளார்.
அடுத்து கண் அறுவை சிகிச்சைக்காக அதிகமான கடிதம் வருவதை கருத்தில் கொண்டு ஷிஃபா மூலம் வரும் நோயாளிகளுக்கு ஆபரேஷன் கட்டணத்தை குறைக்க வேண்டி அரவிந்த் மருத்துவமனை மருத்துவர் முஹீயத்தீன் அவர்களை தொடர்ப்பு கொண்டு பேசிய சமயத்தில், அமைப்பில் இருந்து முறையான கடிதத்துடன் கடந்த 2 வருடங்களாக ஷிஃபா மூலம் கண் சம்பந்தமாக நிதி உதவி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்றவற்றை இணைத்து தரும் பட்சத்தில் நிர்வாகத்திடம் பேசி நல்ல முடிவை தருவதாக கூறியதாக சகோ S.L. சதக்கத்துல்லாஹ் விவரமாக எடுத்துரைத்தார். இது தொடர்பாக ஷிஃபா அமைப்புடன் தொடர்பு கொள்ள சகோ சதக்கத்துல்லாஹ் உடன் சகோ ஹஸன் அவர்களும் பணிக்கப்பட்டனர்.
ரமலான் உணவு பொருள் வழங்கும் திட்டம்:
கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் புனித ரமலான் மாதத்தில் ஏழை நோன்பாளிகளுக்கு நோன்பு கால அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்குவது என்றும் மேலும் கடந்த வருடங்களை போலவே அதே பயனாளிகளுக்கு பெருநாள் இரவில் நாட்டுக் கோழி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டு, ஒரு பயனாளிக்கு (170/- சவூதி ரியால்) வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நல்லதொரு பங்களிப்பில் தங்களை இணைத்து கொள்ள விரும்புவோர் மன்ற துணை செயலாளர் சகோ இஸ்மாயில் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
(தொடர்பு எண் 055 622 0116, இ-மெயில்:ismail.27@gmail.com)
ஷிஃபா:
ஷிஃபா வின் தற்போதைய நிலையை பற்றி அதன் பொறுப்பாளரும் எம்மன்ற தலைவரும்மான சகோ நூஹு அவர்கள் எடுத்துரைத்த பின் செயற்குழு உறுப்பினரகள் தங்களுடைய கருத்தினை பரிமாறினார்,
நோயாளிகளின் கடிதங்கள் மிகுந்த தாமத்திற்கு பிறகு கிடைக்க பெறுவது வேதனை அளிப்பதாகவும் இனி வரும் காலங்களில் இது கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டும் என்றும் இதன் வழி முறைகளை எளிதாக்கிட ஷிஃபா அமைப்பினை கேட்டு கொள்ளுவது என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது செய்யப்பட்டு வரும் பணிகளோடு நிறுத்திக்கொள்ளாமல், அரசாங்க உதவிகளையும் பயனாளிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்குண்டான வழிவகைகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக , பார்வையாளர் உரை:
கூட்டத்திற்கு அழைக்கப்படும் எல்லா விருந்தினர்கள் / பார்வையாளர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்க நேரம் வழங்குவது இயல்பு, அதனடிப்படையில்...
ஆரம்பமாக சகோதரர் ஷாதுலி அவர்கள் முதலில் தம்மை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, நம்மன்றம் நல்ல பல திட்டங்களை செய்வது அறிந்து மிக்க மகிழ்வதாகவும், அதே நேரம் நாம் விவாதித்த கட் ஆப் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், சிறந்த திட்டமான ரமலான் உணவு திட்டம் மற்றும் மாதாந்திர உணவு திட்டத்தின் பயனாளிகளை அதிகரிக்க வழி செய்ய வேண்டும் என்று கூறினார்.
அடுத்து பேசிய சகோதரர் விளக்கு மீரா லெப்பை அவர்கள் தம்மை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி ரியாத் காயல் நலமன்றம் (RKWA) வின் செயல் பாடுகள் மற்றும் போட்டி போட்டு கொண்டு உதவி செய்வது தம்மை கவர்ந்ததாகவும், இந்த நற்செயலுக்கான கூலியை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் யாவருக்கும் வழங்குவனாக என்ற பிரார்த்தனையோடு அமர்ந்தார்.
அடுத்து பேசிய சகோதரர் இப்னு சவுத் அவர்கள் ரியாத் காயல் நலமன்றம் (RKWA) வின் திட்டங்கள் சிறப்பாக இருப்பதாககும் , நமதூருக்கு தேவையான காரியங்களை செய்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் , கல்விக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இது போல நல்ல பணிகளை தொடர்ந்து செய்திட வேண்டும் என்றும் கூறினார்.
இக்கூட்ட ஒருங்கினைப்பாளர்கலான, MEL நுஸ்கி , வெள்ளி சித்தீக், சதக்கத்துல்லாஹ் மற்றும் சுலைமான் சபீக் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது.
இறுதியாக செய்து இப்ராஹிம் இர்ஷாத் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பாக இடவசதி செய்து தந்த MEL நுஸ்கி அவர்கள் மற்றும் அனுசரனையாளர்களுக்கும் நன்றி நவில சகோதரர் நயீமுல்லாஹ் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் காயல் நல மன்றத்திற்காக...
தகவல்:
ஊடகக் குழு
செய்தியாக்கம்:
M.N.முஹம்மத் ஹஸன்
படங்கள்:
செய்யித் இப்றாஹீம் இர்ஷாத் &
S.A.C.அஹ்மத் ஸாலிஹ்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (52ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |