ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் சார்பில், வரும் 25.03.2016. வெள்ளிக்கிழமையன்று “காயலர் தினம் - 2016” எனும் தலைப்பில் காயலர் சங்கம நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மார்ச் 25 வெள்ளியன்று “காயலர் தினம் 2016” கொண்டாடுவது என்று துபை காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 04.03.2016 வெள்ளியன்று மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் 2016 காயலர் தினத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு மூத்த செயற்குழு உறுப்பினர் நூஹு ஸாஹிப் அவர்கள் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ் அவர்கள் கிராஅத் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். “காயலர் தினம் 2016” நடத்துவதற்கான இடம், உணவு, வாகனங்கள், நடத்தப்பட வேண்டிய விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை விவாதிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
காயலர் தினம் நடப்பது குறித்த அறிவிப்பை நமதூர் இணையதளங்கள் மூலம் அனைத்து அமீரக காயலர்களுக்கும் தெரியப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமீரகவாழ் காயலர்களுக்கும் துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அன்புள்ளம் கொண்ட துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அமீரகவாழ் காயலர்களுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் மார்ச் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் வழமை போல் ஸத்வாவில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் வைத்து காலை 10 மணி முதல் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பொதுக்குழுக் கூட்டம் "காயலர் தினம் 2016" எனக் கொண்டாடப்படுவதால் இந்த நிகழ்வில் ஓன்றுகூடல், சாப்பாடு மற்றும் பெரியோர்-சிறார்கள் விளையாட்டு கேளிக்கைகள் நிகழ்ச்சிகள் மட்டுமே காணப்படும். வழமை போல் பொதுக்குழுக் கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் தாங்களும் குடும்பத்தார்கள் மற்றும் காயல் நண்பர்கள் சூழ வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பிப்பதோடு நமது நலமன்றம் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடவும் உளமாற உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
வருகை புரிவோரை வரவேற்கவும் திட்டமிட்ட உணவு ஏற்பாடுகளும் மற்றும் விளையாட்டு நிகழ்சிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய அதிகமான தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் தேவைப்படுவதால், தயவு செய்து தாங்களாகவே முன் வந்து மன்றத்தின் பொது தொடர்பாளர் சகோதரர் ஈசா அவர்களை அலைபேசி எண் 055-4063711 க்கு தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இக்கூட்டத்திற்கு முற்கூட்டியே வருகை புரிவோரை ஊக்குவிக்கும் பொருட்டு கூட்ட நிகழ்விடத்திற்கு காலை 10 மணிக்குள் வருவோருக்கும், அதன் பின் ஜும்ஆவுக்கு முன் வருவோருக்கும், அதன் பின் ஜும்ஆவுக்குப் பின் வருவோருக்கும் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படும். அதே போன்று தன்னார்வத் தொண்டர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித் தனியே குலுக்கல் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு ஆகக் கூடிய செலவு வகைகளுக்கு வழக்கம் போல துபை காயல் நல மன்ற உறுப்பினர்களே தாமாக முன் வந்து தாராளமாக பொருள் உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இது சம்பந்தமாக சகோ. TAS மீரா சாஹிப் அவர்களுக்கு அலைபேசி எண் 050-4559791க்கு தொடர்பு கொள்ள வேண்டியது.
வழக்கம் போல முதீனா லுலு சென்டருக்குப் பின்புறம் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாக 8.30 மணிக்கு முதல் வாகனமும்,
9.30 மணிக்கு இரண்டாவது வாகனமும் அங்கிருந்து புறப்படும். இது சம்பந்தமாக சகோ. முத்து முஹம்மது அவர்களை அலைபேசி எண் 050-8104842க்கு தொடர்பு கொள்ள வேண்டியது.
ஸஃபா பார்க் பகுதியில் மராமத்து வேலைகள் நடந்து வருவதால், வாகனங்களில் வரக்கூடிய சகோதரர்கள் முற்கூட்டியே வரும் பட்சத்தில் பார்க் அருகிலேயே கார்களை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அப்படி கிடைக்காத பட்சத்தில், ஸஃபா பார்க்குக்கு எதிரிலுள்ள மஸ்ஜிதின் பின்புறத்திலும், அதைத் தாண்டியும் வாகனங்களை நிறுத்த நிறைய வசதி இருக்கிறது. ஷேக் ஜெயத் (Shaikh Zayed) ரோடு வழியாக வந்தால் பார்க் கேட் நம்பர் 2 பக்கம் வருவது மிகவும் இலகுவாக இருக்கும். தேராவிலிருந்து RTA பேருந்துகளில் வரக்கூடியவர்கள், பேருந்து எண் 12 ஐ பயன்படுத்திக்கொள்ளவும்.
ஸஃபா பார்க்கிலிருந்து ஜும்ஆ தொழுகைக்காக மஸ்ஜிதுக்குச் செல்வதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. சாலையில் நடைபாதை மேம்பாலத்தையும் (Pedestrian Footbridge), பார்க்கையும் இணைக்கும் ஒரு சிறிய கேட் வழியாக சென்றால் மஸ்ஜிக்கு சிரமமில்லாமல் செல்லலாம் என்றும் அறியத்தருகிறோம்.
தங்களின் மேலான நல் ஆதரவை என்றும் நாடுகிறோம்...
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபையிலிருந்து...
தகவல் & படங்கள்:
M.S.அப்துல் ஹமீத்
துபை காயல் நல மன்றம் சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட “காயலர் தினம்” ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|