காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் குப்பைகள் கொட்டவும், பயோ காஸ் திட்டம் அமைக்கவும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 25 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் - அவ்விடங்களில், அப்பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி (ENVIRONMENTAL CLEARANCE - EC) தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தீர்ப்பினை தொடர்ந்து - சர்வே எண் 278 இடத்தில், உடனடியாக குப்பைகளை கொட்ட காயல்பட்டினம் நகராட்சி துவங்கியது.
MUNICIPAL SOLID WASTE RULES 2000 விதிமுறைகள் எதனையும் பின்பற்றாமல், குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியை சார்ந்த எஸ்.பவுல் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் - தேசிய பசுமை தீர்ப்பாயம் - மார்ச் 7 அன்று ஆணைப் பிறப்பித்தது.
அதில் - "பசுமை தீர்ப்பாயத்தின் ஜனவரி 25 ஆணையை பயன்படுத்தி, விதிமுறைகள் எதையும் பேணாமல், சர்வே எண் 278/1B இடத்தில - குப்பைகளை - காயல்பட்டினம் நகராட்சி கொட்டி வருகிறது என மனு தாரர் தெரிவித்துள்ளார். எனவே - அடுத்த ஆணை பிறப்பிக்கப்படும் வரை, அங்கு குப்பைகள் கொட்ட இடைக்கால் தடை விதிக்கப்படுகிறது.
எதிர் மனுதாரர்கள் (காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்), இரு வாரங்களில் தங்கள் பதிலை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்து, அதன் நகலை - மனுதாரரின் வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும். எதிர் மனுதாரர்களின் பதிலுக்கு - மனுதாரர் விரும்பினால், அதை தொடர்ந்து ஒரு வாரத்தில், பதில் வழங்கலாம் . வழக்கு மீண்டும் ஏப்ரல் 4 அன்று விசாரணைக்கு வரும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரருக்காக வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதாடினார். நகராட்சி சார்பாக வழக்கறிஞர் அப்துல் சலீம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் அழகம்பெருமாள் ஆகியோர் மனுவினை பெற்றுக்கொண்டனர். |