நகரில் தொடர்ந்து ஆவணப்படங்களை திரையிட்டு வரும் எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் கடந்த மார்ச் 5 சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் பிரதான சாலையில் உள்ள துஃபைல் வணிக வளாக ஹனியா சிற்றரங்கில் 6 ஆவது ஆவணப்பட திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பிரபல ஆவணப்பட இயக்குனர் ஆர்.பி.அமுதன் இயக்கிய “ கதிர் வீச்சுக்கதைகள் - பகுதி 1 – மணவாளக்குறிச்சி ” ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஆர்வலர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
உலகில் கனிமங்கள் நிரம்பியுள்ள மணலின் மொத்த இருப்பு தோராயமாக 460 மில்லியன் டன். இதில் 278 மில்லியன் டன் இந்தியாவில் உள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மணலில் கார்னெட், இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மேனோசைட், தோரியம் ஆகிய கனிமங்கள் புதைந்துள்ளன.
இது முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1905-ல் கண்டறியப்பட்டு அதன் பின் 1910-ல் சில தொழிற்சாலைகள் ஜெர்மானியர்களால் இங்கு அமைக்கப்பட்டு கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1914-ல் துவங்கிய முதலாம் உலகப் போரையொட்டி பிரிட்டிஷ் அரசு ஜெர்மானியர்களைக் கைது செய்துவிட்டு, தானே கம்பெனிகளை எடுத்து நடத்தியது.
பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இத்தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்படவே இந்திய அரசே இவற்றை முன்னின்று நடத்தி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமமான மணவாளக்குறிச்சியில் இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அரிய மணல் ஆலை (Indian Rare Earths Limited – IREL) என்ற பொதுத்துறை நிறுவனத்தின் கனிமப் பிரிவு செயல்பட்டு வருகின்றது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு சில தனியார் நிறுவனங்கள் இத்தொழிலில் அனுமதிக்கப்படவே, நிறுவனங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு இன்று பெருமளவு கனிம ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றன.
தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென் தமிழக கடற்கரைப் பகுதியில் பல லட்சம் ஆண்டுகளாய் இயற்கை சேர்த்து வைத்திருந்த அரிய வகைக் கனிமங்கள் நிரம்பிய மணல் தாதுவை அள்ளி தொழிற்சாலைகள் மூலம் கார்னெட், இல்மனேட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட் ஆகிய தனித்தனி கனிமங்களாகப் பிரித்து, அவற்றை தூத்துக்குடி துறைமுகம் வழியாக கொரியா, அபுதாபி, ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் டி.சி.டபிள்யூ . வேதியியல் ஆலையும் இங்கிருந்துதான் கதிர்வீச்சு நிறைந்த இல்மனைட் வாங்குகின்றது.
இப்பகுதியில் ஆல்பா, பீட்டா, காமா கதிர்வீச்சு உள்ளது. மணவாளக்குறிச்சியிலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் பெரும்பாலும் பரதவ குல மீனவர்களே வசித்து வருகின்றனர். இவர்கள்தான் இந்திய அரிய மணல் ஆலைக்கு தேவையான தாது மணலை கடற்கரையில் இருந்து கூலிக்காக அள்ளி வருகின்றனர். அதன் விளைவாக இவர்களை பெருமளவில் கதிர்வீச்சு தாக்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இங்கு வசிக்கும் மீனவர்கள் உடல் உறுப்புக்குறைபாடுகள், மூளை வளர்ச்சிக் குறைபாடுகள், நரம்பு மண்டலக் குறைபாடுகள், தோல் நோய்கள், அனைத்து வகையான புற்று நோய்களினால் பாதிக்கப்பட்டுளனர்.
---- பிறப்பு உறுப்பில் சில செ.மீ. அளவிற்கு குழாய் இல்லாததால் தனது வாழ்க்கையை இழந்த சிறுமி
---- ஒரு சொட்டு சிறு நீரை படுக்கையில் இருந்தவாறே கழிப்பதற்கும் கூட பிறர் உதவி தேவைப்படும் முதியவர்
---- மர உத்திரம் போல வலிமையான கட்டுடலை பெற்றுள்ள கடும் உழைப்பாளிகளான மீனவர்களைக் கூட கையறு நிலையில் படுக்கையில் தள்ளிய கதிர்வீச்சு நோய்களின் தாண்டவம்
---- வாழ் நாள் சேமிப்பும் அழிந்து உடைமைகளையும் இழந்து வட்டிக்கு கடன் வாங்கி செலவழித்த பிறகும் சாவின் பிடியிலிருந்து தப்ப முடியா அவலம்
---- தங்களின் வாழ்வை பறித்தது எது ? என்ற கேள்விக்கு கடவுளா ? மண் அள்ளுதலா ? கதிரியக்கமா ? புற்று நோயா ? கேள்விக்கான விடை இவைகளில் எதில் அடங்கியுள்ளது என்பதைக்கூட பிரித்தறிய முடியாத அந்த மக்களின் அறியாமையா ? என்ற பெருங்கேள்விகளை இந்த ஆவணப்படம் எழுப்பியது.
|