திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதுக்காதி திடலில், 05.03.2016. சனிக்கிழமையன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கட்சியின் மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.அப்துல் காதிர் தலைமை தாங்கினார். இளைஞரணி நகர அமைப்பாளர் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார். ஆர்.எஸ்.கோபால், ஆர்.எஸ்.கணபதி, தங்கம் கஸ்ஸாலி, பாலப்பா அப்துல் காதிர், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் உட்பட பலர் கருத்துரையாற்றினர்.
திமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கடந்த 5 ஆண்டுகளாக, அதிமுக ஆட்சி மாநிலத்தில் எந்த வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளாத - கையாலாகாத ஆட்சியாகவே இருந்துள்ளதாகக் கூறிய அனிதா, காயல்பட்டினம் USC, KSC விளையாடடு மைதானங்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்தார்.
திமுக மாநில செய்தித் தொடர்புத்துறை இணைச் செயலாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
தமிழகத்தின் நடப்பு அரசியல் நிலையை விளக்கிப் பேசிய அவர், அதிமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்படுவதாகவும், மக்களுக்கு நன்மை செய்வதற்காக திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்குமாறும் கூறினார்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய எஸ்.ஏ.கே.ஜலீல் நன்றி கூறினார். முன்னதாக, அன்று மாலையில், கலைமாமணி இறையன்பன் குத்தூஸ் - திமுக கொள்கை விளக்கப் பாடல்களைப் பாடி, இன்னிசை கச்சேரி நடத்தினார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, காயல்பட்டினத்தில் நடைபெறும் முதல் அரசியல் பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
S.E.முஹம்மத் நூஹ்
படங்கள்:
இப்னு ஆப்தீன்
திமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|