சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தமிழக
தேர்தல் களத்தில் புதிய திருப்பமாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணியும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்ததும்
கவனிக்கத்தக்கது.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தேமுதிக மகளிரணி பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று
(வியாழக்கிழமை) நடந்தது.
இதில் விஜயகாந்த் பேசும்போது, "நான் உளறுவதாக சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். விஜயகாந்துக்கு பேசத் தெரியாது பணம் வாங்குகிறார்?
சீட்டு நிறைய கேட்குறாரா? என்று சொல்கிறார்கள். கூட்டணி பற்றி பேசுவாரா? சொல்லாவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்?
காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், நான் கிங் ஆக இருப்பதா? அல்லது கிங் மேக்கராக இருப்பதா என்று தொண்டர்களைக் கேட்டேன். உங்களுக்கே
தெரியும். கிங்காக இருக்க வேண்டும் என்றே அனைவரும் சொன்னார்கள். இப்போது அதே கேள்வியை மகளிரணியான உங்களிடமும் கேட்கிறேன்.
நீங்களும் கிங் என்றே சொல்கிறீர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேர்தல் பணிகள் இனி தீவிரமாக நடைபெறும். அனைவரும் பத்திரமாக வீட்டுக்குச்
செல்லுங்கள்'' என்று விஜயகாந்த் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா, ''கூட்டணிக்கு அழைப்பு விடுத்த கட்சிகளுக்கு நன்றி. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய
ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு இனி பரபரப்பாக இயங்கும்'' என்று பேசினார்.
மேலும், "திமுக, அதிமுகவுக்கு மாற்றாகவே தேமுதிக உருவானது. எனவே, தமிழகத்தில் மாற்றுக் கட்சியாக தேமுதிக ஆட்சியமைக்கும்" என்றார்
அவர்.
விஜயகாந்த் பேசியது புரியாதது ஏன்?
முன்னதாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், "திமுக என்றாலே தில்லுமுல்லு. அதிமுக என்றாலே அனைத்திலும் தில்லுமுல்லு" என்று இரு
கட்சிகளையும் கடுமையாக சாடினார்.
விஜயகாந்த் பேச்சு குறித்து அவர் விளக்கம் அளித்தபோது, "விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்கிறார்கள். விஜயகாந்துக்கு சைனஸ் இருக்கிறது.
மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு இருக்கிறது. சிவாஜிக்குப் பிறகு பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர் விஜயகாந்த். தொண்டையில் ஸ்டாம் செல்
பிரச்சனை அவருக்கு இருக்கிறது'' என்றார் பிரேமலதா.
தகவல்:
தி இந்து
|