காயல்பட்டினம் தீவுத்தெரு - ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், நடப்பாண்டு குடியரசு நாளை முன்னிட்டு, 26.01.2016. அன்று விழா நடைபெற்றது.
பள்ளி ஆசிரியை த.தனபாய் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா விழாவிற்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.
தொடர்ந்து, பள்ளியின் முதல் வகுப்பு முதல் 05ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியரின் பங்கேற்பில், நாடகம், குழுப்பாடல், தனிப்பாடல், உரைகள், நடனம் என பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெற்றோர் சார்பில், எஸ்.கே.ஸாலிஹ் உரையாற்றினார். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்திப் பேசினார்.
நடப்பு கல்வியாண்டுடன் பணி நிறைவு பெறும் தலைமையாசிரியைக்கு நன்றி தெரிவித்த அவர், எல்லாப் பள்ளிகளிலும் விடுதலை நாள், குடியரசு நாள் விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்க, இப்பள்ளியில் மட்டும் பொருளாதாரத்தைக் காரணங்காட்டி இத்தனை நாட்கள் நடத்தாமல் விட்டது மிகவும் மனவருத்தத்தைத் தந்ததாகவும், இனி ஆண்டுதோறும் இதுபோன்ற விழாக்களை நடத்தி - பள்ளி மாணவ-மாணவியருள் மறைந்திருக்கும் திறமைகளை அரங்கேற்ற வேண்டும் என்றும், அதற்குப் பொருளாதாரம்தான் தடையென்ற நிலை ஏற்பட்டால், நல்லோர்கள் ஒத்துழைப்புடன் விழாக்களை நடத்திட தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
தூத்துக்குடி கல்வி மாவட்டத்தின் ஆசிரியர் பயிற்றுநர் கீதா இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவியரை வாழ்த்தி உரையாற்றினார்.
கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும், இவ்விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவியருக்கும் சிறப்புப் பரிசுகளும், அனைத்து மாணவ-மாணவியருக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அவையோர் அப்பரிசுகளை வழங்கினர்.
பள்ளி தலைமையாசிரியை ஏசுவடியாள் பொன்னம்மாள் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. இவ்விழாவில், பள்ளியின் மாணவ-மாணவியர், அவர்களின் பெற்றோர், கல்வி ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியையர் இணைந்து செய்திருந்தனர்.
தீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|