வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள - சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திருக்குர்ஆன் வினா-விடைப் போட்டியில், மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், இன்ஷாஅல்லாஹ் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, திருக்குர்ஆன் வினா-விடைப் போட்டி, திருக்குர்ஆன் மனனப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் பலவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் வினா-விடைப் போட்டி:
அதன்படி, திருக்குர்ஆன் வினா-விடைப் போட்டி, 13.03.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணியளவில், மன்ற அலுவலக வளாகத்தில், மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமையில் நடைபெற்றது.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மன்றத்தின் சார்பில் நடைபெறும் திருக்குர்ஆன் மனன மீளாய்வு வகுப்புகளில் அங்கம் வகிக்கும் - மன்றத்தின் ஹாஃபிழ் உறுப்பினர்கள் இப்போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கான கேள்விகளை, மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் முற்கூட்டியே ஆயத்தம் செய்து வைத்திருந்தார். பங்கேற்பாளர்களும், போட்டியாளர்களும் குறித்த நேரத்தில் நிகழ்விடம் வந்தடைந்தனர். அவர்களுக்கு துவக்கமாக காலை உணவு பரிமாறப்பட்டது.
பங்கேற்றோர்:
போட்டியில் பங்கேற்ற - திருமறை குர்ஆனை மனனம் செய்துள்ள 8 ஹாஃபிழ் உறுப்பினர்கள், அணிக்கு இருவர் வீதம் பின்வருமாறு நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டனர்:-
(1) ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் & ஹாஃபிழ் எம்.ஐ.அபூபக்கர் ஸித்தீக்
(2) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் & ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம்
(3) ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப் & ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
(4) ஹாஃபிழ் ஏ.எம்.செய்யித் அஹ்மத் & ஹாஃபிழ் கே.ஷாஹுல் ஹமீத் பாதுஷா
கேள்வி வகைகள்:
லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டி 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் பின்வரும் வகைப்படி திருமறை குர்ஆனிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன:-
(01) தர்தீல் - நடுவர் சுட்டும் பகுதியை ஓதல்
(02) மா கப்ல் – கேட்கப்படும் வசனத்தின் முந்திய வசனத்தை ஓதல்
(03) கேட்கப்படும் ஒரு ஜுஸ்உவின் கடைசி வசனத்தை ஓதல்
(04) கேட்கப்படும் ஒரு அத்தியாயத்தின் கடைசி வசனத்தை ஓதல்
(05) கேட்கப்படும் ஒரு வசனத்தை கட்டாயம் நிறுத்த வேண்டியதன் அவசியத்தைக் கூறல்
(06) ஒரே மாதிரியாக இடம்பெறும் வசனங்களை ஓதி, அது எங்கு இடம்பெறுகிறது என்பதைக் கூறல்
(07) ஸ்க்ரீன் ஷாட் முறையில் காண்பிக்கப்படும் சிறு பகுதியைப் பார்த்து, அந்த வசனத்தை முழுமையாக ஓதல்
(08) அடுத்தடுத்து இரண்டு வசனங்களின் துவக்கம் கூறப்பட, அவ்வசனங்களை முழுமையாக ஓதல்
(09) அடுத்தடுத்து இரண்டு வசனங்களின் முடிவு கூறப்பட, அவ்வசனங்களை முழுமையாக ஓதல்
(10) ஒரு வசனத்தின் துவக்கம், அதன் மூன்றாம் அல்லது நான்காம் வசனத்தின் துவக்கம் கூறப்பட, அவ்வனைத்து வசனங்களையும் முழுமையாக ஓதல்
(11) ஒரு வசனத்தின் முடிவு, அதன் மூன்றாம் அல்லது நான்காம் வசனத்தின் முடிவு கூறப்பட, அவ்வனைத்து வசனங்களையும் முழுமையாக ஓதல்
(12) ஒரு வசனத்தின் ஓரே மாதிரியான இரு சொற்கள் கூறப்பட, அவ்வசனத்தை ஓதல்
(13) அடுத்தடுத்து வரும் இரு வசனங்களின் ஒரே மாதிரியான இரு சொற்கள் கூறப்பட, அவ்விரு வசனங்களையும் ஓதல்
(14) ஐந்து வசனங்களைக் கொண்ட தொகுதியில், நான்கு வசனங்களின் முடிவு கூறப்பட, விடுபட்ட ஒரு வசனத்தை ஓதல்
(15) சிறிய அளவிலான வசனத்தின் துவக்கம் கூறப்பட அவ்வசனத்தை ஓதல்
(16) சிறிய அளவிலான வசனத்தின் முடிவு கூறப்பட அவ்வசனத்தை ஓதல்
(17) “யா அய்யுஹல்லதீன ஆமனூ” என்று துவங்கும் வசனங்களின் தமிழாக்கம் கூறப்பட, அவ்வசனத்தை ஓதல்
(18) பிரார்த்தனை அடங்கிய வசனத்தின் தமிழாக்கம் கூறப்பட, அவ்வசனத்தை ஓதல்
(19) சிறு வசனம் கூறப்பட, அது இடம்பெறும் அத்தியாயம், ஜுஸ்உவைக் கூறல்
(20) இரண்டு அல்லது மூன்று சிறு வசனங்கள் கூறப்பட, அவை இடம்பெறும் அத்தியாயம், ஜுஸ்உவைக் கூறல்
(21) முதல் வசனத்தின் முடிவும், இரண்டாம் வசனத்தின் துவக்கமும் கூறப்பட, அவ்விரு வசனங்களையும் ஓதல்...
இந்த அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இப்போட்டியில், பங்கேற்பாளர்களுக்கு மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணியை எஸ்.எச்.உதுமான், துறை வாரியாக ஒவ்வோர் அணிக்கும் கேள்விகளை எடுத்தளிக்கும் பணியை எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் ஆகிய மன்ற உறுப்பினர்கள் அழகுற செய்தனர்.
அஸ்ர் தொழுகை நிறைவடைந்ததும், அனைவருக்கும் தேனீர் - காஃபீ - சிற்றுண்டி பரிமாறப்பட்டது. போட்டி நிகழ்வுகள் அனைத்தும் 18.30 மணி வரை நடைபெற்றது.
போட்டிக்காக பல நாட்களாக ஆயத்த முயற்சிகளை மேற்கொண்டு, அனைத்து சுற்றுகளிலும் போட்டியாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றமையும், அனைத்து நிகழ்வுகளையும் பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்தமையும் குறிப்பிடத்தக்கவை.
பரிசுக்குரியோர்:
இப்போட்டியில்,
ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் & ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம் அணி முதலிடத்தையும், ஹாஃபிழ் ஏ.எம்.செய்யித் அஹ்மத் & ஹாஃபிழ் கே.ஷாஹுல் ஹமீத் பாதுஷா அணி இரண்டாமிடத்தையும் பெற்றன.
போட்டியின்போது, ஓரணிக்குக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவ்வணி விடையளிக்கத் தவறுகையில், அக்கேள்வி இதர போட்டியாளர்களுக்கு விடப்பட்டது. அதில், சிறந்த விடைகளை அளித்து ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் முதலிடம் பெற்றார்.
விடையளிக்கப்பட்ட விபரம்:
போட்டி & பங்கேற்பு விபரங்கள் வருமாறு:-
கேட்கப்பட்ட மொத்த கேள்விகள் 264
விடையளிக்கப்பட்டவை 235
அணியல்லாது தனியாக விடையளிக்கப்பட்ட கேள்விகள் 22
விடையளிக்கப்படாத கேள்விகள் 7.
மொத்தத்தில், 97 சதவிகித கேள்விகளுக்கு போட்டியாளர்கள் சரியான விடையளித்துள்ளனர். அனைவரின் ஆர்வத்திற்கும் தீனி போட்ட இந்நிகழ்வு, போட்டியாளர்களுக்கும் - பார்வையாளர்களுக்கும் நீங்கா நினைவுகளைத் தருபவை என்றால் அது மிகையாகாது.
முதல் - இரண்டாமிடங்களைப் பெற்ற அணியினருக்கு, 09.04.2016. அன்று நடைபெறவுள்ள மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளன. திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டி, 03.04.2016. அன்று நடைபெறவுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கை கா.ந.மன்றம் சார்பில் கடந்தாண்டு வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்பட்ட திருக்குர்ஆன் வினா-விடைப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |