காயல்பட்டினம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, தற்போது முதலாமாண்டைப் பூர்த்தி செய்துள்ளது மக்தபா கதீஜா. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியருக்கு திருமறை குர்ஆனை ஓதவும், மார்க்க சட்டதிட்டங்களைப் பயிற்றுவிக்கவும் இந்த மத்ரஸா இயங்கி வருகிறது.
இதன் முதலாமாண்டு நிறைவு விழா, 13,14-02-2016. நாட்களில் (சனி, ஞாயிறு) மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வெளிப்பகுதி சாலையில் அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்றது.
முதல் நாளன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியின் தலைவர் பீ.எம்.புகாரீ தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். மக்தபா கதீஜா மத்ரஸாவின் நிறுவனர் டீ.எம்.என்.முஹம்மத் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், மத்ரஸா குறித்து அறிமுகவுரையாற்றினார்.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழல் பாக்கவீ, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவியருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து, மத்ரஸா மாணவ-மாணவியரின் பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மறுநாள் நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்ச்சியை, மாணவர் டீ.ஆஷிக் அஹ்மத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மக்தப் ஆசிரியர் என்.எம்.அப்துல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய - ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, தலைமையுரையாற்ற, அவரைத் தொடர்ந்து - காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற / வென்ற மாணவ-மாணவியருக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
நன்றியுரையைத் தொடர்ந்து, துஆ - ஸலவாத்துடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. |