காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு குறித்து விளக்குவதற்கான - நகரின் அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊல நலக் கமிட்டிகள், அரசியல் கட்சிகள், பொதுநல - சமுதாய அமைப்புகள் கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்திட விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு - கடந்த பிப்ரவரி 15 அன்று வெளியானது.
இத்தீர்ப்பு குறித்து விளக்ககளிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை செய்யவும் - காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நல குழுக்கள், அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம், 05.03.2016. சனிக்கிழமையன்று 11.00 மணியளவில், காயல்பட்டினம் பிரதான வீதியில் ஹாஜியப்பா தைக்கா பள்ளி எதிரில் அமைந்துள்ள துஃபைல் வணிக வளாகத்தின் ஹனியா சிற்றரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.சதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா - தலைமை தாங்கினார். அமைப்பின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ - இறைமறையிலிருந்து சில வசனங்களை ஓதி துவக்கி வைத்ததோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து KEPA அமைப்பின் தலைவர் சுருக்கமாக விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, KEPA அமைப்பின் இணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், வழக்கு விபரங்களை விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது. நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
(1) DCW தொழிற்சாலைக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ள கட்டுமான அனுமதிகளை ரத்து செய்யக் கோரி, ஏகமனதாக காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை - இதுவரை நடைமுறைப்படுத்தாத, நகராட்சி ஆணையரை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் காலதாமதம் செய்யாமல், அத்தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(2) 1998ஆம் ஆண்டு வெளிவந்த தமிழக அரசின் அரசாணைப் படி, தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிற்குள், புதிதாக தொழிற்சாலைகள் துவக்கப்படக் கூடாது. காயல்பட்டினம் எல்லையில் அமைந்துள்ள DCW தொழிற்சாலைகள், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது என தெளிவான ஆதாரங்கள் உள்ளன. இருப்பினும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தத் தொலைவை - நவீன தொழில்நுட்பம் மூலம் அளவிட, அத்தொழிற்சாலைக்கு இதுவரை உத்தரவிடவில்லை. எனவே - உடனடியாக, DCW தொழிற்சாலை, தாமிரபரணி ஆற்றின் கரையோரத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என நவீன தொழில்நுட்ப உதவியிலான ஆய்வறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(3) திருச்செந்தூர் தாலுகா தாசில்தார் - தாமிரபரணி ஆற்றில் இருந்து 5.2 கிலோமீட்டர் தொலைவில்தான் DCW தொழிற்சாலை உள்ளது என வழங்கிய பொய்யான சான்றிதழை DCW தொழிற்சாலை சமர்ப்பித்து, அதன் அடிப்படையில், அத்தொழிற்சாலைக்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் - தவறான தகவல்கள் அடிப்படையில் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான ஒப்புதல்களையும் ரத்து செய்யவும், அவ்வாறு தவறான சான்றிதழ் வழங்கிய திருச்செந்தூர் தாலுகா தாசில்தார் மீதும், அந்த தவறான தகவல் அடிப்படையில் ஒப்புதல் வழங்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(4) DCW தொழிற்சாலையினால் - கடந்த 58 ஆண்டுகளாக சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து - சுயேட்சையான குழுவைக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள, அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(5) DCW தொழிற்சாலையின் மாசுவினால் - சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றக்கணக்கான மக்கள் புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். காயல்பட்டினம் உட்பட சுற்றுப்புறத்தில் உள்ள ஆறுமுகநேரி, ஆத்தூர், புன்னைக்காயல், சேர்ந்தமங்கலம் உட்பட அனைத்து பகுதிகளிலும், சுயேட்சையான மருத்துவ குழுக்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள, அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(6) இக்கோரிக்கைகளை மனுவாக - சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் - நேரடியாக வழங்கவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.
(7) இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது
(8) இக்கோரிக்கைகள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிடில், அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊர் நல குழுக்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் புறக்கணிப்பு உட்பட - ஜனநாயக ரீதியான அனைத்து வழிகளிலும் போராட்டங்கள் நடத்துவது குறித்து கலந்தாலோசனை செய்திடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், SDPI தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எச்.ஷம்சுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள், தேமுதிக நகர தலைவர் எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|