காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில், அப்பா பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள ஸாம் ஷிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் தர்ஹா பூட்டப்பட்டுள்ளதாக, திருநெல்வேலியைச் சேர்ந்த ஹாஜா என்பவர், 24.02.2016. அன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திடம் புகார் வழங்கியதாகத் தெரிகிறது. அதனடிப்படையில், மறுநாள் 25.02.2016. அன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் திருநெல்வேலி மண்டல மேற்பார்வையாளர் (பொறுப்பு), தர்ஹாவைத் திறக்க உத்தரவு பிறப்பித்ததாகவும் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (06.03.2016. ஞாயிற்றுக்கிழமை) 13.00 மணியளவில், தர்ஹாவைத் திறக்க ஆதரவு தெரிவிப்போர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் துணையுடன் - அப்பாபள்ளிக்கு வந்தனர். தமிழ்நாடு வக்ஃப் வாரியம் வழங்கிய உத்தரவை மேற்கோள்காட்டி, தர்ஹாவைத் திறக்குமாறு பள்ளி நிர்வாகிகளிடம் அவர்கள் கோரினர்.
வக்ஃப் வாரியத்தின் உத்தரவு - பள்ளி நிர்வாகத்திடம் முறையான விசாரணை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளி நிர்வாகிகள் சார்பாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு சில மணி நேரங்கள் பதட்டம் நிலவியது.
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெ.கோபால் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து,
(1) தனியாகச் சென்று ஜியாரத் செய்யலாம்
(2) கூட்டாகச் சென்று எந்த வழிபாடும் செய்யக்கூடாது
(3) நிர்வாகத்தின் அனுமதியின்றி கந்தூரி விழா நடத்தக்கூடாது
ஆகிய நிபந்தனைகள் எழுதப்பட்டு, அப்படிவத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்ட பின்பு தர்ஹா திறக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் கலைந்து சென்றது.
திருச்செந்தூர் வட்டாட்சியர் சங்கர நாராயணன், துணை வட்டாட்சியர் ரகு, காயல்பட்டினம் தென்பாக கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) வேல்ஜோதி, ஆத்தூர் காவல்துறை ஆய்வாளர் விஜயகுமார், ஆறுமுகநேரி காவல் துணை ஆய்வாளர் ரகு, மகளிர் காவல் துணை ஆய்வாளர் ஆதிலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் இதன்போது உடனிருந்தனர். |