சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், உள்நாட்டிலும் உதவிடும் அதன் திட்டத்தின் கீழ் - சிங்கப்பூரிலுள்ள முஹம்மதிய்யா தொண்டு இல்லத்தில் உணவுப் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகக் குழுவினரும் - சிங்கப்பூர் பெடோக்கிலுள்ள முஹம்மதிய்யா தொண்டு இல்லம் சென்று, அங்கு பயிலும் 60 மாணவர்களின் அன்றாடத் தேவைகளைக் கேட்டறிந்து வந்தனர்.
அதன்படி, மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் தலைமையில், எம்.எச்.உமர் ரப்பானீ, எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல், எம்.எம்.மொகுதூம் முஹம்மத், எம்.ஆர்.ரஷீத் ஜமான் ஆகியோரடங்கிய குழுவினர், செயற்குழு உறுப்பினர்களின் தன்னார்வப் பங்களிப்புத் தொகையைக் கொண்டு, தொண்டு இல்லத்தின் காலை உணவுக்குத் தேவையான பொருட்கள், பழ வகைகளைக் கொள்முதல் செய்தனர்.
அப்பொருட்களை, 05.03.2016. சனிக்கிழமையன்று 11.00 மணியளவில், மன்றத்தின் ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன், செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய், துணைத்தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் தொண்டு இல்லத்திற்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்த தொண்டு இல்ல நிர்வாகிகள், இதுபோன்ற தன்னார்வத்துடன் கூடிய உதவிகளைத் தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். தம்மாலியன்ற உதவிகளை இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கு இனி வருங்காலங்களில் தொடர்ந்து செய்வதாக அவர்களும் வாக்களித்துத் திரும்பினர்.
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|