காயல்பட்டினத்தில், அடையாளம் தெரியாத சிலர், நகரின் பல தெருக்களில் வீடு வீடாகச் சென்று நேற்றும், இன்றும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு எனும் கேள்வியை உள்ளடக்கிய அவர்களின் கருத்துக் கணிப்பு படிவத்தில், கருத்துக் கூறுபவரின் பெயர், கைபேசி எண் உள்ளிட்ட சுய விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இன்று காலையில் காயல்பட்டினம் அலியார் தெருவில் அவர்கள் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, SDPI கட்சியின் நிர்வாகிகள் இதனைக் கண்ணுற்று அவர்களிடம் விபரம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் தகவல் கூறியதாகத் தெரிகிறது.
சந்தேகம் வலுக்கவே, ஆறுமுகநேரி காவல் அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு அவர்கள் நடப்பைத் தெரிவித்ததையடுத்து, தேர்தல் கண்காணிப்பு காவல்துறையினர் முஹ்யித்தீன் தெரு - ஹாஜியப்பா தைக்கா பள்ளிவாசல் அருகில் கருத்துக் கணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவர்களை ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், சீர்காழி தாலுகா காத்திருப்பு என்ற ஊரைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ஏ.இளையராஜா (வயது 33), அதே ஊரைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் டீ.இளையராஜா (வயது 27), காரைக்கால் நிரவியைச் சேர்ந்த வீராச்சாமி என்பவரின் மகன் சரவணன் (வயது 33), கோவில்பட்டியைச் சேர்ந்த வி.முருகன் என்பவரது மகன் வேலுச்சாமி ஆகியோர் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தாமதமாகக் கிடைத்த தகவலின் படி, அவர்கள் அனைவரும் புகழ்பெற்ற தனியார் டீவி ஒன்றுக்காக கருத்துக் கணிப்பில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. ஆனால் அதுகுறித்த எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை என்பதோடு, காவல்துறையினர் விசாரித்தபோதும் அவர்கள் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|