இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், “உள்ளாட்சியில் நல்லாட்சி” பிரகடனப் பொதுக்கூட்டமும், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எனும் தகுதியைப் பெற்றுள்ளமைக்காக - அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கருக்கு பாராட்டு விழாவும், 05.08.2016. வெள்ளிக்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றுள்ளது. இதில் திரளானோர் பங்கேற்றுள்ளனர்.
காயல்பட்டினத்தில் 05-08-2016 வெள்ளிக்கிழமை வள்ளல் சீதக்காதி திடலில் மாபெரும் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நடைபெற்றது. காயலின் முதல் சட்டமன்ற உறுபினர், அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் முகமாகவும், உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற முஸ்லிம் லீக் பிரகனடத்தை வெளியிடும் நோக்குடனும் இக்கூட்டம் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்கார் தலைமை ஏற்ற இக்கூட்டத்தில், நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை பொறுப்பு வகித்தார்கள்.
நகரச் செயலாளர் ஜனாப் ஏ.எல்.எஸ்.அபுசாலிஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.. நகர முஸ்லிம்லீகின் வார்டு செயலாளர் ஜனாப் என்.டி.சலாவுத்தீன் துவக்கமாக உரையாற்றினார்.
அவரது உரையில் சென்ற உள்ளாட்சித் தேர்தலில் தன்னார்வக் கோளாரினால் சிலரும், சுயநலத்தால் சிலரும் ஒன்று சேர்து மக்களைக் குழப்பி மோசமான நிர்வாகம் இவ்வூரில் அமைய வழிவகுத்து விட்டனர் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ஆக்கப் பூர்வமான பணிகள் எதுவும் நடைபெறாமல் நகராட்சி நிர்வாகம் குப்பை காடாகி விட்டது என்றும் குறிப்பிட்ட தோடு, இந்தத் தேர்தலிலும் வேறு பெயர்களில் அவர்கள் வருகிறார்கள் என்றும், அவர்களிடம் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த ஊரின்மேல் அக்கரையும், நல்லெண்ணமும் கொண்டு இயங்கக்கூடிய முஸ்லிம் லீகின் தூயவர்களை நடைபெறவுள்ள உள்ளாட்ச்த் தேர்தலில் தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும், தேர்வு செய்து நல்ல நிர்வாகம் நகரில் நிலவ ஒத்துழைக்கு மாறு நகர மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மாவட்டத் துணைத்தலைவர் மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஷ்ஹாப் உரையாற்றுகையில், முஸ்லிம்லீகின் நகர செயற்குழு கூட்டத்தில் நிரைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அபுபக்கர் எம்.எல்.ஏ. அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறுவதாக குறிப்பிட்டு, சுகந்திர இந்தியாவில் இப்போதுதான் முதன் முறையாக நமதூரைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றுள்ளார் என்றும் இது நமக்கெல்லாம் பெருமை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் சீர் குழைந்த நகராட்சி நிர்வாகத்தால் சாலைகளை பார்கின்ற போது, கற்காலத்தில் நாம் வாழ்வது போலவும், நாமெல்லாம் ஆதிவாசிகளாக வாழ்வது போலவும் நினைக்க தோன்றுகிறது என்றும் கூறிய அவர், கோமான் தெருவில் அமையவேண்டிய ஆரம்பச்சுகாதார நிலையம் இதுவரை அமையாமல் திட்டமிட்டு தடுத்து விட்டனர் என்றும், 90 இலடச்ம் ரூபாய் செலவில் உருவாகியுள்ள பயோ கேஸ் திட்டம் முன்னதாகவே நடை முறைக்கு வராத நிலையை தடையாணை மூலம் உருவாகினார் என்றும் குற்றம் சாட்டினார். இரண்டாம் குடிநீர் திட்டமும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என அவர் ஆதங்கம் பட்டார்.
இந்த அவலநிலை நீங்க முஸ்லிம் லீகினர் களத்தில் இறங்குவதுதான் சரி என்று நகர நலனில் அக்கரைவுள்ள நடுநிலையாளர்களும், ஜமாஅத்தினரும் வேண்டுகோள் வைத்தனர் என்றும், முஸ்லிம் லீகினர் பொறுப்புக்கு வந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து நிர்வாகம் செய்விர்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் என்றும், எனவே பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் லீக் இத்தேர்தலில் போட்டியிடுவதாக் தெரிவித்தார். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகரில் நல்லாட்சி மலர முஸ்லிம் லீக்கை ஆதரிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
மாவாட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹசன் உரையாற்றுகையில் பாராட்டுப் பெறக்கூடி சட்டமன்ற உறுப்பினர் இந்த பொறுப்புக்கு வருவதற்கு முன்பே பாராட்டப்படக்கூடிய பல்வேறு பொதுச் சேவையை ஆற்றியவர் என்றும் குறிப்பிட்டு, கடலூர் வெள்ளத்தில் அவர் புரிந்த சேவைகளையும் நினைவு கூர்ந்தார்.
பைதுல் ரஹ்மான் என்ற திட்டத்தில் ஏழைகளின் வீடுகளுக்கு அடிக்கல் நாட்ட உறுதுணை புரிந்தவர் என்றும் M.L.A வாக தேர்வு பெற்றப்பின் அத்திட்டத்தின் கீழ் அவரது தொகுதியில் மூன்று வீடுகளைக் கட்டி இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்களுக்கு வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்ததோடு, தூத்துக்குடி திருசெந்தூர் சாலையை செப்பனிடவும், ECR சாலைப் பணிகளை முடுக்கி விடவும் அவர் சட்ட மன்றத்தில் குரல் கொடுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார்
நமதூர் காயல்பட்டினத்திற்கு தேவையான அளவு குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும் ஆறுமுகநேரில் குடிநீர் வினியோகம் மிகச் சிறப்பாக உள்ளது என்று ஒப்பிடு செய்த அவர், காயல் நகர்மன்ற நிர்வாக சீர்கேட்டைச் சாடினார். எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் லீக்கை ஆதரிக்க அவர் கேட்டுக் கொண்டார்.
நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் நெய்னார் முஹம்மது கடாபி உரையாற்றுகையில், தேர்தல் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். களத்தில் நின்றவர்களை பட்டியலிட்டு அவர்களின் சேவைகளை நினைவு கூர்ந்தார். கடையநல்லூர் தொகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய் பிரச்சாரங்களை முறியடித்த முன்னணி முஸ்லிம் லீக்கினரை அவர் பாராட்டினார்.
முஸ்லிம் லீக் மாநில நிர்வாகி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் அல்ஹாஜ் கோதர்மெய்தீன், நெல்லை அப்துல்மஜீத், எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி ஆகியோர் பொறுப்பேற்று நடத்திய பணிகளை மனம் திறந்து அவர் பாராட்டினார்.
காயல்பட்டினத்தில் இருந்து கடைநல்லூருக்கு வருகைதந்து வாக்கு சேகரிப்பதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியோரை அவர் வியந்து பாராட்டி, புகழாரம் சூட்டினார். அபுபக்கரின் நல்லென்னத்திற்கு இறைவன் அளித்த வெற்றி இது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகப் பொறுப்பாளர் கவிஞர் ஜனாப் பி.எம்.கமால் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்களை கவிதையால் வாழ்த்தி புகழாரம் சூட்டினார்.
நெல்லை தெற்கு மாவட்டத்தை சார்ந்த வழக்கறிஞர் சொக்கம்பட்டி செந்தூர் பாண்டியண் உரையாற்றுகையில், காயலின் வரலாற்றையும், இஸ்லாமி வரலாற்றையும் விரிவாக நினைவு கூர்ந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் சென்னையில் இருந்து முதல் முறையாக தொகுதிக்கு வரும்போது நேரடியாக கடையநல்லூர் வந்தார் என்றும், தற்போது அவர் நேரடியாக தொகுதிக்கு வராமல் நெல்லையில் மாவட்ட ஆட்சித்தலைவரையும், துறைசார்ந்த அதிகாரிகளையும் சந்தித்து, தொகுதியின் தேவைகளை அவர்களுக்கு கவனப்படுத்தி விட்டுத்தான். கடையநலூர் வருவதை அவர் வழமையாக கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கேட்டுப் பெறுவதை கேட்டுப் பெறுவோம் என்றும், தேவைப் பட்டால் வாதாடிப் பெறுவோம் என்றும், வேறு வழியில்லை எனில், போராடிப் பெறுவோம் எனவும் குறிப்பிடும் அபுபக்கர் அவர்களின் போர்க்குணம் பாராட்டுகுரியது எனப் புகழ்ந்துரைத்த வழக்கறிஞர் கடையநல்லூருக்கு அவரை வழங்கிய காயல்பட்டினத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கூரினார்.
மாநில துணைத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.கோதர் மெய்தீன் வாழ்துரை வழங்குகையில் சட்டமன்றத்திலும், தொகுகிதியில் அதிகாரிகள் மத்தியிலும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அபுபக்கர் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
மாநில அமைப்புச் செயலாளர் நெல்லை மஜீத் அவர்கள் வாழ்த்துரை வழங்குகையில் எம்.எல்.ஏ. அபுபக்கர் காயல்பட்டனத்தில் பிறந்த முதல் எம்.எல்.ஏ. குழந்தை என குறிப்பிட்டதோடு, கடையநல்லூரை பொருத்தவரை 36 வருடங்களுக்கு பிறகு முஸ்லிம் எம்.எல்.ஏ. குழந்தை என குறிப்பிட்டார்.
இந்தியா முழுமையும் முஸ்லிம் லீக்கினர் ஒரே சின்னத்தில் களம்காண உருவான முயற்சியில், தனது அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் அபுபக்கர் என ஆதாரங்களுடன் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் மனிதநேயமுள்ள ஒரு சிறந்த மனிதர் கடையநல்லூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினராக கிடைத்துள்ளார் என்று பத்திரிக்கை நிருபர்களும், சகோதர சமுதாயத்தினரும் வியந்து உரைப்பதாக அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் பெருமானாரோடு தவறான ஒப்பீட்டினை செய்த அமைசரின் உரைக்கு தனது உடனடியான மறுப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து, அமைச்சரின் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கச்செய்த பெருமை அபுபக்கரைச் சேருமெனவும் அவர் பாராட்டினார்.
நிகழ்ச்சியின் தலைவரான மாவட்டத்தின் தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர் உரையாற்றுகையில், சட்டமன்றத்தில் அபுபக்கர் எம்.எல்.ஏ. அவர்கள் ஆற்றும் உரைகளையும் கவன ஈர்பு நடவடிக்கைகளையும் வெகுவாகப் பாராட்டி புகழ்ந்தார்.
சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளில் கண்டனத்துக்கு உரியவைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கோரும் வேண்டுகோள்கள் உடனடியாக ஏற்கப்படுவது இல்லை என்றும், பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டப் பின்னர் தீர்பளிக்கப்படும் என அறிவிக்கப்படுவதுதான் வழமையாக இருந்து வருகிறது எனவும்,
இந்நிலையில் பெருமானார் பற்றி சட்டமன்றத்தில் செய்யப்பட்ட தவறான ஒப்பீட்டுக்கு தனது உடனடி மறுப்பை தெரிவித்து, உடனடியாக அவைக் குறிப்பில் இருந்து அதனை நீக்கச்செய்த சாதனை அபுபக்கர் அவர்களையே சாரும் என அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் கட்சிக்கு வெற்றி தேடித்தருமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.
நிறைவாக ஏற்புரை வழங்கிய முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச் செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் அவர்கள் பல்வேறு தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார்.
சமூகத்திற்கும், ஊருக்கும் தன்னால் இயன்ற சேவையினை கடந்த காலத்தில் ஆற்றி இருப்பதாகவும், முஸ்லிம் லீக் இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்ட 94 ஆவது ஆண்டு முதல் 2000 ஆவது ஆண்டு வரையிலானக் காலக் கட்டத்தில் காயலில் இயக்கம் காக்க தானும், இயக்க முன்னோடிகளும் அரும்பணியாற்றியத்தை நினைவு கூர்ந்தார்.
தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் இவைகளை முஸ்லிம் லீக் பேணி காப்பதால்தான் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு சுமுகமாக தீர்வு காண முடிகிறது என அவர் குறிப்பிட்டார்.
காயலபட்டினம் வாவு நகரில் சுமார் 27 ஆண்டுகாலம் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பை, எவ்வித பதட்டமான நிலையும் ஏற்பாடாமல், ஐந்து மணி நேரத்தில் பேச்சு வார்த்தை மூலம் அகற்ற முடிந்ததற்கு நம்முடைய நல்லிணக்க நடவடிக்கையே காரணம் என அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் சமூதாயத்தின் பிரதிநிதியாக பங்கேற்று, உரையாற்றும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன் எனவும், உளத்தூய்மையுடன் நாம் வழங்கும் கருத்துகளுக்கு அமைச்சர்கள் செவிசாய்க்கும் அற்புதமான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
நோன்பு காலத்தில் 40 பள்ளி வாயில்களில் இருந்த கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டுமென அரசு பணித்த போது, நான் சட்டமன்றத்தில் ஆற்றிய உரையால் அந்த, நடவடிக்கை தவிர்க்கப்பட்டது என்றும் நம் இயக்கத்தை பற்றித் தெளிவான சிந்தனை இருபதால்தான் இதையெல்லாம் செய்ய முடிகிறது எனவும் சுட்டிக் காடினார்.
முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களை பெண்களுக்கான பிரநிதித்துவ ஊர்களாக உள்ளாட்சி அமைப்புகளில் ஒதிக்கீடு செய்வது, இன்னும் சில ஊர்களை தனித் தொகுதியாக மாற்றுவது, நெல்லை மாநகராட்சியிலுள்ள மேலப்பாளையத்தில் உள்ள 9 வாடுகளையும் பெண்கள் பிரநிதித்துவ வாடுகளாக அமைப்பது போன்ற நடவடிகளை சுட்டிக் காட்டி சட்டமன்றத்தில் நான் கவன் ஈர்ப்பு தீர்மான கொண்டுவர உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்,
கண்டி ஊரில் வீடில்லா ஏழைகளுக்கு வீடு ஒன்றுக்கு ரூபாய் 3.5 இலட்சம் செலவில் ஐந்து வீடுகளுக்கான செலவினை முஸ்லிம் லீக் ஏற்றுள்ளது என்ற தகவலை வெளியிட்டார்.
வெளியிலே போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் பெருமானார் பற்றிய தவறான ஒப்பீட்டைக்கூட சட்டமன்றத்தில் கண்டு கொள்ளாமல், கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
உள்ளாட்சி தேர்தல் பற்றி அபுபக்கர் எம்.எல்.ஏ உரை நிகழ்த்தும் போது, முஸ்லிம் லீக் சார்பில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்துவோம் என்ற அறிவிப்பை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே வழங்கிவிட்டதாகவும், தற்போது அதை மறு அறிவிப்பு செய்வதாகவும், வாய்ப்புள்ள வார்டுகளில் முஸ்லிம் லீக் களம் காணும் எனவும், தோழமைக் கட்சியின் மாவட்ட செயலாளர், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருடனும் தெளிவாக இது குறித்து பேசியிருப்பதாகவும், குற்றாலத்தில் அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் பொதுக்குழுவிலும் இதுகுறித்து கருத்து தெரிவித்து இருப்பதாகவும், இக்கருத்தினை தி,மு.க வின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.
தோழமை கட்சிகளான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் போன்றவை திருசெந்தூர் மற்றும் ஆறுமுகநேரி போன்ற இடங்களில் போட்டியிட முடியும் மென்றும், முஸ்லிம் லீக் இப்பகுதியில் காயல்பட்டினத்தில் மட்டும்தான் களம் காண முடியும் மென்றும், எனவே முஸ்லிம் லீகிற்கு விட்டுத்தர வேண்டுமெனவும், அவர் தோழமைக் கட்சிகளை கேட்டுக் கொண்டார்.
தற்போதயை நகராட்சியில் ஒருகிணைப்பும், சுமுகமான சூழ்நிலையும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், ஒருமுறை முஸ்லிம் லீகிற்கு வாய்ப்புத் தாருங்கள் என கேட்டுக்கொண்ட அவர், தேர்ந்து எடுக்கப்படும் எங்கள் பிரநிதிகள் தவறிழைத்தால் என் சட்டையைப் பிடித்துக் கேட்கலாம் எனவும் அவர் வாக்களித்தார்.
தன்னை தேர்ந்தெடுத்த கடையநல்லூர் தொகுதி மக்களுக்கும், தனது வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி கூறிய அவர், அமானிதமான இப்பொறுப்பை தான் திறம்பட காப்பாற்ற வழிகாட்டுதல் வழங்குவதோடு, துவா செய்யுமாறும் கேட்டுக் கொண்டு தனது உரையை அவர் நிறைவு செய்தார்.
நகரப் பொருளாளர் ஜனாப் எம்.ஏ.முஹம்மது ஹசன் நன்றி தெரிவித்தார். மாநிலத் துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராகிம் மக்கி அவர்கள் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார் அல்ஹாபிழ் என்.டி சதக்கதுல்லாஹ் துவா ஓத, நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கூட்ட ஏற்பாடுகளை ஜனாப் எம்.ஏ.சி.சுல்தான், ஜனாப் ஏ.கே.மஹ்மூது சுலைமான், ஜனாப் எம்.ஜெட்.சித்தீக், ஜனாப் எம்.ஹெச்.அப்துல் வாஹித், ஜனாப் என்.டி.முஹம்மது இஸ்மாயில் மற்றும் வார்டு நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னர், மாலை 04:30 மணி முதல் 06:30 மணி வரை முஸ்லிம் லீக் தலைமை நிலைய பாடகர் ஜனாப் முகவை சீனிமுகம்மது அவர்களின் கொள்கை முழக்க இன்னிசை நிகழ்சி நடைபெற்றது. திரளானப் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|