உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியர் நேர்காணல் செய்யப்பட்டு, 49 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-
உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 68 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 31.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணி முதல் மதியம் 01:45 மணி வரை காயல்பட்டினம் கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இக்ராஃவின் தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் துணைத் தலைவருமான ஹாஜி எம்.எம்.மகுதூம் முஹம்மது, செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர், ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் மற்றும் இக்ராஃவின் முன்னாள் துணைத்தலைவரும், ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கி ஆகியோரடங்கிய இரு குழுவினர் , நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியரை தனித்தனியாக நேர்காணல் செய்தனர்.இவர்களுக்கு உதவியாக இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நேர்காணலில், 23 மாணவர்கள், 26 மாணவியர் என 49 பேர் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாணவர்கள் B.A.(Economics), B.Com, B.Com(CA), B.B.A., B.C.A., B.Sc. (CS), Dip. in Civil, Dip.in EEE, Hotel Management & Catering, B.Sc.(Nutrition and Dietetics)ஆகிய கல்வியும், மாணவியர் B.A.(Eng.), B.A.Tamil (CA), B.com., B.Com.(CA), B.B.A., B.Sc.(Zoology), B.Sc.(Maths), B.Sc.(CS), B.Sc.(IT) ஆகிய கல்வியும் பயில்கின்றனர். இவர்களுக்கான உதவித்தொகையாக ரூபாய் 3,66,500/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற, மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள ஐந்து மாணவர்கள் மற்றும் நான்கு மாணவிகள் என 9 பேர் முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் மூன்று மாணவர்கள் முழுக் கல்விக் கட்டணமும் கடனுதவி (வட்டியில்லா கடன்) அடிப்படையில் வழங்கிட தேர்வு செய்யப்பட்டனர்.(தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் இவர்களுக்கான முழுக் கல்விக் கட்டணமும் பொறுப்பேற்று வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்!).
இதில் இக்ராஃவுக்கு விண்ணப்பித்திருந்த அதிக மதிப்பெண்கள் (Merit marks) பெற்ற, புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ஒரு மாணவருக்கும், அதிக மதிப்பெண்கள் பெற்ற, மிகவும் வறுமையில் வாழ்ந்து வரும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும், இரு மாணவியருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு விண்ணப்பித்து பின் பொறியியல் கல்லூரிக்கு மாறிச் சென்றவர்கள், இதர நிறுவனத்தின் கல்வி உதவித் தொகை பெற்றவர், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் என மொத்தம் 15 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்படும் சமயம்,''இது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்படும் நிதியாகும். எனவே தங்களுக்கு வசதி இருப்பின் பிற ஏழை மாணவர்களுக்கு வழி விடும் வகையில் நீங்கள் விலகிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படும்'' அந்த வகையில் ஒரு மாணவி விலகிக் கொண்டார். 3 மாணவிகள் நேர்காணலில் கலந்து கொள்ளவில்லை.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியர்களில் பலர் ஆதரவற்றவர்கள்; வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பம் வாழ்ந்து வருகிறது என்பதும், இந்த மாணவ - மாணவியருக்கு தேவையான வழிகாட்டுதலும், மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.இந்த நேர்காணலில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும், அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றிய விபரங்களை தெரிவித்து கட்டாயம் அதற்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நேர்காணலில் 49 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 3,66,500/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், நடப்பாண்டு (2016 -2017) கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூபாய் 1,60,000/- மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.இதனை பூர்த்தி செய்ய மேலும் ரூபாய் 2,06,500/- தேவைப்படுகிறது. இதில் அனுசரணை வழங்காத காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் இந்த மாணவ - மாணவியரின் ஒளிமயமான வாழ்விற்கு உதவிடும் வகையில் அணுசரணை (sponsorship) வழங்கி ஆதரிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது
(நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.)
|