சிங்கப்பூரில், ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், “இக்ராஃ நாள்” அறிவிக்கப்பட்டு, கல்வி உதவித்தொகையாக இந்திய ரூபாய் 1 லட்சம் திரட்டப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
சிங்கப்பூர் நாட்டில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில் காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
பின்னர், சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, அன்று மாலையில் சிங்கப்பூர் பாயாலேபரர் பகுதியிலுள்ள 99-ப்ரிஸ்டோர் ரெஸ்டாரெண்ட் உணவகத்தில் நடைபெற்றது.
மன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 100 காயலர்கள் தம் மனைவி - மக்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் பங்கேற்றனர். 17.30 மணியளவில் அனைவருக்கும் தேனீர் - பக்கோடா பரிமாறப்பட்டது.
காயல்பட்டினம் எழுத்தாளர் சாளை பஷீரின் மூத்த சகோதரர் நெய்னா முஹம்மத், துபை டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், ஐ.ஷாஜஹான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
மஃரிப் வேளை வந்ததும், கூட்டாக தொழுகை நிறைவேற்றப்பட்டது. மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் தொழுகையை வழிநடத்தினார்.
தொடர்ந்து, அனைவருக்கும் சிக்கன் பிரியாணி, தயிர் சம்பல், கேரட் ஹல்வா உள்ளிட்ட பதார்த்தங்களுடன் இரவுணவு தற்சேவை (பஃபே) முறையில் பரிமாறப்பட்டது.
நிறைவில், அனைவருக்கும் வெற்றுரை வழங்கப்பட்டது. அதில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக நிதி திரட்டப்பட்டது. 20.30 மணியளவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாக வசிப்பிடம் திரும்பினர்.
தகவல் & படங்கள்:
சிங்கப்பூரிலிருந்து...
ஹிஜாஸ் மைந்தன் |