பாதுகாப்பான தமிழகம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக சமூக ஆர்வலர்களால் மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயல்பட்டினம் வந்த பயணக் குழுவினருக்கு, கடற்கரையில் பொதுமக்களால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
இயற்கை வளங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் மிதிவண்டியில் பயணிக்கும் குழுவினருக்கு காயல்பட்டினம் கடற்கரையில் 13/09/2016 செவ்வாய் மாலை 05:30 மணியளவில் ஊர்மக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த பாரதி கண்ணன், ரஞ்சித், மதுரையைச்சேர்ந்த பெருமாள், ஆகியோர், “பாதுகாப்பான தமிழகத்திற்கான மிதிவண்டி பயணம் – 2016” {Ride for Rights to Save Tamil Nadu – 2016} என்ற தலைப்பின் கீழ் மிதிவண்டியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் நண்பர்கள் குழுவினர் சென்னையை மையமாக கொண்டு இயற்கை வாழ்வியல் , விவசாயத்திற்கான பல்முனை முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றனர். இக்குழுவில் தகவல் தொழில் நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த இளைஞர்கள் ஊக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் வழக்கறிஞரான சென்னையைச் சார்ந்த பாரதி கண்ணன் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தன்னுடைய ஊடக பணியை உதறி விட்டு முழு நேரமாகவே தன்னுடைய வாழ்வை இயற்கை வாழ்வியல் பணிகளுக்காக அர்ப்பணித்தமை குறிப்பிடத்தக்கது.
மதுரையைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான பெருமாள் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன் புவி வெப்பமயமாதல் குறித்த ஆய்வினையும் மேற்கொண்டுள்ளார்.
சென்னையைச் சார்ந்த ரஞ்சித், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் தாம்பரம் நண்பர்கள் குழுவினருடன் இணைந்து கூட்டு இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி சென்னையில் தங்களது பரப்புரை பயணத்தை தொடங்கிய இப்பயணக்குழுவினர் மதுரையில் முதல் கட்ட பரப்புரையை நிறைவு செய்தனர். தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் தொடங்கி கன்னியாகுமரியில் பரப்புரையை நிறைவு செய்தனர்.
பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடற்கரையோர மாவட்டங்களினூடாக பயணிக்கும் வழித்தடத்தில் 13/09/2016 செவ்வாய் மாலை 05:30 மணியளவில் காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு பயணக்குழுவினருக்கு ஊர்மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர்களான சாளை ஸலீம், சா.ஹ..ஷமீமுல் இஸ்லாம், மூ.நெ.அஹ்மத் ஸாஹிப், மீ.சா.முஹம்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் மு.மு.முஜாஹித் அலீ, ஒளிப்படக்கலைஞர் சுப்ஹான் பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் எஸ்.டி..ஃபாரூக், நகர்மன்ற உறுப்பினர் ஷம்சுத்தீன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தலைவர் பாளையம் சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பயணக்குழுவினருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பயணக்குழுவைச் சேர்ந்த பாரதி கண்ணன் தங்களின் பயண நோக்கம் குறித்து சிற்றுரையாற்றினார்.
பயணக்குழுவினர் தங்களின் இந்த பரப்புரை பயணம் முழுக்க
1.காசுக்கு குடிநீரை வாங்க மாட்டோம்
2. குளிர்பானம், சோப்பு, பற்பசை போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்.
3. பாலித்தீன் பை போன்ற மக்காத குப்பைகளை ஏற்படுத்த மாட்டோம்.
4. பணம் கொடுத்து விடுதிகளில் தங்க மாட்டோம்.
5. உணவே மருந்தாக வாழ்ந்த நம்மை மருந்தே உணவாக வாழக் காரணமான ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்த மாட்டோம்.
என்ற உறுதி மொழியோடு பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
ஊர் மக்கள் அன்புடன் வழியனுப்பி வைக்க பயணக்குழுவினர் தூத்துக்குடி நோக்கி தங்கள் பரப்புரை பயணத்தை தொடர்ந்தனர்.
களத்தொகுப்பு, செய்தியாக்கம் & படங்கள்:
சாளை பஷீர்
|