காயல்பட்டினம் நகராட்சியின் பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகளை எரிப்பதை உடனடியாக நிறுத்திட - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து - நடப்பது என்ன? குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியின் பப்பரப்பள்ளி பகுதியில் - நகராட்சிக்கு சொந்தமான சர்வே எண் 42/1 இடத்தில - இருபது ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
மேலும் - பல ஆண்டுகளாக, அங்கு கொட்டப்படும் குப்பைகள், சமூக விரோதிகளால் எரிக்கப்பட்டு - அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு - பெருத்த சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.
செப்டம்பர் 19 திங்களன்று - அங்கு கொட்டப்படும் குப்பைகளை எரிக்க கூடாது என்றும், அதனை கண்காணிக்க சி.சி.டிவி. கேமரா பொருத்தவும் மற்றும் பாதுகாவலர் நியமனம் செய்யவும், அவ்வாறு எரிப்பவர்கள் மீது இந்திய குற்றவியல் மற்றும் மாசு கட்டுப்பாடு சட்டங்கள் வாயிலாக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் - நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.
இந்த மனுக்கள் - மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் வழங்கப்பட்டன.
அம்மனுக்கள் மீது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அன்று மாலையே - காயல்பட்டினம் நகராட்சிக்கு நோடீஸ் அனுப்பியுள்ளது. அதில் - குப்பைகளை எரிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 படி தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் - அச்சட்டத்தின் விதிமுறை 15 படி குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குப்பைகளை எரிப்பதை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுத்து, மூன்று தினங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதில் வழங்கவும், அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சமர்ப்பித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு கண்ணன் அவர்களுக்கு நன்றியினை குழுமம் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|