காயல்பட்டினம் நகராட்சியின் 5 ஆண்டு கால நகராட்சிப் பணிகளை நடைபெற விடாமல் தடுத்தவர்களைக் கொண்ட கட்சி, “உள்ளாட்சியில் நல்லாட்சி” எனும் முழக்கத்தைக் கையில் எடுத்துள்ளது வேடிக்கையானதே என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்கூட்டத்தில், மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா பேசியுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
மனிதநேய ஜனநாயக கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், செப்டம்பர் 17ஆம் நாளன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் “இந்தியாவும், மதச்சார்பின்மையும்” எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நகர செயலாளர் எம்.ஏ.ஆஸாத், பொருளாளர் எஸ்.மீரான் ஆகியோர் தலைமை தாங்க, மாநில இளைஞரணி செயலாளர் பீ.ஷமீம் அஹ்மத், மாவட்டச் செயலாளர் ஏ.ஜாஹிர் ஹுஸைன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ஷாஹுல் ஹமீத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காதிர் ஸாஹிப் உள்ளிட்ட மாநில - மாவட்ட - நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா துவக்கமாக உரையாற்றினார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் செயல்திட்டங்களையும், இன்றைய அரசியல் நிலவரத்தையும் விளக்கிப் பேசிய அவர். காயல்பட்டினம் நகராட்சியின் கடந்த 5 ஆண்டு காலப் பருவத்தில், நகராட்சிப் பணிகள் நடக்க இடையூறாக இருந்தவர்களைக் கொண்ட கட்சி, இன்று “உள்ளாட்சியில் நல்லாட்சி” எனும் முழக்கத்தைக் கையில் எடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத் பேசினார்.
இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிராக நடுவண் அரசை ஆளும் பாரதீய ஜனதா செயல்பட்டு வருவதாக சான்றுகளுடன் விளக்கிப் பேசினார்.
நிறைவாக மாநில பொதுச் செயலாளரும் - நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரீ உரையாற்றினார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சி துவக்கப்பட்டதன் அவசியம், அது சந்தித்த சோதனைகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், பல்வேறு விமர்சனங்கள் - போராட்டங்களைத் தாண்டி இன்று அது தமிழகம் முழுக்க எழுச்சி பெற்றுள்ள இயக்கமாகத் திகழ்ந்து வருவதாகக் கூறினார்.
காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும்,
கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்தும்,
2016 உள்ளாட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகராட்சியின் பெரும்பாலான வார்டுகளில் கட்சியின் சார்பில் போட்டியிடுவதாகவும்,
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் போதைப் பொருட்கள் பயன்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல்துறையைக் கோரியும்,
கஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், அங்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர்கள் நுழைய நடுவண் அரசு அனுமதி மறுத்ததைக் கண்டித்தும்,
ஹஜ் பெருநாளையொட்டிய உள்ஹிய்யாவுக்காக ஒட்டகம் அறுக்க தடை விதித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக கட்சித் தலைமையால் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்றும் கூட்டத்தின் நிறைவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றியுரையைத் தொடர்ந்து, செயல்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளியில், கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
வள்ளல் சீதக்காதி திடல் அருகிலுள்ள ஆட்டோ நிறுத்தத்தில், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க இணைப்பு விழாவும் நடைபெற்றது.
தகவல்:
ஷாஹுல் ஹமீத்
படங்களில் உதவி:
‘ரிஃப்அத்’ உமர்
|