கத்தர் காயல் நல மன்றத்தின் ஹஜ் பெருநாள் காயலர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வினாடி-வினா போட்டியுடன் நடந்தேறியுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பெருநாள் தொழுகை:
கத்தர் நாட்டில் 12.09.2016 அன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பள்ளிவாசல்களில் காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்
பெருநாள் தொழுகையையடுத்து ஒன்றுகூடிய காயலர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
வினாடி-வினா போட்டியுடன் பெருநாள் ஒன்றுகூடல் பொதுக்குழுக் கூட்டம்:
பெருநாளை முன்னிட்டு, வழமை போல பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வினாடி-வினா போட்டியுடன் கூடிய பொதுக்குழுக் கூட்டமாக, கத்தரிலுள்ள MovenPick Hotel Park – Corniche பூங்காவில் விமரிசையாக நடத்தப்பட்டது.
ஹாஃபிழ் நுஸ்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்ற ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் – அடுத்த முகாமை நடத்துவது தொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டது.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
மஃரிப் வேளை நெருங்கியதும், அதான் ஒலிக்கப்பட்டு, கூட்டாக தொழுகை நிறைவேற்றப்பட்டது. பின்னர், இரண்டாவது அமர்வு துவங்கியது. கத்தர் நாட்டில் புதிதாக பணியாற்ற வந்துள்ள காயலர்கள், மன்றத்தில் புதிய உறுப்பினர்களாக தங்களை அறிமுகம் செய்துகொண்டனர்.
வினாடி-வினா போட்டி:
இவ்வமர்வில், வினாடி-வினா போட்டிக்கு 6 குழுக்கள் பிரிக்கப்பட்டு, போட்டி விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர் வினாடி-வினா போட்டி முறைப்படி துவங்கியது.
கத்தீப் முஹம்மத் முஹ்யித்தீன், சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோர் வினாடி-வினா போட்டி நடத்துநர்களாகக் கடமையாற்றினர்.
பொது அறிவு, மார்க்கம், காயல்பட்டினம் சார்ந்த கேள்விகள் போட்டியின்போது கேட்கப்பட்டது. அனைத்து அணியினரும் ஆர்வமுடன் பங்கேற்ற இப்போட்டியில், கோனா ஸதக்கத்துல்லாஹ் தலைமையிலான அணி முதலிடத்தையும், மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ தலைமையிலான அணி இரண்டாமிடத்தையும் வென்றது. ஈரணியினருக்கும் வெவ்வுறு வண்ணங்களில் டீ-ஷர்ட் பரிசாக வழங்கப்பட்டது.
சிற்றுண்டியுபசரிப்பு:
பின்னர், அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய இஞ்சி தேனீரும், சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிக அழகாக செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு இதன்போது பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
கலகலப்பாக நடந்தேறிய வினாடி-வினா போட்டி, நாவிற்கினிய சிற்றுண்டி உபசரிப்பால் மனமகிழ்ந்து போயிருந்த உறுப்பினர்கள், பிரிய மனமின்றி - அடுத்த பெருநாள் ஒன்றுகூடலை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களாக - மாறாத நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தர் கா.ந.மன்றம் சார்பாக...
தகவல் & படங்கள்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி – கத்தர் காயல் நல மன்றம்) |