விடுதலை பெற்ற இந்திய நாட்டில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியார் சட்டங்கள் உள்ளன. முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. இவையனைத்தையும் நீக்கிவிட்டு, அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடுவன் அரசை ஆளும் பாஜக அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதனைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினரும் - இதர சமயங்களைச் சேர்ந்தோரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் 28.10.2016. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு: காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மதியம் நடந்தது. பேரவை தலைவர் அபுல் ஹசன் கலாமி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் காயல் அமானுல்லா, மன்னர் பாதுல் அஸ்ஹப், நவாஸ் அகமது ஆகியோர் பேசினர்.
ஏராளமானோர் பங்கேற்பு
இதில் காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரவை செயலாளர் வாவு சம்சுதீன் நன்றி கூறினார்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
தகவல்:
தினத்தந்தி
கள உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |