கத்தர் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் இணைவில், “இயற்கையோடு இணைவோம்!” எனும் தலைப்பில், பள்ளி மாணவர்களுக்கான இயற்கை சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்ற பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
கத்தர் காயல் நல மன்றம் (KWAQ) & இக்ராஃ கல்விச் சங்கம் (IQRA) இணைந்து - காயல்பட்டினம் மாணவர் சமுதாயத்திற்காக பற்பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில் - ஒரு புது முயற்சியாக, பள்ளி மாணவர்களுக்கான இயற்கை சிறப்பு முகாமை, 30 அக்டோபர் 2016 ஞாயிற்றுக்கிழமையன்று, திருச்செந்தூர் வட்டம் - பரமன்குறிச்சியிலுள்ள தாஜ் இயற்கைப் பழத்தோட்டத்தில் நடத்தின.
நிகழ்ச்சி அறிவிப்பு
முன்னதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர், காயல்பட்டினம் சென்ட்ரல், எல்.கே., முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் ஆகிய ஆண்கள் மேனிலைப் பள்ளிகளில், அவற்றின் தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து, 07 முதல் 09ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுள், இயற்கைச் சூழலியல் கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களை இனங்கண்டு - ஒரு பள்ளிக்கு தலா 20 மாணவர்கள் வீதம் இம்முகாமில் பங்கேற்கச் செய்யுமாறு அழைப்பு விடுத்தனர்.
அவ்வழைப்பை ஏற்று, மூன்று பள்ளிகளிலிருந்தும் 54 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
முகாம் நோக்கம்
தோட்டங்களையும் - காடுகளையும் அழித்து, நீர்நிலைகளை ஆக்கிரமித்து, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி, ஒரு முறையில்லா வாழ்வை நோக்கி மனிதன் பயணித்துக் கொண்டிருக்கிறான். இதனால் ஏற்படும் சீர்கேடுகளை, இனி வரும் தலைமுறையிலிருந்தாவது சரிசெய்திட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நகரின் பள்ளி மாணவர்களுக்கு, சுற்றுச்சூழல் குறித்த தெளிவான அறிவை வளர்ப்பதும், பல்லுயிரிகளைப் பேண வேண்டிய விழிப்புணர்வை முறையாக ஏற்படுத்துவதுமே இம்முகாமின் முதன்மை நோக்கமாகும்.
சூழலியல் சார்ந்த கல்வியை ஒரு சுமையாக்காமல், சுவையான கலந்துரையாடல் மூலம் இளையவர்களுக்குக் கற்பிப்பது மிகவும் அவசியம். கற்றல் தகவல் திணிப்பாய் இல்லாமல், சுதந்திரமான சிந்தனையை வளர்க்க வேண்டும் என்பதனை இம்முகாம் வலியுறுத்தியது.
சிறப்பு பயிற்சியாளர்
மதுரை இயற்கை பேரவையின் (Madurai Nature Forum) ஒருங்கிணைப்பாளரும், பறவைகள் காணும் கலையின் (bird watching or birding) ஆர்வலருமான, திரு. இரவீந்திரன் நடராஜன் இம்முகாமின் சிறப்பு பயிற்சியாளராகப் பங்கேற்றார். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, சுற்றுச்சூழலைப் பேணுவதன் அவசியத்தை எளிதாக புரியும் வண்ணம் சிறாருக்குக் கற்பிக்கிறார்.
2011ஆம் ஆண்டு, பம்பாய் இயற்கை வரலாறு சங்கத்தில் (Bombay Natural History Society) பறவையியலை (ornithology) முறையாகக் கற்ற இவர், பறவைகள் & வனவிலங்குகள் கணக்கெடுப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்விடம்
இயற்கைச் சூழலுடன் கூடிய ஒரு திறந்த வெளியே இம்முகாமிற்குச் சிறந்த நிகழ்விடமாக அமையும் என்பதால், திருச்செந்தூர் வட்டம் - பரமன்குறிச்சியிலுள்ள தாஜ் இயற்கைப் பழத்தோட்டம் (நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினரால்) பரிந்துரைக்கப்பட்டது. அதன் உரிமையாளர் சகோதரர் ஜெய்னுல் குத்புத்தீன் அவர்களிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டதும், கல்வி சார்ந்த இம்முகாமிற்கு யாதொரு தயக்கமுமின்றி மனமுவந்து இசைந்தார்.
நிகழ்முறை
ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அருகில், சுமார் 8:30 மணியளவில் பள்ளி மாணவர்கள் ஒன்று சேர, வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, தாஜ் இயற்கைப் பழத்தோட்டத்தை நோக்கி விரைந்தது.
தோட்டத்தை அடைந்ததும், சுண்டல் & தேனீர் (சிறுகடி/குடி) அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
சுமார் 09:45 மணியளவில் துவங்கிய இம்முகாமிற்கு, நிகழ்விட உரிமையாளர் குத்புத்தீன் தலைமையேற்று சிறப்பித்தார். நிகழ்வுகளை கத்தர் காயல் நல மன்றப் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் தொகுத்தளித்தார்.
துவக்கமாக முஹ்யித்தீன் மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளி மாணவர் ஹாஃபிழ் தன்வீர் மூஸா கிராஅத் ஓதிட; நிகழ்ச்சி குறித்தும், பயிற்சியாளர் குறித்தும் ஒரு சிறு அறிமுக உரையை இம்முகாமின் ஒருங்கிணைப்பாளரான அ.ர.ஹபீப் இப்றாஹீம் நிகழ்த்தினார்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், சிறப்புப் பயிற்சியாளர் திரு. இரவீந்திரன் நடராஜன் அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார்.
சிறப்பு பயிற்சி
இயற்கையின் மீதும் அதன் அங்கமான பல்லுயிரிகளின் மீதும் ஆர்வத்தைத் தூண்டிடும் வகையில் அமைந்த இப்பயிற்சியில், துவக்கமாக ஸ்டீவ் கட்ஸ் (Steve Cutts) இயக்கிய ”மேன்” (Man - https://www.youtube.com/watch?v=WfGMYdalClU) என்னும் அனிமேஷன் குறும்படம், ஒளி விரிதிரை உதவியுடன் திரையிடப்பட்டது.
பின்வரும் தலைப்புகளில், திரு. இரவீந்திரன் மாணவர்களோடு கலந்துரையாடினார்:
>>> சூழலை காப்பதில் தனிமனிதனின் பங்கு
>>> பல்லுயிரிகளை பேணுவதன் அவசியம்
>>> மரங்களை வளர்ப்பதின் பலன்கள்
>>> வன உயிரிகள் கணக்கெடுப்பு
>>> பறவைகள் குறித்த விழிப்புணர்வு
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இச்சிறப்புக் கலந்துரையாடலில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று, கேள்விகளைக் கேட்டு, பயிற்சியாளர் கேட்ட கேள்விகளுக்கு - தகுந்த முறையில் விடைகளைக் கூறி ஊக்கப்பரிசுகளையும் வென்றனர்.
தொழுகை & உணவு இடைவேளை
ளுஹ்ர் தொழுகைக்கான நேரத்தையடைந்ததும், கூட்டாக தொழுகை நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.
இயற்கை நடை
மதிய உணவைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நிகழ்ச்சியில், திரு. இரவீந்திரன் தலைமையில் - மாணவர்கள் அனைவரும் அத்தோட்டத்தினுள் சுமார் ஒரு மணிநேரம் நடைப்பயணம் மேற்க்கொண்டு, பலவகைப் பழ மரங்களைக் கண்டு அகமகிழ்ந்தனர். வனப்பான நிலப்பரப்புகளை வியப்போடு ரசித்த மாணவர்களின் பறவைகள் தேடல், அந்நடைப் பயணத்தின் முத்தாய்ப்பாக அமைந்தது.
சுவரில்லாக் கல்வி
மூன்றாவது பகுதி நிகழ்ச்சி அமர்வு நிகழ்ச்சியாக மீண்டும் நடைபெற்றது. இதில், ‘எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் ஆரிஃப், ’சுவரில்லாக் கல்வி’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
”பள்ளியில் மட்டுமே பயிலும் குழந்தை, ஒரு கல்வியில்லாத குழந்தை,” என்னும் ஸ்பெயின் நாட்டு தத்துவஞானி ஜார்ஜ் சந்தன்யாவின் கூற்றை மையக்கருவாகக் கொண்டு, வாழ்க்கைக் கல்வியின் முக்கியத்துவத்தை உதாரணங்களுடன் விளக்கும் விதமாக அமைந்தது அவரது உரை.
மாணாக்கருக்கு அன்பளிப்பு
விடுமுறை நாளாக இருந்தபோதிலும் இம்முகாமில் ஆர்வத்தோடு கலந்துகொண்டமைக்காக அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு நற்சான்றிதழுடன் - காய்கறிச் செடிகளின் மரபு விதைகள் அடங்கிய சிறிய காகிதப் பை, சூழலியல் / பல்லுயிரிகளின் மீது அதீத ஆர்வத்தைத் தூண்டும் ’தும்பி’ சிறுவர் மாத இதழ் & மரக்கன்று ஆகியன அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
மழைப் பருவமாக இருப்பதால், மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளை, அவரவர் வீட்டுத் தோட்டங்களிலும் பள்ளி வளாகங்களிலும் நட்டு, முறையாகப் பராமரித்து வளர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
நினைவுப் பரிசு
முகாமில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சியளித்து, இயற்கையின் மீதான ஈர்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திய பறவை ஆர்வலர் திரு இரவீந்திரன் நடராஜன் அவர்களுக்கு கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
முகாமுக்கு இட அனுமதி தந்து, நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்கிய தாஜ் இயற்கைப் பழத்தோட்டத்தின் உரிமையாளர் சகோதரர் ஜெய்னுல் குத்புத்தீன் அவர்களுக்கு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் நினைவுப் பரிசு வழங்கினார்.
மாணவர்களின் கருத்துப்பரிமாற்றம்
அதன் பின்னர், நிகழ்ச்சி குறித்த தங்களது கருத்துகளையும் பின்னூட்டங்களையும் மாணவர்கள் வழங்கினர். முகாம் மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும், நிகழ்ச்சி ஏற்பாடு செவ்வனே இருந்ததெனவும் கூறிய மாணவர்கள், பயிற்சியாளருக்கும் நன்றி தெரிவிக்க தவரவில்லை.
நன்றியுரை
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தன்னார்வலர்களுள் ஒருவரான, நவீன காயலின் முதல் விவசாயி ‘செம்பருத்தி’ இப்றாஹீம் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வை சாத்தியமாக்கிய எல்லாம் வல்ல இறைவனைத் துதித்து, கத்தர் காயல் நல மன்றத்துடன் இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்திய இக்ராஃ கல்விச் சங்கம் அமைப்பிற்கும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் ஆசிரியர்களையும் முகாமிற்கு அனுப்பி வைத்த 3 பள்ளிகளின் நிர்வாகங்களுக்கும், மாணவர்களை நிகழ்விடம் அழைத்துச் சென்று வர பேருந்து கொடுத்துதவிய வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், முகாமிற்காக இடவசதி அளித்த தாஜ் இயற்கை பழத்தோட்டத்தின் உரிமையாளர் சகோதரர் ஜெய்னுல் குத்புத்தீன் அவர்களுக்கும், மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய திருச்செந்தூர் வனச் சரக அலுவலருக்கும் (இருப்பு: புன்னையடி), ’தும்பி’ நூல்களை தள்ளுபடி விலையில் வழங்கிய ‘குக்கூ குழந்தைகள் வெளி’ அங்கத்தினருக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
இறுதியில், பள்ளிவாரியாக குழுப்படம் பதிவு செய்யப்பட்ட பின், 15.30 மணியளவில் முகாம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வழிகாட்டலில் குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
(முகாம் ஒருங்கிணைப்பாளர்)
கள உதவி (படங்கள்):
A.R.ஷேக் முஹம்மத்
(அலுவலர், முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி)
|