‘எழுத்து மேடை மையம், தமிழ்நாடு’ சார்பில் “தோக்கியோ ஸ்டோரி (Tokyo Story)” ஜப்பானியப் பட திரையிடும் – 11ஆவது நிகழ்ச்சி, 02.11.2016 புதன்கிழமையன்று காலை 09.45 மணியளவில், காயல்பட்டினம் துஃபைல் வணிக வளாகத்திலுள்ள ஹனியா சிற்றரங்கில் நடைபெற்றது.
இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
‘எழுத்து மேடை மையம், தமிழ் நாடு’ சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும், அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
ஜப்பானியப் பட திரையிடல்
அவ்வகையில், கடந்த 02 நவம்பர் 2016 புதன்கிழமையன்று காலை 09.45 முதல் 12.20 மணி வரை, நமதூரின் ஹாஜி அப்பா தெருவில் அமைந்திருக்கும் துஃபைல் வணிக வளாக ஹனியா சிற்றரங்கில், எழுத்து மேடை மையத்தின் பதினோராவது நிகழ்வாக “தோக்கியோ ஸ்டோரி (Tokyo Story)” எனும் ஜப்பானியப் படம் ஆங்கில துணைத் தலைப்புகளுடன் திரையிடப்பட்டு, அதன் கருப்பொருள் குறித்த கருத்து பரிமாற்ற அமர்வும் நடைபெற்றது.
இயக்குனர் அறிமுகம் - யசூஜிரோ ஓஸூ (Yasujiro Ozu)
துவக்கமாக, நகைச்சுவைக் குறும்படங்களையே இயக்கி வந்தார் யசூஜிரோ ஓஸூ. பின்பு வெளிவந்த இவரது முழு நீள திரைப்படங்களோ, உலகப் போருக்குப் பின் ஜப்பானில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களை எதிரொலித்தன.
பெரும்பாலும் திருமண வாழ்க்கை, குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள், தலைமுறை இடைவெளி ஆகியவற்றை விளக்கும் வண்ணமாக அவை அமைந்திருந்தது.
உலக வரலாற்றில் மிகவும் செல்வாக்குள்ள திரைப்பட இயக்குனர்களுள் ஒருவராக ஓஸூ கருதப்படுகிறார்.
(Late Spring, Floating Weeds, An Autumn Afternoon போன்றவை இவரின் புகழ் பெற்ற ஏனைய திரைப்படைப்புகளாகும்.
“தோக்கியோ ஸ்டோரி” – ஒரு அறிமுகம்
1937-ஆம் ஆண்டு வெளியான லியோ மெக்கேரியின் (Leo McCarey) Make Way for Tomorrow” என்னும் அமெரிக்க திரைப்படத்தை தழுவி, ஓஸூ இயக்கிய இந்த ஜப்பானிய திரைப்படம் 1953-ஆம் ஆண்டு வெளியானது.
எனினும், இங்கிலாந்தின் முதல் சதர்லாந் விருதினை (Sutherland Trophy) 1958-ஆம் ஆண்டு பெற்ற பின்பே, இது மேற்குலகத்திற்கு அறிமுகமானது. இப்படம் ஓஸூவின் தலைசிறந்த கலைப்படைப்பாக கருதப்படுகிறது.
கதைச் சுருக்கம்
ஒரு வயதான இணையருக்கு ஐந்து பிள்ளைகள். உயிரோடு இருக்கும் நால்வருள், பள்ளிக்குச் செல்லும் கடைசிப் பெண்பிள்ளையோடு ஒனொமிச்சி (Onomichi) எனும் ஊரில் வாழ்க்கையை கழிக்கின்றனர். மீதமுள்ள மூவரும் தோக்கியோவில் வாழ்கின்றனர்.
அவர்களைச் சந்திக்க ஜப்பானின் தலைநகருக்கு தொடர் வண்டியில் பயணித்து, குழந்தைகள் நல மருத்துவரான மூத்த மகனின் வீட்டை அடைகின்றனர். பல ஆண்டுகள் பெருநகரில் தனிக்குடித்தனம் இருந்ததால், பேரப்பிள்ளைகள் பாட்டி-தாத்தாவிடம் நெருங்க தயங்குகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைக் கூட அலுவலோடு இருக்கும் மருத்துவப் புதல்வனுக்கு, பெற்றோருடன் ஊர் சுற்ற நேரமில்லை. பின், அழகு நிலையம் நடத்தும் தங்களது மகளின் வீட்டிற்கு அவர்கள் செல்கின்றனர். அவளும் அதிக வேலையால் பெற்றோரை கவனிக்க இயலாமல் போக, அதாமி (Atami) எனும் வெப்ப நீரூற்று பகுதிக்கு, அவர்களை செலவு குறைந்த சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கிறாள்.
இளைஞர்களுக்கான ஒரு உல்லாசப் போக்கிடமான அதாமியின் அதிக ஒலி மாசுபாட்டினால் அந்த வயோதிக இணையர் தூக்கத்தை துறந்து, மகள் வீட்டிற்கே திரும்புகின்றனர். இவர்களது திடீர் வருகையை விரும்பாத மகள், தனிமையில் வாழும் தனது மச்சினிச்சியை (இறந்த சகோதரரின் மனைவி) அணுகி, பெற்றோரை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறாள்.
மருமகளின் உபசரிப்பிலும் அன்பான கவனிப்பிலும் மனங்குளிரும் அவர்கள், ஊர் திரும்புகையில், தங்களின் பிள்ளைகளின் மாற்றத்தையும் பேரப்பிள்ளைகளின் தலைமுறை இடைவெளியையும் வேதனையோடு விவாதிக்கின்றனர். பின்பு, மூதாட்டி நோயினால் அவதிப்பட, தோக்கியோவில் இருக்கும் பிள்ளைளுக்கு தந்தி அனுப்பப்டுகிறது.
படுத்த படுக்கையாய் கிடக்கும் மூதாட்டியைப் பார்க்க ஒனொமிச்சி வரும் மகன், மகள், மருமகள் ஆகியோருள், முதல் இருவர் இறந்த வீட்டில் உடுத்தும் துக்க ஆடைகளை கையோடு கொண்டுவருகின்றனர். அவர்கள் எதிர்ப்பார்த்ததுபோல், மறுநாள் அதிகாலை மூதாட்டி இறைவனடி சேர, வெளியூர் பயணம் மேற்கொண்ட மற்றொரு மகன் வீடு வந்து சேர்கிறான்.
சடங்குகள் நிறைவுற்று, உடன் ஊர் திரும்பும் குருதி வழி உறவுகளையும், அவர்கள் அக்கணமே அம்மாவின் ஆடைகளை பங்கு கேட்டதையும் எண்ணி மனம் வருந்தும் கடைசிப் பெண்பிள்ளைக்கு, மருமகள் ஆறுதல் கூறி அறிவுறுத்துகிறாள். பெருநகர வாழ்வில் கரைந்துபோன பாசபிணைப்புகளை இளையவளுக்கு புரிய வைக்கிறது அத்தருணம்.
இறுதிக் காட்சியில், மனைவியை இழந்து தனிமையில் இருக்கும் முதியவரிடம் ஒரு (அண்டை வீட்டுப்) பெண், “அனைவரும் சென்றுவிட்டனரா? இனி உமக்கு தனிமைதானா?!! தனிமைதானா?!!”, என மனதில் பதியும் சொற்களைக் கூறுவதோடு படம் நிறைவுபெறுகிறது.
நேர்த்தியான இயக்கம்!
அகிரா குரோசவாவின் திரைப்படங்கள் ஜப்பானிய எல்லைகளைத் தாண்டி பல தேசங்களிலும் பிரபலம் அடைந்திருந்த காலத்தில், வாழ்க்கை நிகழ்வுகளை மையப்படுத்திய கதைகளோடு வருகிறார் ஓஸூ.
தோக்கியோ ஸ்டோரி திரைப்படத்தில், ஒளிப்படக் கருவி அசைவதே இல்லை. இப்படத்தில், தோக்கியோ நகரத்தை சித்திரிக்க யாதொரு முயற்சியும் மேற்கொள்ளாது, தொழிற்சாலைகளின் பெரும் புகைப்போக்கியை காண்பிப்பது பெருநகரின் மீதான இவரது புரிதலை விளக்குவதாக உள்ளது.
அந்நகரின் அவசர வாழ்க்கையை அப்படத்தின் கதாபாத்திரங்களின் சிறு சிறு வசனங்கள் மட்டுமே நமக்கு உணர்த்துவது, இவரது எளிமையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தொடர் வண்டி பயணத்தை காட்டாது, அப்பயணத்தைப் பற்றிய வசனங்கள் மட்டும் இடம் பெறுவது இதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.
படத்தின் காட்சிகளில், ஒளிப்படக் கருவி தாழ்-தளத்தில் வைக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய பண்பாட்டுச் சின்னமான ததமி பாய்களில் (Tatami Mat) அமர்ந்து படத்தை பார்க்கும் ஒரு உணர்வை தரும் இம்முறைக்கு ”ததமி காட்சியமைப்பு” எனக் கூறுவர். இதனை அறிமுகப்படுத்திய பெருமை ஓஸூவையே சாரும்!
படம் தரும் படிப்பினை!
திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையை, பார்வையாளரது வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்க்க செய்யும் யுக்தியே, ஜென் புத்த தத்துவங்களை எடுத்துரைக்கும் ஓஸூவின் கலைப்படைப்புகளின் சிறப்பம்சமாகும். அந்த சூத்திரம், தோக்கியோ ஸ்டோரியில் வெகுவாகவே எதிரொலிக்கிறது.
பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்குமான தலைமுறை இடைவெளியை அழுத்தமாகவும் அழகாகவும் எடுத்துக்கூறும் இப்படம், உலகப் போருக்கு பிந்திய ஜப்பானில், வயதான பெற்றோர்களை (மேற்கத்திய தாக்கத்தினால்) ஒரு சுமையாக பார்க்கும் மனநிலை, ஐம்பதுகளிலேயே துவங்கிவிட்டதை பதிவுசெய்கிறது.
தனது மனைவி இறந்து கிடக்கும் வேளையிலும், அதிகாலை கதிரவனின் அழகில் மயங்கும் முதியவரின் கதாபாத்திரம் முதிர்ச்சியின் ஒட்டுமொத்த வெளிப்பாடு. துக்கம், இறப்பு, வயோதிகம் & மாற்றம் ஆகிய வாழ்க்கைப் பாடங்களை இலகுவாக கையாள்வதற்கான கருவியாக அமைகிறது இந்த தோக்கியோ ஸ்டோரி.
எக்காலத்திற்கும் பொருந்தும் கருப்பொருள்
உலகமயமாக்கலானது கொழுத்த ஊதியங்கள், வாழ்க்கை வசதிகளுடன் கூடிய பெரும் பணம் புழங்கக் கூடிய நவீன வாழ்வையும், கூட்டு குடும்ப முறைக்கு மாற்றாக ஒற்றை குடும்ப வாழ்க்கையையும் இளம் தலமுறையினரிடம் கையளித்திருக்கின்றது.
இந்த அதிரடியான வாழ்க்கை மாற்றமானது குடும்பத்தின் முதிர்ந்து கனிந்த உறுப்பினர்களை வயதான பெற்றோர்களை என்னென்ன வகையில் பாதிக்கிறது என்பதை இந்த படம் தனக்கே உரிய கலை மொழியில் எந்த பாசாங்குமின்றி நம் அகத்துடன் உரையாடுவது எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் அமைகிறது.
பண்பாட்டு அழிவில் காயல்பதி!
நமதூரில் தனித்து விடப்படும் பெற்றோர் என்ற புது ரகம் மெல்ல தலைத்தூக்கும் சூழல் உருவாகி வருகின்றது. பல பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னையில் உயர்சாதி குடும்பங்களில் காணப்படும் இந்த அவலம் படிப்படியாக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிற்குள்ளும் கசிந்து இறங்கி நமதூருக்குள்ளும் அறிமுகமாகிவிட்டது.
ஊரோடும் கூட்டுக் குடும்பத்தோடும் ஆழ்ந்த இணைப்பும் பிடிப்பும் உள்ள தமிழகத்தின் மிகச் சில ஊர்களில் நமதூரும் ஒன்று என்பது மனங்கொள்ளத் தக்கது. இந்த உன்னத பண்பாட்டின் கோட்டையில் மெல்லிய உடைவு விழுந்திருக்கின்றது. உடைவு ஆழம் வரை பிளந்து போடும் அனைத்து சாத்தியங்களோடும் இருக்கின்றது.
பிள்ளைகள் வெளி நாடுகளில் மனைவி மக்களுடன் நல்ல வாழ்க்கை நிலையில் இருக்க இங்கு தனித்து விடப்படும் தளர்ந்த பெற்றோர்களை தாங்கி நிற்கும் மனித தாழ்வாரங்கள்தான் இல்லை. அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு பணிபுரிய வாடகை மனிதர்களை சமூக நல மையங்களில் வந்து தேடும் படலமும் நமதூரில் நடக்கின்றது.
இப்படி தனித்து விடப்பட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் ஒருவரையும் காணாமல் இறுதி மூச்சை விட்ட சில நிகழ்வுகளும் நடந்தேறிவிட்டன.
````````````````````````````````````````````````````````````````
தோக்கியோ ஸ்டோரி திரைப்படத்தை இணைய தளத்தில் காண https://www.youtube.com/watch?v=pCh4WRDVzyY
``````````````````````````````````````````````````````````````
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:
அ.ர.ஹபீப் இப்றாஹீம் |