காயல்பட்டினம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், அங்கு தின்பண்டங்களை உட்கொண்ட பின், அவற்றின் கழிவுகளையும், காகிதக் கோப்பை உள்ளிட்ட கழிவுப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே போட்டுவிட்டு, மணற்பரப்பை அசுத்தப்படுத்திச் செல்வது வாடிக்கை.
இக்குறையைப் போக்கி, பொதுமக்களுக்கு தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து கடற்கரையில் “தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்துவதென அதன் நிர்வாகக் குழுவால் திட்டமிடப்பட்டது.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, கடற்கரையில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததைக் கருத்திற்கொண்டு, கடந்த 29.10.2016. அன்றும், 30.10.2016. அன்றும் மாலையில், காயல்பட்டினம் நகராட்சியின் ஒத்துழைப்புடன் கடற்கரையில் தூய்மை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, மாலையில் மூன்றாம் நாள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளும் - அங்கத்தினருமான எஸ்.அப்துல் வாஹித், எம்.ஏ.புகாரீ (48), கே.ஏ.முஹம்மத் நூஹ் (‘மெகா’ நூஹ்), எம்.எம்.முஜாஹித் அலீ, எஸ்.கே.ஸாலிஹ், எம்.ஏ.காழி அலாவுத்தீன் ஆகியோர் கடற்கரை நுழைவாயிலில் முகாமிட்டு, பொதுமக்களுக்கு காகிதப் பைகளை வழங்கி, கடற்கரையில் அவர்கள் மூலம் சேரும் குப்பைகளை அப்பைகளில் இட்டு, வீடு திரும்புகையில் - நுழைவாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லுமாறு - பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடற்கரைக்கு வருவோரை நோக்கி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
இருசக்கர - நாற்சக்கர வாகனங்களில் வந்தோரிடம், வாகனங்களை ஓரமாகவும், வரிசையாகவும் நிறுத்துமாறும், நுழைவாயிலை மறைத்து நிறுத்த வேண்டாம் எனவும் குழுமத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் அதற்கு ஒத்துழைப்பளித்தனர்.
தம் வேண்டுகோளை மதித்து, தமது குப்பைகளைப் பொறுப்புடன் காகிதப் பைகளில் இட்டு, குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர். கடற்கரை துப்புரவுப் பணிக்கு ஒத்துழைப்பு கோரி - அங்கிருந்த தின்பண்ட வணிகர்களிடமும் குழுவினர் வேண்டுகோள் வைத்தனர்.
பொதுவாக பண்டிகை காலங்களில் கடற்கரைக்கு வரும் பெரும் மக்கள் திரள் காரணமாக, அதன் மணற்பரப்பு குப்பை மேடாகக் காட்சியளிப்பது வழமையாக இருக்க, இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு கடற்கரைக்கு வந்த திரளான மக்கள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினருடன் ஒத்துழைத்த காரணத்தால், நீண்ட நேரத்திற்குப் பின்பும் கூட மணற்பரப்பு குப்பைகளின்றி சுத்தமாகக் காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் திரள் அதிகமாக இருக்கும் காலங்களில் இதுபோன்ற முகாம்களை இயன்றளவுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்) |