பல்லாவரம் பயோ காஸ் திட்ட வழக்கில் - பல வாரங்கள் ஆகியும் பதில்களை தாக்கல் செய்யாததால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் திரு பனிந்த்ர ரெட்டி IAS மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு ஜி.பிரகாஷ் IAS ஆகியோருக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையால் விதிக்கப்பட்டது. இது குறித்த முழு விபரம் வருமாறு:
திடக்கழிவுகள் கொண்டு பயோ காஸ் உற்பத்தி செய்து, அதன் மூலம் பெறப்படும் மின்சாரம் கொண்டு தெரு விளக்குகளை இயக்கும் திட்டத்தினை
தமிழக அரசு 2013ம் ஆண்டு அறிவித்தது. மொத்தம் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், 5 மாநகராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும்
அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற மாநகராட்சிகள்:
திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற நகராட்சிகள்:
காயல்பட்டினம், ஓசூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், ராஜபாளையம், நாகர்கோயில், கும்பகோணம், பள்ளிப்பாளையம், பூந்தமல்லி,
மேட்டூர்,ஆவடி, கடலூர், பல்லாவரம், திருவண்ணாமலை, கரூர், உதகமண்டலம்,பொள்ளாச்சி, பழனி, திருத்தணி, திருச்செங்கோடு, நாகபட்டினம்,
மேட்டுப்பாளையம், கோபி செட்டிபாளையம்
இப்பணிகளை காயல்பட்டினம் நகராட்சி உட்பட பல நகராட்சிகள் - மாசு கட்டுப்பாடு வாரியம்
அனுமதியின்றியே துவக்கின.
நீராதாரத்தில் இத்திட்டம் அமைவதாக எதிர்த்து பல்லாவரம் நகராட்சியை சார்ந்த ஒருவர் 2015 இல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது - பல்லாவரம் நகராட்சி உட்பட வேறு பல நகராட்சிகளும் இப்பணிகளை மாசு கட்டுப்பாட்டு
வாரியம் அனுமதியின்றி துவங்கியுள்ளன என்ற தகவல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (மார்ச் 14, 2016) நாளிதழில் வெளியானது. அந்த நாளிதழ், இந்த தகவலை - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிட்டிருந்தது.
மேலும் - இத்திட்டங்களில், மாநில அளவில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளன என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, காயல்பட்டணம்.காம் நிர்வாகியை நேரில் ஆஜராகி ஆதாரங்கள் வழங்கிட பசுமை தீர்ப்பாயம் கோரியது.
அதனை தொடர்ந்து, காயல்பட்டணம்.காம் நிர்வாகி - சுமார் 200 பக்கங்கள் அடங்கிய ஆவணத்தை - ஏப்ரல் 7 அன்று, தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து - நீதிபதி ஜோதிமணி, பல்வேறு நகராட்சிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அரசு தரப்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறை முதன்மை செயலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் ஆகியோரை வழக்கில் இணைக்க தெரிவித்தார். அவ்விருவரும் - ஆகஸ்ட் 1 அன்று, அவ்வழக்கில் இணைக்கப்பட்டனர்.
இடைக்காலத்தில் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கு மீண்டும் - நேற்று (நவம்பர் 3) விசாரணைக்கு வந்தது.
வழக்கில் இணைக்கப்பட்டு பல வாரங்கள் ஆகியும், இது வரை பதில்கள் தாக்கல் செய்யாத காரணத்தால் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறை முதன்மை செயலர் திரு பனிந்த்ர ரெட்டி IAS மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு ஜி.பிரகாஷ் IAS ஆகியோருக்கு
தலா 10,000 ரூபாய் அபராதம், தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்டது.
தினமலர் (சென்னை பதிப்பு) - 4/11/2016
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (சென்னை பதிப்பு) - 4/11/2016
மேலும் - அவ்விருவரும், ஒரு வாரத்தில் பதில்களை எதிர்தரப்பு வழக்கறிஞர்களிடம் கொடுக்கவேண்டும் என்றும், மீண்டும் இவ்வழக்கு டிசம்பர் 1 அன்று விசாரணைக்கு வரும் என்று நீதிபதி எம்.எஸ்.நம்பியார் தெரிவித்தார்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமீபத்தில் இவ்வழக்கில் வெளியிடப்பட்ட ஆணைகள்
செப்டம்பர் 16, 2016
ஆகஸ்ட் 31, 2016
ஏப்ரல் 7, 2016
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 11/11/2016 7:50 am]
|