எல்லாம் வல்ல அல்லாஹுவின் அளப்பெரும் கிருபையால் செளதி அரபிய்யா – ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 37-வது பொதுக்குழு, 15 ஆம் ஆண்டு துவக்கம் 100-வது செயற்குழு, 08-வது அமர்விற்கான நிர்வாகிகள் தெரிவு செய்தல் மற்றும் காயலர்களின் குடும்ப சங்கமம், என இணைந்து, ஐம்பெரும் விழாவாக, ஜித்தா மலிக் அப்துல் அஜீஜ் சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்துள்ள "அஸ்ஸஃப்வா" ஓய்வில்லத்தில் கடந்த 10-02-2017 வெள்ளிக்கிழமை காலை 08:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மிகச்சிறப்பாக நடந்தேறிய அந்நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் அறிக்கை யாதெனில்:
வரவேற்பு:
ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா, ஷரஃபியா, ஆர்யாஸ் உணவகம் முன் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர், மன்ற நிர்வாகிகள் மற்றும் வாகனமுள்ளோர் தமது வாகனங்களில் முற்கூட்டியே வந்து சேர்ந்தனர். மக்காவிலிருந்து ஏற்பாடு செய்யப்படிருந்த வாகனம் மூலம் தனி உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களும் சகோ.எம்.எ.செய்யது இப்ராஹிம் தலைமையில் திரளாக வந்து சேர்ந்தனர். ராபிக், யான்பு மற்றும் மதீனாவில் இருந்தும் ஏராளமான உறுப்பினர்கள் தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருந்தனர். வருகை தந்த அனைவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர், சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், சகோ. முஹம்மது ஆதம், சகோ. எம். எஸ்.செய்யது முஹியத்தீன் ஆகியோர் அகமகிழ வரவேற்றனர்.
காலை உணவு:
வந்திருந்தோர் அனைவருக்கும் சுவைமிக்க காலை உணவு பசியாற இட்லி, சாம்பார், சட்னி, உளுந்துவடை, பொங்கல் பஃபே முறையில் பரிமாறப்பட்டு, தேயிலை மற்றும் காப்பியுடன் உபசரிக்கப்பட்டது. வந்திருந்தோர் முகமலர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உற்சாகமாக உரையாடி, நலம் விசாரித்துகொண்டிருந்தனர். மறுபுறம் துணைப் பொருளாளர் சகோ.எம்.எம்.எஸ்.செய்கு அப்துல்காதிர், சகோ.பிரபு எஸ்.ஜே. நூர்த்தீன் நெய்னா இருவரும் வருகை தந்த உறுப்பினர்களின் பெயர்களை பதிவேட்டில் பதிவு செய்தும், உறுப்பினர்கள் சந்தா மற்றும் நன்கொடைகளை மனமுவந்து செலுத்தியதை பெற்றும், அதற்கான ரசீதுகளையும் உடன் அளித்து கொண்டனர். புதிய சகோதரர்களும் தங்களை மன்றத்தில் இணைத்து உறுப்பினராகினர்.
அனைவருக்கும் ஆயத்த ஆடைகள் அளித்தல்:
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஆடவர்கள், மாணவர்கள் அனைவருக்கும் ஐம்பெரும் விழா இஸ்பேசலாக தமிழகம் திருப்பூரில் தயாரித்து வந்த ஆயத்த ஆடைகள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இதனை சகோதரர்கள் சோனா ஏ.டி.ஹுசைன் ஹல்லாஜ், பொறியாளர் தோல்ஷாப் எம்.ஏ.சி.முஹம்மது லெப்பை மற்றும் பொறியாளர் யூ.எல்.செய்கு அப்துல்காதர் ஆகியோர் விநியோகம் செய்தனர்.
விளையாட்டு போட்டிகள் :
முதலாவதாக வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. வாடி வாசல் திறந்து துள்ளிக்குதித்து வந்த காளைகள் போல், காயல் காளையர்கள் போட்டிக்காக வீறுகொண்டு எழுந்தனர். போட்டி ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர், சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா எஸ்.ஹெச்.மொஹுதூம்முஹம்மது, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.சோல்ஜர் எஸ்.எ.எஸ்.ஷெய்கு அப்துல்லாஹ், சகோ.எஸ்.ஹெச். அமீர் சுல்தான், ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மன்றத் தலைவர் சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் போட்டிக்குழுவிற்கு சில ஆலோசனைகள் வழங்கி சிறு குழுக்களாக பிரித்து புதுமை காயல், தூய்மை காயல், பசுமைக்காயல், என்பன போன்ற அழகிய காயல் பெயரிட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். சிறுவர்கள், சிறுமியர்கள், மழலைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர்.
பெரியவர்களுக்கு வெளி விளையாட்டரங்கில், முதலாவதாக கால்பந்து பெனால்டி கிக் போட்டியும், அதனைத் தொடர்ந்து வாலிபால் போட்டியும் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு வழமையான உற்சாகத்துடன் நடைபெற்றது. அடுத்து முழங்காலுக்கு கீழ் பலூன் கட்டப்பட்டு அதனை உடைப்பது என்ற விளையாட்டுப் போட்டிகள் மிகுந்த ஆரவாரத்துடன் நடந்தது. காயல் மண்ணில் இருந்தது போன்ற எண்ணம் மனதில் ஏற்பட, மகிழ்ச்சியை உணரமுடிந்தது. போட்டியில் கலந்து கொண்ட பெரியவர்கள் காயல் தெருக்களில் விளையாடும் சிறார்களாக மாறி கள்ள விளையாட்டு - நசுவினி ஆட்டம் ஆடமுற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண்முன் கொண்டுவந்தது. போட்டியில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடும் சிறுவர்களாக மாறினர்.
குட்டீஸ் போட்டிகள்:
மறுபுறம், குட்டீஸ்களுக்கான வெளி விளையாட்டரங்கில் மழலைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், பலூன் உடைத்தல், வளையம் சுற்றல், ஓட்டபந்தயம் என அனைத்து போட்டிகளிலும் மழலைகளும், சிறுவர்களும், சிறுமியர்களும் மிகுந்த சந்தோசத்துடனும் சுறு சுறுப்புடனும் கலந்துகொண்டனர். சிறார்களின் விளையாட்டுக்களை தாய்மார்கள் கண்டு ரசித்தனர். குழந்தைகளுக்கான அனைத்து போட்டிகளையும் சகோ.அரபி ஷுஅய்ப், சகோ.முஹம்மது ஷமீம் ஆகியோர் முன்னின்று அழகுற நடத்தினர்.
மங்கையர்களுக்கான போட்டி:
விசாலாமான உள்ளரங்கில் மங்கையர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. இசைப்பந்து, சைகை மொழி அறிதல், கிளாசில் பந்து போடுதல், பலூன் காற்றின் மூலம் கிளாசை தள்ளுதல் போன்ற போட்டிகளும் காயல் தமிழ், வினாடி வினா போன்ற பொழுபோக்கு நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. மங்கையர்களுக்காண போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர். மங்கையர் மற்றும் மழலைகள் மகிழ்ச்சி பெருக்கால் திளைத்தனர்.
ஜும்ஆ தொழுகை:
ஜும்ஆ தொழுகை நேரமானதால் மதியம் 12:௦௦ மணிக்கு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டது. பின் உள்ளரங்கில் 12:35 மணிக்கு ஜும்ஆ துவங்கியது, இடைப்பட்ட நேரத்தில் காயல் காளையர்கள் நீச்சல் குளத்தில் நீராடி மகிழ்ந்தனர். அதன் பிறகு குத்பா பேருரை ஆலிம் பெருந்தகை லால்பேட்டை சேக் இம்தாதுல்லாஹ் ஜமாலி, அவர்களால் நிகழ்த்தப்பட்டு தொழுகை நிறைவேற்றப்பட்டது. குத்பா பேருரையில், இஸ்லாம் கூறும் நற்ப் பண்புகள், இஸ்லாமில் ஈகை குறித்த தகவல், ஒரு முஸ்லீமின் நன்னடத்தை எவ்வாறு அமையவேண்டும், ஒரு முஸ்லிம் எவ்வாறு ஈகையாளியாக இருக்க வேண்டும், பிறரிடம் நாம் செலுத்தும் அன்பு மற்றும் பிறருக்கு நாம் செய்யும் நல்லுதவி இவைகள் மூலம் ஈருலக வாழ்வில் நாம் பெறும் நன்மைகள் பற்றிய விரிவான மிக அழகான செய்திகளை ஜும்ஆ பேருரையாக தந்து தொழுகையை வழி நடத்தினார்.
பொதுக்குழு கூட்டம்:
37- வது பொதுக்குழு ஜும்மா தொழுகை நிறைவேற்றிய பின் ஆரம்பமாகியது. இதற்க்கிடையில் பெண்களுக்கு களரி சாப்பாடு பரிமாறப்பட்டது. குறுகிய நேரமின்மையை கருத்திற்கொண்டு சுருக்கமாக உரை நிகழ்த்தப்பட்டது. பொதுக்குழுவிற்கு மன்றத்தின் தலைவர் குளம் எம். ஏ. அஹ்மது முஹியத்தீன் தலைமை ஏற்று நடத்த, துணைத்தலைவர்மருத்துவர் முஹம்மது ஜியாது அபூபக்கர், ஆலோசகர் சகோ.ஆதம் சுல்தான், மூத்த உறுப்பினர் பொறியாளர் கே.எம்.கமால் ஹாதி, யான்பு பிரதிநிதி பொறியாளர் எஸ்.ஹெச். நெய்னா முஹம்மது, மூத்த உறுப்பினர் சகோ.ஒ.எல்.சம்சுதீன் மற்றும் எங்களின் அன்பு அழைப்பினை ஏற்று சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஆலிம் பெருந்தகை லால்பேட்டை ஷேக் இமாதுல்லாஹ் ஜமாலி, கீழக்கரை சகோ.சீனி முகம்மது ஆகியோர் முன்னிலை வகிக்க, சகோ. அல்ஹாபிழ் எம்.என்.முஹம்மது ஸாலிஹ் தனது இனிய குரலில் கிராத் ஓதி துவக்கி வைக்க சகோ.சட்னி. எஸ்.ஏ.கே. செய்து மீரான் வந்திருந்த அனைவர்களையும் அகங்குளிர வரவேற்று அமர்ந்தார். சகோ.எம்.டபிள்யூ. ஹாமீது ரிஃபாய் நிகழ்சிகளை நெறிபடுத்தினார்.
மன்றத்தலைவர் சுருக்கமாக என் தலைமையின் கீழ் பயணித்த இம்மன்றம் இனி புதிய தலைமையில் புது பொலிவுடன் செயலாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தலைமையுரையாற்றி அமர்ந்தபின், மன்றத்தின் ஆரம்ப செயல்பாடுகள், உறுப்பினர்களின் உத்வேக மிக்க களப்பணிகள், நமது ஒற்றுமை, சந்தா என்ற நமது சிறு நிதியை மன்றத்திற்கு வழங்கியதின் நிமித்தம் இம்மன்றம் செய்த பாரிய உதவிகள் அதனால் இறைவன் புறத்திலிருந்து நம்மை அறியாது நாம் பெற்றிடும் அளப்பரிய நன்மைகள் குறித்த செய்திகளை சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் இரத்தின சுருக்கமாக உரை தந்தார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் நாம் கடல் கடந்து சம்பாதிக்க வந்த இடத்தில் நம்மூர் நலனுக்காக நாம் ஒற்றுமையாக இருந்து சேவைகளை செய்வதை நினைத்து உள்ளம் உவகை கொள்கிறது. அனைவரும் உதவிட தானாக முன்வரவேண்டும் என்று உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆரம்ப கால செயற்குழு உறுப்பினர் சகோ.எஸ்.எஸ்.ஜாபர் ஸாதிக் அனைத்து செயற்குழு உறுப்பினர்களின் சார்பாக கருத்துக்களை பதிந்ததுடன் தற்போதைய இந்த நிர்வாக குழு மிகவும் அழகிய முறையில் புரிந்துணர்வுடன் செயலாற்றி வருவதுடன், நல்ல சேவைகளை செயல் படுத்தி வருவதாலும் இதுவே ஒரு சில மாற்றங்களுடன் தொடர்வது சாலச்சிறந்தது எனவும் எடுத்துரைத்தார்.
புதிய நிர்வாகத்தை தெரிவு செய்தல் :
புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்வின் கண்காணிப்பாளர் சகோ.பிரபு எஸ்.ஜே.நூர்த்தீன் நெய்னா மற்றும் சகோ.சோல்ஜர் எஸ்.டி.ஷெய்கு அப்துல்லாஹ் மேற்பார்வையில் கடந்த நிர்வாகக்குழு முழுவதுமாக கலைக்கப்பட்டு, 8- வது அமர்வில் வரும் இரு ஆண்டுக்கான (2017-2018) புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. வந்திருந்த அனைத்து உறுப்பினர்களின் நீண்ட நெடிய வாதப் பிரதிவாதங்களுடன் அல்லாஹ்வும் அவனது இறுதி நபிகளாரும் இயம்பி விரும்பிய மசூரா எனும் கலந்தாலோசனையின் பிரகாரம் பெரும்பாலானோரின் ஏகோபித்த முடிவின் படி மீண்டும் அதே தலைமையில் தொடர வேண்டும் என்று தக்பீர் முழக்கத்தோடு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. புதிய ஐந்து செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ். அதன் முழு விபரம் அடுத்த செய்தி மூலம் தெரியபடுத்தப்படும்.
காயல் களரி சாப்பாடு:
புதிய நிர்வாகம் தெரிவு செய்தபின் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டு, சுவைமிகுந்த காயல் மண்ணுக்கு சொந்தமான களரி சாப்பாடு பரிமாறப்பட்டது. நெய்ச்சோறு, களறி கறி, கத்தரிக்கா-மாங்கா என காயலை நினைவுபடுத்தி அதன் அதீத மனத்தால் மீண்டும் காயல் மண்ணுக்கே அனைவரையும் இழுத்துச்சென்றது. சுவைமிக்க களரி சாப்பாடு சகோ. எஸ்.எஸ். ஜாபர் ஸாதிக் தலைமையில் சகோதரர்கள் பாளையம் எம்.ஏ. செய்யது முஹியத்தின், வேணா எஸ்.எஸ்.அஹமது சித்தீக் , கீழக்கரை பொறியாளர் தாஹிர் ஹுசைன், சட்னி எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி பொறியாளர் எம்.எம்.முஹம்மது முஹியத்தின், அல்ஹாபிழ் பொறியாளர் எஸ்.எம்.செய்கு ஆலம், பொக்கு முஹியத்தின் சாஹிப் வீபி என்ற வி.எம்.டி .முகம்மது அலி, மற்றும் யவுனி எம்.எஸ்.அபூபக்கர் சித்தீக் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்தனர்.
இசைப்பந்து விளையாட்டு:
உண்ட உணவு மிக ஆரோக்கியமான முறையில் செரிக்க வைக்கும் புது முயற்சியாக இசைப்பந்து விளையாட்டு நடைபெற பெரியோர் முதல் சிறியோர் வரை யாவரும் கலந்து கொள்ள அனைவரின் உற்சாக கைதட்டல், விசில் மற்றும் ஆரவாரத்துடன் நடைபெற்று இப்போட்டியில் இறுதியாக சகோ.அல்ஹாபிழ் எம்.ஏ.சி. ஷாஹ் மீரான் சாஹிப் ரியாஸ் வெற்றி பெற்றார்.
காயல் மரபு சொல் விளையாட்டு:
அஸர் தொழுகைக்குப்பின் சிப்ஸ் மற்றும் பால் சுவையுடன் உள்ளரங்க போட்டி ஆரம்பமானது. காயல் பிரத்யோக மரபு சொல் விளையாட்டு, நமதூர் சம்பந்தப்பட்ட பொது அறிவுப் போட்டி மற்றும் இஸ்லாமிய கேள்வி பதில், என்ற ஒரு அழகான தொகுப்பை காணொளி காட்சி மூலம் திறையிட்டு காட்டி, 5 பேர்கொண்ட 9 குழுக்களாக பிரிக்கப்பட்ட குழுவிடம் நம்பர் ஸ்லைட் காட்டி, நம்பர் ஒன்று தெரிவு செய்த பின், திரையில் தோன்றும் அந்த நம்பரின் வினாவிற்கு தகுந்த பதில் கூற வேண்டும். காயல் சகோதரர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டதில் நேரம் சென்றதே தெரியவில்லை. இப்போட்டியினை அருமையாக தயாரித்து நடத்தியவர்கள் சகோ.சீனா-எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது, சகோ.ஒய். எம் முஹம்மது ஸாலிஹ்.
செயற்குழு கூட்டம்:
மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு 100-வது செயற்குழு மருத்துவர் முஹம்மது ஜியாது அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது. காயல் சங்கமத்தின் இடைவிடாத உற்சாக விளையாட்டினால் நேரமின்மையை கருத்தில் கொண்டு சில அறிவிக்கபட்ட போட்டிகள் நடத்தமுடியவில்லை மேலும் செயற்குழு மிக சுருக்கமாக நடைபெற்றது. நிதிநிலை அறிக்கையை சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் அன்றையதினம் வசூலான அதிகமான சந்தாமற்றும் நன்கொடை தொகைதனை எடுத்துரைத்தார்.
நம் நகரின் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபா விலிருந்து வந்திருந்த மருத்துவ மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படும் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா ஆரம்பமானது.
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின்குழந்தைகள் வந்து பரிசுகளை மிக குதூகலத்துடன் வாங்கி சென்றனர்.
மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாத், சகோ. எஸ்.எஸ். ஜாபர் சாதிக், சகோ.சட்னி.எஸ்.ஏ.கே.செய்து மீரான், பொறியாளர் கமால் ஹாதி, யான்பு சகோ.ஆதம் சுல்தான், பொறியாளர் நெய்னா முஹம்மது , சகோ.கலவா.எம்.எ.முஹம்மது இபுராஹீம் மற்றும் மக்கா, சகோ.சீனா-எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது, சகோ.ஒய். எம் முஹம்மது ஸாலிஹ், சகோ.எம்.ஏ.செய்து இப்ராஹிம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
பம்பர் பரிசு குலுக்கல் :
இறுதியாக வருகை தந்து, இறுதி வரை நிகழ்வில் இருந்த உறுப்பினர்களை உற்சாகமூட்டும் வண்ணம் குலுக்கல் முறையில் இந்நிகழ்வின் முத்தாய்ப்பான பம்பர் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. இம் மெகா குலுக்கலில் அதிர்ஷ்டசாலியாக புனித மக்கா சங்கைமிகு ஹரம் ஷரீப் எதிரில் உள்ள புதிய ஹில்டன் கான்ராட் (Hilton Conrad Tower) என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் காலை சிற்றுண்டி உணவுடன் சொகுசான அறையில் நல்ல வசதியுடன் தலா இரண்டு நபர்கள் குடும்பத்துடன் இரு அறையில் தங்கிட நல்லதோர் வாய்ப்பினை பெற்றுக்கொண்டவர்கள் சகோ.சீனா. எஸ்.ஹெச்.மொக்தூம் முஹம்மது மற்றும் சகோ.பி.எம். ஹெச். முஹம்மது இக்பால்.
நன்றியுரை :
இந்த நிகழ்வு இனிதே நடந்தேற உதவிய வல்ல இறைவனுக்கு முதலில் நன்றியை செலுத்திவிட்டு....
எங்களது அழைப்பினை ஏற்று பல சிரமங்களை பொருட்படுத்தாது தூரம் தொலைவுகளில் இருந்து வந்திருந்த அனைவருக்கும் இந்த இனிய நிகழ்வு நடைபெற எல்லா வகைகளிலும் உதவிய, ஒத்துழைத்த, சந்தா – நன்கொடை , மற்றும் அனுசரணைகள் பல வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் சகோ.குளம் எம்.ஏ. அஹ்மது முஹிய்யதீன்.
சகோ. அல்ஹாபிழ் எஸ். கே.செய்து அபூ தாஹிர் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இம்மாபெரும் ஐம்பெரும்விழா இறையருள் சூழ இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
காயலர்கள் அனைவரும் கவலைகள் மறந்து "ஓடி விளையாடு பாப்பாவாக" மாறிய இந்நாளை மறக்க முடியுமா? என்ற விடை தேடும் வினாவுடன் ஒரே நாளில் விமான பயணச்சீட்டு, கடவு சீட்டு, விசா இன்றி ஊர் சென்று திரும்பிய மன திருப்தியுடன் சந்தோசத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் மீண்டும் இது போன்ற இனியதோர் நாள் வர வேண்டும் என்ற நல்ல பிரார்த்தனையுடன் திருப்தியான நல்ல எண்ணத்துடன் மகிழ்வாய் அவரவர் இல்லம் நோக்கி திரும்பினர்.
இம்மாபெரும் ஐம்பெரும் நிகழ்வான இக் காயலர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பை சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ.சட்னி எஸ்.ஏ.கே. செய்து மீரான், சகோ.பிரபு எஸ்.ஜே.நூர்தீன்நெய்னா, சகோ.ஒய்.எம்.ஸாலிஹ்,சகோ.சீனா மொகுதூம் முஹம்மது சகோ.அரபி முஹம்மது ஷுஅய்ப், சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மதுஆதம், சகோ.சட்னி எஸ்.எ. முஹம்மதுஉமர்ஒலி, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
செய்தி தொகுப்பு:
எஸ்.ஹெச்.அப்துல்காதர்
சட்னி, எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
புகைப்படங்கள்:
ஜித்தா காயலர் சங்கம வாட்ஸ் அப் குழும அங்கத்தினர்கள்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
10.02.2017.
|