காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - 5 மருத்துவர்களைக் கொண்டு விரைவில் 24 மணி நேரமும் இயங்கும் என, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தமிழ்நாடு அரசின் மாநில மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் (DMS) தகவல் தெரிவித்துள்ளார். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நான்கு மருத்துவர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அங்கு நீண்ட காலமாக ஒரு மருத்துவரே பணியில் உள்ளார்.
இம்மருத்துவமனை குறைந்தது நான்கு மருத்துவர்களுடன் இயங்க வேண்டும் என்றும், கூடுதலாக இரு மருத்துவர்கள் (மொத்தம் 6) நியமிக்கப்பட வேண்டும் என்றும் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை அரசு செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS, சென்னையில் உள்ள மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் (DMS), தூத்துக்குடியில் உள்ள மருத்துவத் துறை இணை இயக்குநர் ஆகியோரிடம் காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை மனுக்களை அளித்து, இதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள மருத்துவ சேவைகள் துறையின் இயக்குனர் (DMS) டாக்டர் செங்குட்டுவனை - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் நேரடியாகச் சந்தித்து - அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் பற்றாக்குறை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தொடர்பாக, அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS தன்னிடம் விரிவாகப் பேசியுள்ளதாகத் தெரிவித்த இயக்குநர், விரைவில் காயல்பட்டினம் மருத்துவமனைக்கான மருத்துவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்த்தப்பட்டு, 24 மணி நேரமும் இயங்கும் மையமாக மாற்றப்படும் என உறுதியளித்தார்.
இது தொடர்பாக - காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தனது பொறுப்புக்காலத்தின்போது, சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS இடம் பலமுறை தொடர் கோரிக்கை மனுக்களை அளித்ததும், அதன் தொடர்ச்சியாக - அரசு செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS, காயலபட்டினம் அரசு மருத்துவமனையை கடந்த 2015ஆம் ஆண்டு நேரடியாகப் பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கவை.
இவ்வாறிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பு - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள், சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS-ஐ மீண்டும் சந்தித்து - நீண்ட நாட்களான இக்கோரிக்கையை மீண்டும் நினைவூட்டினர்.
தனது பதவிக் காலம் முடியும் இறுதி நாளில் கூட தன்னைத் தொலைபேசியில் அழைத்து – நகர்மன்ற முன்னாள் தலைவர் இது தொடர்பாகப் பேசியதாக நினைவுகூர்ந்துப் பேசிய செயலர், தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்குச் செய்வதாக உறுதி அளித்திருந்துள்ளார்.
|