காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அடுத்த சில நாட்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக, “நடப்பது என்ன?” நிர்வாகிகளிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் நான்கு மருத்துவர்களுக்கான பணியிட அனுமதி (SANCTIONED) வழங்கப்பட்டும், ஒரு மருத்துவர் மட்டுமே தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார். இதனால் மருத்துவச் சேவைகள் முழுமையாக மக்களுக்கு சென்றடைவதில்லை. மேலும் - பெண் மருத்துவரும் (GYNECOLOGIST), அரசு மருத்துவமனையில் நியமனம் செய்யப்படவில்லை.
45,000 மக்கள் வாழும் ஊர் என்ற அடிப்படையிலும், அருகாமையில் உள்ள ஊர் மக்களும் இம்மருத்துவமனை மூலமாக பயன்பெற்று வருவதைக் கருத்திற்கொண்டும் – அனுமதிக்கப்பட்டுள்ள 4 மருத்துவ பணியிடப் பொறுப்புக்களுக்கு உடனடியாக மருத்துவர்களை நியமிக்கக் கோரியும், கூடுதலாக இரண்டு பொறுப்புகளுக்கு அனுமதி வழங்கக் கோரியும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - சுகாதாரத் துறையின் அரசு முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS இடம் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள், சென்னையிலுள்ள சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து, மீண்டும் விரிவான மனு வழங்கி - ஏற்கனவே வழங்கப்பட்ட மனுக்களின் மீதான நடப்பு நிலை குறித்துக் கேட்டறிந்தனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு Medical Recruitment Board (MRB) தேர்வுகள் முடிவுற்றுள்ளதாகவும், தற்போது தேர்வுத் தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் - தேர்வு முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாகிவிடும் என்றும், அதனைத் தொடர்ந்து - புதிய நியமனங்கள் செய்யப்படும் என்றும், அதற்குப் பிறகு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இனி மருத்துவர்கள் தட்டுப்பாடு இருக்காது என்றும் தலைமை செயலக சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இது தொடர்பான கோரிக்கை மனு, அரசு சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS இடமும், மருத்துவ சேவைக்கான இயக்குனரிடமும் (DMS) - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மீண்டும் வழங்கப்பட்டது.
|