காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், காயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்வதைக் கண்டித்து, மனுக்கள் சமர்ப்பிப்பது, ஆர்ப்பாட்டம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கடந்த 2016 ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
இத்தொடர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்துசெல்ல வேண்டிய அனைத்து அரசுப் பேருந்துகளும், முறையாக காயல்பட்டினம் வழியாக வந்து செல்வதாக - தொடர்புடைய போக்குவரத்துக் கழகங்கள், அரசுக்கு பதில்கள் அனுப்பியுள்ளன. இதனை உறுதி செய்வதற்காக, 04.01.2017. புதன்கிழமை காலை 08.00 மணி முதல் மறுநாள் 05.01.2017. வியாழக்கிழமை காலை 09.00 மணி வரை - காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில் 24 மணி நேர கண்காணிப்பு செய்யப்பட்டது.
[படங்கள்: கோப்பு]
அதில் - காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய சுமார் 500 பேருந்துகளில், (இறுதி செய்யப்பட்ட பட்டியலின் படி) 314 பேருந்துகளே காயல்பட்டினம் வழியாக இயக்கப்படுவது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக விரிவான அறிக்கையை, சென்னையில் உள்ள தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மை செயலர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே IASயிடம் – “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில், நேரடியாகச் சந்தித்து வழங்கினர்.
இந்த சந்திப்பின்போது, சமூக ஆர்வலர் டைமண்ட் செய்யித் உடனிருந்தார். ஆவணங்களைப் பார்வையிட்டு விபரங்களைக் கேட்டறிந்த அரசு முதன்மைச் செயலர், இதுகுறித்து, முழு - தொடர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
|