காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாகக் காட்சியளிக்கிறது. கடந்த நகர்மன்றப் பருவத்தின்போது, இங்கு - தரமான தார் சாலைதான் அமைக்கப்பட வேண்டும் என்று நகர்மன்றத் தலைவரும், பேவர் ப்ளாக் சாலைதான் அமைக்கப்பட வேண்டும் என்று நகர்மன்ற பெரும்பான்மை உறுப்பினர்களும் வலியுறுத்த, நிறைவில் - பேவர் ப்ளாக் சாலை அமைக்க நகர்மன்றக் கூட்டத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானிக்கப்பட்டது.
அங்கு பேவர் ப்ளாக் சாலை அமைவதை எதிர்த்தும், தரமான தார் சாலையே அமைக்கப்பட வேண்டும் என்று கோரியும் - நகர பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் வலுவாகக் கோரிக்கை விடுத்ததையடுத்து, தற்போது அங்கு தார் சாலை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு, பணியாணையும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொச்சியார் தெருவுக்குப் பின்புறமுள்ள தெருவிலிருந்து, பண்டக சாலைத் தெரு வழியாக கீரிக்குளத்திற்கு மழை நீர் செல்வதற்கு, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் வடிகால் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்துள்ளது. இப்பணி காரணமாக சாலையின் அப்பகுதி மறைக்கப்பட்டு, தென்புறத்தில் பக்கவாட்டு வழியாக போக்குவரத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
[படங்கள் 30.01.2017. அன்று பதிவு செய்யப்பட்டவை!]
பணியாணை வழங்கப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இன்றளவும் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் புதிய சாலை அமைப்பதற்கான துவக்க நிலைப் பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.அறிவுச் செல்வனிடம் காயல்பட்டணம்.காம் வினவியபோது, அங்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினார். அப்பணி நிறைவுற்று வாரங்கள் பல கடந்துவிட்டதை அவருக்கு உணர்த்தியபோது, ஓரிரு நாட்களில் புதிய சாலை அமைக்கும் பணி துவங்கும் என்று அவர் காயல்பட்டணம்.காம் இடம் தெரிவித்தார். |