சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 03.02.2017. அன்று 20.00 மணி முதல் 21.10 மணி வரை, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத்தின் துணைத் தலைவர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தலைமையுரையாற்றினார். துவக்கமாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய அவர், இதுகாலம் வரை மன்ற உறுப்பினர்கள் அளித்து வரும் மனப்பூர்வமான தொடர் ஒத்துழைப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
விரைவில் நடத்தப்படவுள்ள - மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பின்வருமாறு வகைப்படுத்திக் கலந்தாலோசிக்கலாம் என்றார் அவர்:-
வருடாந்திர பொதுக்குழு ஏற்பாடுகள்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தையும், குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையும் இதுகாலம் வரை ஒரே நேரத்தில் நடத்தியது போலல்லாமல், பொதுக்குழுவை இன்னும் விரிவாக நடத்திடுவதற்கும், குடும்ப சங்கம நிகழ்ச்சியில் கூடுதல் அம்சங்களுடன் உறுப்பினர்களின் ஆர்வத்தை நிறைவுற பூர்த்தி செய்வதற்குமாக - இவ்வாண்டு முதல் இவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் தனித்தனியாக நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக, வழமை போல சிறப்புக் குழு நியமிக்கப்பட வேண்டும். மன்றத்தின் நிர்வாகக் கட்டமைப்பு - தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர், துணைப் பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால் அதன் படி 2017-2019 பருவத்திற்கான புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இப்பொறுப்புகளுக்கு புதிதாகப் பொறுப்பேற்க முன்வருமாறு மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முறைப்படி அனுப்பி வைக்கப்படும். வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் குறித்த அறிவிப்பு, வேட்பு மனு உள்ளிட்டவை, 18.02.2017. அன்று வெளியிடப்படும்.
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை, 19.03.2016. அன்று 10.00 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடத்தலாம்.
குடும்ப சங்கம நிகழ்ச்சியை, 01.04.2017. அன்று - Cottage 7, Aloha Changiயில், பிற்பகல் துவங்கி தொடர்ந்து நடத்தலாம்.
குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போது, மன்றத்தின் மருத்துவர்களைக் கொண்டு உடல் நல விழிப்புணர்வு & வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தலாம்.
இவ்வாறாக, கூட்டத் தலைவர் தனதுரையில் திட்டங்களை முன்மொழிந்தார். உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான - ஷிஃபா அறக்கட்டளை மூலம் விரைவில் காயல்பட்டினத்தில் துவக்கப்படவுள்ள “மக்கள் மருந்தகம் - Genering Medical Store” குறித்த – இதுநாள் வரையிலான ஏற்பாடுகள் குறித்தும் அவர் கூட்டத்தில் விளக்கினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை & வரவு - செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை, செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் விளக்கிப் பேசி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார்.
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையை அதற்கான பொறுப்பாளர் முஹம்மத் உமர் ரப்பானீ - கூட்டத்தில் சமர்ப்பித்து, ஒப்புதலைப் பெற்றார். 2016ஆம் ஆண்டிற்கான கணக்குத் தணிக்கை அறிக்கை விரைவில் ஆயத்தம் செய்யப்பட்டு, அடுத்த செயற்குழுக் கூட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
சிங்கப்பூர் DNH கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் புதிதாகப் பணியில் இணைந்துள்ள காயலர் சாளை மகுதூம் நெய்னா இக்கூட்டத்தில் தன்னறிமுகம் செய்துகொண்டார். அவரைப் புதிய உறுப்பினராகக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய உறுப்பினர்கள், சிங்கப்பூரில் அவரது இருப்பு சிறக்க வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
கத்தர் கா.ந.மன்றத்துடன் இணைந்து பள்ளிச் சீருடை உதவி:
கத்தர் காயல் நல மன்றத்தால் முன்னெடுத்துச் செய்யப்பட்டு வரும் - ஏழை மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடை இலவச வினியோகத் திட்டத்தின் கீழ், வரும் புதிய கல்வியாண்டில் 25 செட் பள்ளிச் சீருடைகளுக்கு மன்றத்தின் சார்பில் அனுசரணையளிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இக்ராஃ மூலம் ஐஏஎஸ் / ஐபீஎஸ் பயிற்சி:
உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கம் மூலம், காயல்பட்டினம் நகர மாணவ சமுதாயத்தை ஐஏஎஸ் / ஐபீஎஸ் உள்ளிட்ட உயர்கல்வி & அரசுப் பணி சார்ந்த சிறப்புக் கல்விப் பிரிவுகளின் பால் ஆர்வமூட்டி, முறையான பயிற்சியளிப்பதற்கான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மன்ற துணைத்தலைவர், இவ்வகைக்காக மன்றத்தின் சார்பில் 20 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்வதாகத் தெரிவித்தார்.
வசிப்பிட நலத்திட்ட நிகழ்ச்சி:
மன்றம் இயங்கி வரும் சிங்கப்பூர் நாட்டிலும் - மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கடந்த ஆண்டைப் போல நடப்பாண்டும் - சிங்கப்பூரிலுள்ள முஹம்மதிய்யா மாணவர் நல இல்லத்தில் தங்கிப் பயிலும் - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மாணவர்களுக்கு ஒரு நாள் காலை உணவு (Breakfast) ஏற்பாட்டையும், அடுத்த வாரத்தில் அங்கு சில பொறுப்பாளர்கள் சென்று - அங்குள்ள தேவையை அறிந்து வருவதைப் பொருத்து, தேவைப்படும் இதர சில உதவிகளையும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டிகள் நிலவரம்:
மன்றத்தின் விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் சாளை ஷேக் ஷீத், வருடாந்திர பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சியை முன்னிட்டு, இதுவரை மன்றத்தால் நடத்தப்பட்டுள்ள / இனி நடத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டிகள் குறித்து விவரித்தார்.
BBQ ஏற்பாட்டுடன் குடும்ப சங்கமம்:
11.02.2017. அன்று 17.00 மணிக்கு, மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் ஏற்பாட்டில், சிங்கப்பூர் Pasir Ris பூங்காவில் BBQ - சூட்டுக் கறி ஏற்பாட்டுடன் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
உண்டியல் திறப்பு:
மன்ற உறுப்பினர்களின் உண்டியல்கள் சேகரிக்கப்பட்டு, இக்கூட்டத்தின்போது திறக்கப்பட்டதில், 33 ஆயிரம் இந்திய ரூபாய் பெறப்பட்டு, மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. இதற்காக உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|