காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய திட்டத்தின் நடப்பு நிலை குறித்த விபரங்களைக் கேட்டும், புதிய கட்டிடத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கக் கோரியும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னையிலுள்ள இயக்குநரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12, 2012 அன்று தமிழக அரசு அரசாணை (GO (Ms) No.130; Health and Family Welfare Department) ஒன்று பிறப்பித்தது. அதன்படி, மாநிலத்தில் புதிதாக 135 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (URBAN PRIMARY HEALTH CENTRES) அமைக்கப்படும் என்றும், அதில் ஒன்று காயல்பட்டினத்தில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து - வார்டு 01 பகுதியில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்கலாம் என்ற பரிந்துரை தீர்மானம் காயல்பட்டினம் நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. சில மாதங்களில், அத்திட்டத்திற்குத் தேவையான 50 சென்ட் நிலமும், கோமான் ஜமாஅத் சார்பாக 2013ஆம் ஆண்டு துவக்கத்தில் வழங்கப்பட்டது. மேலும் - கட்டுமானங்கள் நிறைவுபெறும் வரை - தற்காலிகமாக, ஆரம்ப சுகாதார நிலையம் இயங்க, வாடகை கட்டிடம் ஒன்றும், கோமான் ஜமாஅத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, அதிலேயே இன்றளவும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்காக கோமான் ஜமாஅத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலத்தில் புதிய கட்டிடப் பணிகள் உடனடியாகத் துவங்கப்படவில்லை என்பதால் - இது தொடர்பாக, அந்த ஜமாஅத்தினர், அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஆகியோர் அதிகாரிகளை அணுகிய பிறகும் - அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவக்கப்படவில்லை என தெரிகிறது.
இத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என வினவியும், இதற்கான நிதியை ஒதுக்கி, பணிகளை விரைவில் துவக்கிடக் கோரியும் - சென்னையிலுள்ள தமிழக அரசு சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் IAS இடமும், ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கட்டுப்படுத்தும் National Health Mission துறையின் MISSION DIRECTOR டாக்டர் தரேஸ் அஹ்மத் IAS இடமும் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அதன் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை நேரடியாக வழங்கினர்.
|