பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
சட்டப்பேரவை சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியதும், பேரவைத் தலைவர், அமைச்சரவையின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான தீர்மானத்தை கொண்டு வர முதல்வருக்கு அனுமதி அளித்தார். பலத்த அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏக்கள் முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் பேரவை உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில் திமுகவினருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அணியினர் முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக சட்டப்பேரவையின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பிரிவுகளாக அமர்த்தப்பட்டனர். முதல் மூன்று பிரிவுகளில் அதிமுகவினரும், மற்ற மூன்று பிரிவுகளில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமர்ந்தனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஓபிஎஸ் அணி கொறடா செம்மலை கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் செம்மலை வேண்டுகோள் விடுத்தார்.
''உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும், எம்.எல்.ஏக்களின் உரிமை, மாண்பு பாதுகாக்கப்படும்'' என்று சபாநாயகர் தனபால் கூறினார். சபாநாயகர் தவிர, சட்டப்பேரவையில் 230 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க ஸ்டாலின் கோரிக்கை
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், '' ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்க வேண்டும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன? " என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டே இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி ஸ்டாலின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.
முன்னதாக, சிறைக்கைதிகள் போல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அழைத்து வரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பேரவையில் ஓபிஎஸ் பேசுகையில், ''கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டதை அனைவரும் அறிவர். மக்களின் குரல் பேரவையில் ஒலிக்க, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று வந்த பிறகே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது: சபாநாயகர்
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். மேலும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவு, என் உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றார்.
மக்களை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என்று மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் கோரிக்கை விடுத்தார். இவ்வாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதால் பேரவை தொடங்கி ஒருமணிநேரம் ஆகியும் வாக்கெடுப்பு தொடங்கவில்லை.
1 மணி வரை அவை ஒத்திவைப்பு
இந்நிலையில், வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர், எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருக்கைகளை தட்டியும், காகிதங்களைக் கிழித்தெறிந்தும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமைதி காக்காததைக் கண்டித்து பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார். சபாநாயகரை பாதுகாப்பாக அவை காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பேரவைத் தலைவர் தனபால் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது. இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதி காத்தது குறிப்பிடத்தக்கது.
அவை 1மணி வரை ஒத்திவைக்கப்பட்டதால், சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளியே வந்து, பிறகு பேரவைக்குள் சென்றனர். இந்த இடைவெளியில் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
108 ஆம்புலன்ஸ் வருகை
தலைமைச்செயலகத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தது. ரகளையின் போது மயக்க வந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அவைக்காவலர் பாலாஜி ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் கூடிய சட்டப்பேரவை
ஒத்திவைப்புக்குப் பின்னர் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. சபாநாயகர் தனபால், ''தனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது?அவை விதிகளின்படியே அவையை நடத்த கடமைப்பட்டிருக்கிறேன்'' என்றார்.
திமுகவினர் வெளியேற்றம்; 3 மணி வரை அவை ஒத்திவைப்பு
ரகசிய வாக்கெடுப்பு மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு தேதியை ஒரு வாரம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஸ்டாலின் இரு கோரிக்கைகளை முன்வைத்தார். சபாநாயகர் அதை ஏற்காததால் திமுகவினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் மைக் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்களின் இருக்கையின் மீதேறி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால், ''அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால் திமுகவினரை வெளியேற்ற வேண்டும்'' என்று உத்தரவிட்டார். இதனால் பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறினர். மீண்டும் அமளி ஏற்பட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா
சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
அவையில் இருந்து வெளியேற திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர். தரையில் அமர்ந்து ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய ஸ்டாலின், ''ஜனநாயக முறையில் அறப் போராட்டம் நடத்தினோம். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி அடித்து, உதைத்து சட்டைகளை கிழித்தனர். இது குறித்து ஆளுநரிடம் முறையிடுவோம்'' என்றார்.
அதற்குப் பிறகு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார். ஸ்டாலினுடன் 9 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்திக்க சென்றனர்.
காங்கிரஸ் வெளிநடப்பு
இந்த நிலையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி
3 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானத்துக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.
குரல் வாக்கெடுப்புதான் மரபு. தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளால் எண்ணிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதாக சபாநாயகர் தனபால் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவைக்குள் இல்லாததால் நடுநிலைமை வாக்குகள் எதுவும் இல்லை.
தகவல்:
தி இந்து
|