காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதை நடைமுறையிலுள்ள சாலைகளில் இடையூறுகளை நீக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து, காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
நகரில் நடைமுறையில் உள்ள ஒரு வழிப்பாதை விதிமுறைகள் பரவலாக மீறப்படுவதாலும், இரு - மூன்று - நாற்சக்கர வாகனங்கள் முறைப்படி நிறுத்தப்படுவதில்லை என்பதாலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட முதன்மைச் சாலைகளில் - குறிப்பாக அரசுப் பேருந்துகள் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அடிக்கடி ஏற்படுகிறது.
இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - கடந்த பல மாதங்களாகச் செய்து வருகிறது. இது தொடர்பாக - மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட - தொடர்புடைய துறைகளின் அனைத்து நிலை அதிகாரிகளிடமும், தொடராக மனுக்களை வழங்கியும் வந்துள்ளது.
இதன் பலனாக, 15.02.2017. புதன்கிழமையன்று - திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, “நடப்பது என்ன?” குழுமம் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் ஒன்றான - போக்குவரத்துத் துறை காவலர்கள் - ஊர்காவலர்கள் போக்குவரத்து ஒழுங்குப் பணியில் பணியமர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கை செயல்வடிவம் பெற்றுள்ளது.
16.02.2017. வியாழக்கிழமையன்று நகரின் முக்கிய சந்திப்புகளில் - ஒருவழிப்பாதை விதிமுறைகள் படி வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில், போக்குவரத்துத் துறை காவலர்கள் ஈடுப்பட்டனர்.
“நடப்பது என்ன?” குழுமத்தால் வழங்கப்பட்ட மனுக்களை அடிப்படையாகக் கொண்டு, அன்று 17.00 மணிக்கு - காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) ஜி.ராமராஜன் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.அறிவுச் செல்வன் முன்னிலையில், நகராட்சி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துவக்கமாகப் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.ராமராஜன், பெறப்பட்டுள்ள கோரிக்கைகளின் அடிப்படையில், நகரில் போக்குவரத்துக் காவலர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஒருவழிப்பாதையில் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பேருந்துப் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அனைத்தும் விரைவில் அகற்றப்படும் என்றும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பளிக்குமாறும் கூற, முழு ஒத்துழைப்பளிக்க அனைவரும் உறுதி கூறினர்.
நிறைவில், “நடப்பது என்ன?” குழுமத்தால் பின்வருமாறு கோரிக்கைகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன:-
>>> தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, முச்சக்கர - நாற்சக்கர வாகனங்கள் ஒருவழிப்பாதை நடைமுறையைக் கண்டிப்பாகப் பேணச் செய்ய வேண்டும்...
>>> எல்.கே.லெப்பைத் தம்பி சாலை, கூலக்கடை பஜார், மெயின் ரோடு ஆகிய சாலைகளில் நாற்சக்கர வாகனங்களை எந்த இடத்திலும் நிறுத்திட தடை விதிக்க வேண்டும்...
>>> மேற்படி சாலைகளில் விசாலமான சில பகுதிகளை - இரு சக்கர வாகன நிறுத்தத்திற்கான இடமாக நிர்ணயிக்கலாம்...
>>> ஹாஜியப்பா தைக்கா பள்ளியருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய வேண்டும்...
>>> கூலக்கடை பஜார் - மெயின் ரோடு ஆகிய இரு சாலைகளுக்கும் இடைச் சாலையாக உள்ள – பலசரக்குக் கடைகள் அமைந்துள்ள சாலையின் ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி, சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்...
>>> கட்டிடப் பணிகளுக்காக சாலைகளில் கொட்டப்பட்டுள்ள மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அகற்றப்பட்டு, இனி அவ்வாறு கொட்டாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்... மீறி கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்...
>>> ஒருவழிப்பாதையைத் தெள்ளத்தெளிவாக உணர்த்தும் வகையில் - தேவையான அனைத்து சாலை முனைகளிலும் வழிகாட்டுப் பலகைகள் (Sign Boards) நிறுவப்பட வேண்டும்...
>>> பேருந்து நிலையத்தில் சி.சி.டீ.வி. கேமராக்கள் கண்டிப்பாகப் பொருத்தப்பட வேண்டும்...
>>> பேருந்து நிலையத்தின் இரு வாயில்களிலும் பேருந்துகள் வந்து செல்வதைத் தவிர்த்து, ஒரு வாயிலை நுழைவதற்கும் (Entry) மற்றொரு வாயிலை வெளியேறுவதற்கும் (Exit) நிரந்தரமாகப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும்...
>>> பேருந்து நிலையத்தின் இரு வாயில்களின் துவக்கத்திலும் முறையான - அகன்ற வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்...
இவ்வாறு கோரிக்கைகள் - “நடப்பது என்ன?” குழுமத்தால் வலியுறுத்தப்பட்டன.
இக்கூட்டத்தில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளும் - அங்கத்தினருமான சாளை நவாஸ், ஒய்.அஹ்மத் ஸுலைமான், எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.என்.அஹ்மத் ஸாஹிப், செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோருடன் – காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இளைஞர் ஐக்கிய முன்னணி, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், காயல்பட்டினம் நல அறக்கட்டளை உள்ளிட்ட நகர பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.
கூட்டம் நிறைவுற்றதும் - காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.ராமராஜன் உள்ளிட்ட காவல்துறையினரும், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வெ.அறிவுச் செல்வன், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகளும் ஒருவழிப்பாதை சாலைகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டனர். “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளும், இதர பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகளும் இணைந்து சென்றனர்.
ஹாஜியப்பா தைக்கா பள்ளியருகிலுள்ள ஆட்டோ நிறுத்தத்தைப் பார்வையிட்ட காவல் துணை கண்காணிப்பாளர், அவ்விடத்தில் ஆட்டோ நிறுத்தம் இருக்கக் கூடாது என்றும், வேறு இடங்களை அடையாளங்கண்டு தெரியப்படுத்தினால் பரிசீலித்து அனுமதி தரப்படும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூற, அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தனர்.
பின்னர், மெயின் ரோடு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், பேருந்து நிலைய வளாகம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்புகளை எடுத்துக்கொண்டனர்.
இரு சக்கர வாகனங்களை Parellel Parking முறையில் நிறுத்துவதற்குப் பொருத்தமான இடங்கள் இதன்போது அவர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் முகப்புப் பகுதியை - பொதுமக்கள் நாற்சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கிக் கொடுப்பதன் மூலம், ஒருவழிப்பாதை சாலைகளில் அவை நிறுத்தப்படுவதைத் தடுக்கலாம் என காவல் துணை கண்காணிப்பாளர் அப்போது கூறினார்.
சமூக விரோதச் செயல்கள் எதுவும் நடைபெறாதிருக்க, பேருந்து நிலையத்தைச் சுற்றி சி.சி.டீ.வி. கேமராக்களை உடனடியாக நிறுவுமாறு நகராட்சி ஆணையரிடம் அவர் கூற, அதற்கு அவர் இசைவளித்தார். பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் - பேருந்து போக்குவரத்திற்கு இடையூறின்றி ஆட்டோக்களை நிறுத்திட அவர் உத்தரவிட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள உதவி:
Y.அஹ்மத் ஸுலைமான்
M.N.அஹ்மத் ஸாஹிப் |