நடப்பு கல்வியாண்டில் 10ஆம் - 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளைச் சந்திக்கவுள்ள - காயல்பட்டினம் & சுற்றுவட்டாரப் பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கு வழிகாட்டுவதற்காக, இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் வழிகாட்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு, வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இக்ராஃ செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயலர்கள் அனைவருக்கும் - இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளின் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த 11 ஆண்டுகளாக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் ஒத்துழைப்புகளுடன் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியும், அதற்கான திட்டங்களை வகுத்து செயலாற்றியும் வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம்.
தமிழகத்தில் நடைபெறும் 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வை முன்னிட்டு, வருடம் தோறும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ''கல்வி வழிகாட்டல் பயிற்சி வகுப்பு'' உள்ளூர் தொலைக் காட்சி (கேபிள் டிவி) மூலம் 9 வருடங்களாக ஒளி பரப்பி வந்தது இக்ராஃ கல்விச் சங்கம். ஆனால் தற்போது உள்ளூர் தொலைகாட்சி நிறுவனங்கள் செயல்படாத நிலையுள்ளதால் கடந்த இரண்டாண்டுகளாக அத்தகைய ஒளிபரப்பை செய்திட இயலவில்லை.
இந்நிலையில் அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு, தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும், தேர்வு அறையில் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் ''புதிய தலைமுறை கல்வி'' வார இதழில் (08 பிப்ரவரி 2016) திரு. பொன் தனசேகரன் அவர்களாலும், முதுநிலை ஆசிரியர் திரு வெ.ஸ்ரீதரன் அவர்களாலும் வழங்கப்பட்டிருந்த அருமையான ஆலோசனைகள் எங்களை கவர்ந்தது. மிக அழகாக அமைந்திருந்த அந்த ஆக்கங்களை உடனே சேகரித்து இக்ராஃ கல்விச் சங்கம் சார்பாக ''அரசுப் பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?'' , ''வெற்றிக்கான மந்திரச் சாவி!'' ஆகிய தலைப்புகளில் நான்கு பக்கங்கள் கொண்ட தனி பிரசுரமாக அச்சிட்டு, சென்ற ஆண்டு (2015-16) அரசுப் பொதுத் தேர்வெழுதிய காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயின்ற 10, +2 மாணவ-மாணவியர் அனைவருக்கும் அவர்கள் பயிலும் பள்ளிகளின் மூலம் விநியோகிக்கப்பட்டது. இக்ராஃ வெளியிட்ட அந்த பிரசுரம் மிகுந்த பயனளிக்கக்கூடிய வகையில் இருந்ததாக ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். .சமீபத்தில் இக்ராஃ கல்விச் சங்க அலுவலகம் வருகை தந்திருந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் திரு பொன்குமார் அவர்கள் கூட அந்த தேர்வு வழிகாட்டுப் பிரசுரத்தை பார்த்து, மிகவும் நன்றாக இருப்பதாகவும், இதனை இந்த ஊர் மாணவ- மாணவியருக்கு மட்டுமில்லாமல் இதர ஊர் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கும் வழங்கினால் அவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று கருத்து தெரிவித்திருந்தார்கள். அதனை பரிசீலிப்பதாக இக்ராஃ சார்பில் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நடப்பாண்டும் (2016-17) அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, +2 மாணவ-மாணவியர் பயனடையும் வகையில் அதே போன்ற ''அரசுப் பொதுத்தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?'' , ''வெற்றிக்கான மந்திரச்சாவி!'' ஆகிய தலைப்புகளில் நான்கு பக்கங்கள் கொண்ட தனி பிரசுரமாக அச்சிட்டு நமதூரின் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, மற்றும் காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளிலும், இது தவிர (பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) ஆறுமுகநேரி, வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், ஆகிய ஊர்களிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ - மாணவியருக்கும், அவரவர் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று அவற்றை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கி வினியோகிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 3000 மாணவர்கள் பயனடையும் வகையில் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரசுரம் இதோ:
இப்பிரசுரத்தைப் பார்க்கும் பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள், நடப்பாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள உங்கள் மக்களுக்கு இதனடிப்படையில் வழிகாட்டல்களை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக நாம் மேற்கொண்டு வரும் அனைத்து நல்ல நடவடிக்கைகளையும் கருணையுள்ள அல்லாஹ் தனதருளால் வெற்றியாக்கித் தந்து, இந்த மாணவர்களை மாநில - மாவட்ட அளவில் சாதனையாளர்களாகத் திகழச் செய்வானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மது
நிர்வாகி - இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம்.
|