“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முறையீட்டைத் தொடர்ந்து, காயல்பட்டினம் பேருந்து நிலையத்தின் இரு வாயில்களிலும் பேருந்துகள் வந்து செல்வதைத் தவிர்த்து, ஒரு வாயிலை நுழைவதற்கும் (Entry) மற்றொரு வாயிலை வெளியேறுவதற்கும் (Exit) நிரந்தரமாகப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் பேருந்து நிலையத்திலுள்ள இரு வாயில்களையும் பேருந்துகள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் பயன்படுத்துவதைத் தவிர்த்து, ஒரு வாயிலை நுழைவதற்கும் (Entry), மற்றொரு வாயிலை வெளியேறுவதற்கும் (Exit) நிரந்தரமாகப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என – காயல்பட்டினம் நகராட்சியில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.ராமராஜன் தலைமையில் நடைபெற்ற ஒருவழிப்பாதை குறித்த கலந்தாலோசனைக் கூட்டத்தின்போது, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரியிருந்தது.
இதனையடுத்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நேற்று (17.02.2017. வெள்ளிக்கிழமை) முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதி வாயில் நுழைவாயிலாகவும் (Entry), கிழக்குப் பகுதி வாயில் வெளியேறுவதற்கான வாயிலாகவும் (Exit) அறிவிக்கப்பட்டு, நேற்று முதல் காவல்துறையினர் – பேருந்து நிலையத்தின் இரு வாயில்கள் முன்பும் நின்றவாறு, அங்கு வரும் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
“நடப்பது என்ன?” குழுமத்தின் மற்றொரு கோரிக்கையின் படி, பேருந்து நிலையத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாடகை ஆட்டோ வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு வெளியே - அதன் சுவரோரத்தில் நிறுத்த காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள உதவி:
சாளை நவாஸ்
|