காயல்பட்டினத்தில் போக்குவரத்துத் துறை காவலர்களைப் பணியமர்த்த, சென்னையிலுள்ள காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரிடம் (ADGP) “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் காயல்பட்டினம் முதன்மைச் சாலைகளில் அடிக்கடி நிகழும் போக்குவரத்து நெருக்கடி, ஒரு வழிப்பாதை வழிமுறைகள் பேணப்படாமை, அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் ஒட்டப்படுவதால் விபத்துகள் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினத்திற்கென போக்குவரத்துத் துறையிலிருந்து இரு காவலர்களைப் பிரத்தியேகமாக நியமனம் செய்ய – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - இத்துறையின் கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (ADGP) ஜெயந்த் முரளி IPS இடம், சென்னையிலுள்ள DGP அலுவலகத்தில், குழும நிர்வாகிகளால் நேரில் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் டைமண்ட் செய்யித் இதன்போது உடனிருந்தார்.
போக்குவரத்து தொடர்பாக காயல்பட்டினம் நகரம் சந்தித்து வரும் பிரச்சனைகளைக் கேட்டறிந்த அவர், நீண்ட காலம் நிலைக்கும் வகையில் இதற்குத் தீர்வு வழங்கிட முயற்சிப்பதாக உறுதியளித்தார். தற்காலிகமாக இரு போக்குவரத்துக் காவலர்களை - காயல்பட்டினத்திற்கு ஒதுக்கிட, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, காயல்பட்டினம் நகரின் போக்குவரத்து பிரச்சனைகளை கண்காணிக்க ஊர்க்காவல் படையினரை (Homeguards) பணியமர்த்த, அத்துறையின் - கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ADGP) TK விஸ்வநாதன் IPS இடம் மனு வழங்கப்பட்டது.
|