காயல்பட்டினம் நகராட்சியில் கணினி, பிரிண்டர் வாங்கியதில் நடைபெற்ற மோசடி குறித்த வழக்கைத் துரிதப்படுத்த கோரி, தமிழ்நாடு மாநில அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் IAS இடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
2013ஆம் ஆண்டு - காயல்பட்டினம் நகராட்சியில் கணினி, ப்ரிண்டர் வாங்கியதாக நடந்த மோசடி குறித்து நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர் நசீர் கான் என்பவருக்கு - 1,18,000 ரூபாய், காசோலையாக - நகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது... இதுகுறித்து விசாரித்ததில் - கணினி, ப்ரிண்டர் வாங்கப்பட்ட வகைக்கு என தெரிவிக்கப்பட்டது... ஆனால் கணினி, ப்ரிண்டர் வாங்க - மன்றத்தின் அனுமதி வழங்கப்படவில்லை... என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நகராட்சித் துறை அதிகாரிகள் - முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களை வழங்கியதால் - இதில் முறைகேடு நடந்துள்ளது என்பதை உறுதிசெய்து, அதற்கான இழப்பை அது தொடர்புடைய அதிகாரிகள் ஈடுகட்டவும், அவர்களின் மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்கவும் கூறியுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தார். அவ்வழக்கு - எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இன்றளவும் நிலுவையிலேயே உள்ளது.
முழுமையான விசாரணை மேற்கொண்ட நடுவம், தற்போது தெளிவான ஆணை ஒன்றையும் பிறப்பித்துள்ள நிலையில், இதன் மீதான நடவடிக்கையை - லஞ்ச ஒழிப்புத் துறை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் தலைமைச் செயலரும் - லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையருமான கிரிஜா வைத்தியநாதன் IAS இடம், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக, அதன் நிர்வாகிகளால் சென்னையில் நேரில் மனு அளிக்கப்பட்டுள்ளது. |