மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைய இருந்ததால், புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்யும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்க இருந்தது. இத்தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளைப் பின்பற்றி முறையாக வெளியிடப்படவில்லை என்று கூறி தேர்தலை ரத்து செய்தார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் நூத்தி ராமமோகன ராவ் மற்றும் எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், நேற்று தெரிவித்ததுபோலவே வருகிற மே 15-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனால் எரிச்சலடைந்த நீதிபதிகள் மே.14-ம் தேதிக்குள் எந்தக் காரணமும் சொல்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் கூறும்போது, "வரும் மார்ச் 1 முதல் இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு விரைவில் முடித்து வைக்கப்படும். தனி நீதிபதி என்.கிருபாகரனின் உத்தரவிலும் சில மாற்றங்கள் செய்யப்படும்" என்றனர்.
தகவல்:
தி இந்து |