‘அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan)’ - திருச்செந்தூர் வட்டார வள மையம் சார்பில் - அரசே நடத்தும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. அதில், பெற்றோர் - ஆசிரியர்கள் திரளாகப் பங்கேற்றுப் பயிற்சி பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
அனைவருக்கும் கல்வி இயக்கம் - திருச்செந்தூர் வட்டார வள மையம் சார்பில், அதன் கீழுள்ள பள்ளிகளுக்கு நான்கு இடங்களில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கான பயிற்சி முகாம், காயல்பட்டினம் சிவன்கோவில் தெருவிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், இம்மாதம் 13, 14, 15 (திங்கள், செவ்வாய், புதன்) ஆகிய 3 நாட்களில் நடைபெற்றது.
திருச்செந்தூர் வட்டார வள மைய உதவி திட்ட அலுவலர் சக்திவேல், அதன் மேற்பார்வையாளர் எபி பனி தேவகிருபை ஆகியோர் மேற்பார்வையில், அதன் ஆசிரியர் பயிற்றுநரான ஜி.கீதா, டி.ராமநாதன் ஆகியோர் இம்முகாமில் கருத்தாளர்களாகக் கலந்துகொண்டு பயிற்சியளித்தனர்.
பங்கேற்றோர்:
(01) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (தைக்கா பள்ளி) - சிவன்கோவில் தெரு - காயல்பட்டினம், (02) ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி - ஓடக்கரை - காயல்பட்டினம், (03) அரசு மகளிர் மேனிலைப்பள்ளி - ஆறுமுகநேரி, (04) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி – கொம்புத்துறை - காயல்பட்டினம், (05) ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி - வாழவிளை - ஆறுமுகநேரி, (06) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - தீவுத்தெரு, (07) அரசு மகளிர் மேனிலைப் பள்ளி - தீவுத்தெரு – காயல்பட்டினம், (08) ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி - மங்களவாடி – காயல்பட்டினம், (09) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - செல்வராஜபுரம் – ஆறுமுகநேரி, (10) ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி - கே.டீ.எம். தெரு - காயல்பட்டினம், (11) ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி - பேயன்விளை - ஆறுமுகநேரி, (12) ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி - நாக கன்னியாபுரம் ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட - பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.
முகாமில் பயிற்றுவிக்கப்பட்டவை:
>>> குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 குறித்த விழிப்புணர்வூட்டல்...
>>> அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழுவில் அங்கம் வகிப்போர் விபரம், அவர்களைத் தேர்வு செய்யும் விதம், அவர்களுக்கான பொறுப்புகள் குறித்த விளக்கம்...
>>> அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது - தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆகிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்புகள் என்னென்ன என்பன குறித்த விளக்கம்...
>>> 06 முதல் 14 வயது வரையுள்ள மாணவ-மாணவியருக்கு இலவச கட்டாயக் கல்வி கண்டிப்பாகச் சென்று சேர களமிறங்கி, வழிவகை செய்தல்...
>>> படிப்பை இடைநிறுத்தம் (Drop out) செய்த மாணவ-மாணவியரிடம் நேரடியாகச் சென்று, இடைநிறுத்தத்திற்கான காரணத்தை அறிந்து, அவர்கள் தொடர்ந்து பள்ளியில் கல்வி பெற ஏற்பாடுகளைச் செய்தல்; அதைக் கண்காணித்தல்...
>>> பள்ளியின் உட்கட்டமைப்பு குறித்தும் - அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்ந்தறிதல், மாணவர்களின் கல்வி நிலை, மாணவர்களின் சீரான வருகை, ஆசிரியர்களின் வருகை, அரசு உதவித்தொகைகளை மாணவர்கள் தவறாமல் பெற்றிட வழிவகை செய்யப்படுகின்றனவா என்பது குறித்த ஆய்வு...
>>> பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு, மாணவர்களைப் பாலின பாகுபாடின்றி நடத்தப்படுவதைக் கண்காணித்தல்...
>>> ஒவ்வோர் ஆண்டின் பயிற்சி முகாமின்போதும் - அடுத்த ஒரு வருடத்திற்குத் தேவையான பள்ளி மேம்பாட்டுத் திட்டம் (School Development Plan) தயாரித்தல். (அதாவது, அடுத்த ஆண்டில் பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும்; மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப எத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பன குறித்து குழுவின் மூலம் பரிந்துரைத்தல்...
>>> அளிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், அடுத்த ஆண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்தல்...
>>> அரசு அறிவிக்கும் விலையில்லாப் பொருட்கள் அனைத்தும் - அனைத்து மாணவ-மாணவியருக்கும் சரியான முறையில் சென்று சேருகின்றனவா என்பதைக் கண்காணித்து, ஆவன செய்தல்...
>>> பள்ளியின் உட்கட்டமைப்பு (Infrastructure) தொடர்பாக அனைவருக்கும் கல்வி இயக்க வள மையம் செய்ய வேண்டியவற்றைச் சரிவர செய்கிறதா என்பதைக் கவனித்து, செய்யப்படாத பணிகள் குறித்து நினைவூட்டிப் பெறல்...
>>> ஒவ்வொரு 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு தொடக்கப் பள்ளியும், ஒவ்வொரு 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் ஒரு நடுநிலைப் பள்ளியும் உள்ளனவா என்பதை உறுதி செய்தல்...
>>> தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவிகித குழந்தைகளின் நிலை, அவர்கள் அங்கு எவ்விதத்திலும் பாகுபாடின்றி நடத்தப்படுகின்றனரா என்பது குறித்த கண்காணிப்பு
ஆகியன குறித்து இம்முகாமில் விரிவான விளக்கங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பயிற்சியின் முழுத் தகவல்களடங்கிய கையேடு - பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன் உள்ளடக்கம்:-
இம்முகாம் குறித்து கருத்தாளர்கள் கூறுகையில்,
“எத்தனையோ முகாம்களை நடத்தி இருக்கிறோம்... ஆனால், பெற்றோர் இந்தளவுக்கு ஈடுபாட்டுடனும், முழு ஆர்வத்துடனும் பயிற்சி முகாமில் பங்கேற்று ஒத்துழைத்தமை, தமது கருத்துக்களை விரிவாக முன்வைத்தமை போன்ற நிகழ்வுகளை இம்முகாமில்தான் முதன்முறையாகப் பார்க்கிறோம்... நாங்கள்தான் கருத்தாளர்களா என்று எங்களையே சந்தேகித்துக்கொள்ளும் அளவில் பெற்றோரின் கருத்துக்கள் அருமையாக அமைந்திருந்தன... “தலைமையாசிரியர்கள், ஆசிரியையரின் பங்களிப்பும் மிக அருமையாக இருந்தது”
என்று கூறினர்.
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் - நாளொன்றுக்கு 50 ரூபாய், போக்குவரத்திற்காக 20 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய் பணமும், காலை - மாலை இரு வேளை தேனீர் - சிறுகடி ஆகியனவும் வழங்கப்பட்டன.
|