சென்னையில், ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கான ஆணையர் எஸ்.மதுமதி IAS உடன், “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சென்னையில் நேரில் சந்தித்து, காயல்பட்டினம் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், திட்ட மேம்பாட்டு ஆலோசனைகளை உள்ளடக்கியும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
சென்னையிலுள்ள - தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் எஸ்.மதுமதி IAS-ஐ, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.
காயல்பட்டினம் நகரில் ரேஷன் பொருட்களை வாங்குகையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், குடும்ப அட்டையில் மாற்றங்கள் மேற்கொள்வதில் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியன குறித்து, பிரச்சனைகள் இதன்போது அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அனைத்தையும் கேட்டறிந்த ஆணையர் எஸ்.மதுமதி IAS, இக்கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆதார் எண்கள் இணைக்கப்படாததைக் காரணங்காட்டி ரேஷன் அட்டைகள் மீதான தடையை - ஆதார் எண் சமர்ப்பித்த பிறகு நீக்கும் அதிகாரம், வட்ட வழங்கல் அலுவலருக்கு (TALUK SUPPLY OFFICER - TSO) வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரை பொதுமக்கள் அணுகலாம் என்றும் அப்போது அவர் கூறினார்.
தேவையான ரேஷன் பொருட்களைத் தவிர, சோப்பு, தேயிலைத் தூள் போன்ற தனியார் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்காரர்கள் நிர்பந்திக்கக் கூடாது என்று கூறிய அவர், இது தொடர்பாக புகார்கள் இருப்பின் தமக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு, விரைவில் கணினி ரசீது கொடுக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், எடை குறைவு பிரச்சனைக்கு, நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் தாம் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Priority House Holds (PHH) / Non Priority House Holds (NPHH) என அட்டைகள் பிரிக்கப்படுவதாக உலாவரும் தகவல் குறித்து வினவியபோது, தாமும் அத்தகவலைப் பார்த்ததாகவும் – எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) வழங்கப்படாது என்பன போன்ற தகவல்கள் உண்மையற்றவை என்றும், புதிய சட்டம் அடிப்படையில் - ரேஷன் அட்டைகளைப் பயன்படுத்துவோர் குறித்து வருவாய்த் துறை மூலமாக சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரேஷன் பொருட்கள் விநியோகம் ஒளிவுமறைவு இல்லாத முறையில் நடைபெற - கடந்த சில மாதங்களாக தமது துறை எடுத்து வரும் முயற்சிகளை - “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளிடம் ஆணையர் விரிவாக விளக்கினார்.
பொதுமக்கள், tnpds.com இணையதளம் மூலம் – கடைகளில் பொருட்கள் இருப்பு நிலை, ஒதுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவு, நுகர்வோர் வாங்கியுள்ள பொருட்கள் விபரம் உட்பட பல்வேறு தகவல்களைக் காணலாம் என்று அவர் கூறினார்.
வாங்காத பொருட்கள் வாங்கப்பட்டதாகப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, தானே ஒவ்வொரு மாதமும், சீரற்ற (random) முறையில் மொபைல் எண்களைத் தேர்வு செய்து, பொதுமக்களிடம் விசாரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
தனது துறை அறிமுகப்படுத்தியுள்ள செயலி (tnePDS APP) மூலம், நுகர்வோர் - தாமே - ஆதார் எண்களை இணைக்கும் வசதி, வாங்கிய பொருட்களைப் பார்வையிடும் வசதி, தற்காலிகமாக பொருட்கள் வேண்டாம் எனக் கூறும் வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பல்வேறு புதிய அம்சங்களை அச்செயலியில் கொண்டு வர இருப்பதாகவும் கூறியதுடன், இதன் பயனாக - பொதுமக்கள், சிற்சிறு மாற்றங்களைச் செய்ய - தாலுகா அலுவலகத்திற்கு வீணாக அலைய வேண்டியிருக்காது என்றும் தெரிவித்தார்.
“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - இணையதளத்தில் இணைக்க வேண்டி - பின்வருமாறு இரு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டது:-
(1) ஒரு கடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொருட்கள், கடையில் உள்ள பொருட்கள் ஆகிய தகவல்களை மட்டுமே இணையதளத்தில் காண முடிகிறது. இதன் அடிப்படையில், ஒரு கடையில் அங்குள்ள பொருட்கள் இருப்பு குறித்து கேள்வி எழுப்பினால், “பொருட்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் எங்களுக்கு இன்னும் அது வந்து சேரவில்லை” என்று கூறுவதைத் தவிர்க்க, அந்தந்த கடைகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவிட்ட (Delivery Status) நிலை குறித்த தகவலையும் இணையதளத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்...
(2) ஒரு குடும்ப அட்டையோடு எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இணையதளத்தில் பார்க்கவே இயலவில்லை. இக்குறையைப் போக்கும் வகையில் - சில எண்களை மறைத்து (MASKING) முறையில் மொபைல் எண்ணைக் காண்பிக்க வேண்டும்...
முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகள் உறுதியாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றும், விரைவில் இவை குறித்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆணையர் எஸ்.மதுமதி IAS, “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
ரேஷன் கடைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த “நடப்பது என்ன?” குழுமம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்துக் கேட்டறிந்த அவர், இதற்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களை இதன்போது பதிவு செய்தார்.
|