காயல்பட்டினம் கடற்கரையோரம் சட்டத்திற்குப் புறம்பாக குருசடி கட்டப்பட்டு வருவது தொடர்பாக தமிழக அரசு உள்துறைச் செயலரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில், கடற்கரைப் பூங்காவிற்கு வடக்கே - கிறிஸ்துவ வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
அரசு நிலத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியின் அனுமதி பெறப்படாமல் நடைபெற்று வரும் இக்கட்டுமானங்கள் தொடர்பாக - முழு விபரங்கள், தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மூலம் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
CRZ விதிமுறைகள் மீறப்படுவதைக் கருத்திற்கொண்டு, உரிய நடவடிக்கை கோரி - தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்யநாதன் IAS, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலர் முஹம்மத் நஸீமுத்தீன் IAS, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்ய மிஸ்ரா IAS, தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன் ஆகியோருக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மனு வழங்கப்பட்டது.
இவ்வாறிருக்க, தற்போது இது தொடர்பான புகார், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி IAS இடம் - “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. தொடர்பிடத்தில் கள ஆய்வுகள் மேற்கொண்டு, சட்டத்திற்குப் புறம்பான அனைத்து கட்டுமானங்களையும் அப்புறப்படுத்த அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.
|