கணினிமயமாக்கப்பட்ட பொது வினியோகத் திட்டத்தின் கீழ், ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தாமாகவே பல சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தகவலறிக்கை:-
பொது விநியோகத் திட்டம் முழு கணினிமயமாக்கப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் கைபேசி எண் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டு, விற்பனை முனைய இயந்திரம் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்துறையின் இணையதளமான www.tnpds.gov.inஐப் பயன்படுத்தி இலவசமாக கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்:-
ஆன்லைன் சேவைகள் :
1. உறுப்பினர் சேர்க்கை
2. முகவரி மாற்றம்
3. அட்டை ஒப்படைத்தல் / இரத்து
4. அட்டை வகை மாற்றம்
5. குடும்ப அட்டை முடக்கம்
6. குடும்பத் தலைவர், உறுப்பினர் மாற்றம்
7. குடும்ப உறுப்பினர் நீக்கம்
இதற்கு, ஏற்கனவே குடும்ப அட்டைதாரர்கள் தமது குடும்ப அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இணையதளம் மூலம் இச்சேவைகளை தாங்களாகவே இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கூறிய ஆன்லைன் சேவைகளைத் தாங்களாகவே பயன்படுத்தத் தெரியாதவர்கள், தங்கள் இருப்பிடத்தின் அருகிலுள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre) அணுகி, கட்டணம் செலுத்தி சேவையை பெற்றுக் கொள்ளலாம்.
மேற்படி சேவை மையத்தில் தங்களது கோரிக்கைகளை விண்ணப்பமாக அளித்து - பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற ஏதேனும் ஒரு சேவைக்கு ரூ.20/- கட்டணமாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளுக்கு ரூ.40/- கட்டணமாகவும், புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்பத்திற்கு ரூ.50/- கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |