மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகரின் ஒருவழிப்பாதை வழித்தடத்தில் 4 இடங்களில் உயர்கோபுர வழிகாட்டுப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடல் – முதன்மைச் சாலை முனையில் நடைபெற்றது.
MEGA அமைப்பின் மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.முகைதீன் என்ற மீசை மாமா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, வரவேற்றுப் பேசினார். MEGA துணைச் செயலாளரும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக் குழு உறுப்பினருமான எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணரும் – ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துநருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் துவக்கவுரையாற்றினார்.
போக்குவரத்துப் பாதையின் மீது ஒரு முஸ்லிமுக்குள்ள உரிமைகளையும், கடமைகளையும் விளக்கும் வகையிலும், தற்காலச் சூழலுக்கேற்ப அதைப் புரிந்துகொள்ளும் வகையிலும் அவரது உரை அமைந்திருந்தது.
தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் சிவலிங்கம் பேசினார்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் பொதுநல நடவடிக்கைகளைப் புகழ்ந்துரைத்ததோடு, அதன் ஆக்கப்பூர்வமான அனைத்துப் பணிகளுக்கும் காவல்துறை முழு ஒத்துழைப்பளிக்கும் என்றும், காயல்பட்டினத்தில் போக்குவரத்தை சீர்படுத்துவதை முதன்மைப் பணியாக எடுத்துச் செய்யவுள்ளதாகவும் கூறினார்.
அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் பேசினார்.
கடற்கரை தூய்மை, நகரில் விஷக்காய்ச்சல் பரவலுக்கெதிரான நடவடிக்கை என தொடர்ந்து களமிறங்கிப் பணியாற்றுவதற்காக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் நன்றி தெரிவித்த அவர், அதன் மக்கள் நலப் பணிகள் அனைத்திற்கும் நகராட்சி முழு ஒத்துழைப்பளிக்கும் என்றார்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நிறுவப்பட்டுள்ள – ஒருவழிப்பாதை போக்குவரத்து வழிகாட்டு உயர்கோபுரப் பலகைகளை – இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வி.கே.தீபு திறந்து வைத்து வாழ்த்துரையாற்றினார்.
தலைக் கவசமின்றி வாகனம் ஓட்டுதல், இருவர் மட்டுமே பயணிக்க வேண்டிய இரு சக்கர வாகனத்தில் அதிகளவில் மக்கள் செல்லல், கட்டுக்கடங்காத வேகத்தில் வாகனங்களை இயக்குதல், ஓட்டுநர் உரிமமின்றி வாகனத்தை ஓட்டுதல், நாற்சக்கர வாகனத்தில் இருக்கைப் பட்டை (சீட் பெல்ட்) அணியாமல் பயணித்தல் உள்ளிட்ட செய்கைகளால் ஏற்படும் விரும்பத் தகாத பின்விளைவுகளை விளக்கிப் பேசிய அவர், இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்தி – அவர்களைப் பாதுகாப்பான முறையில் சாலை விதிகளை மதித்து வாகனங்களை இயக்க விழிப்புணர்வூட்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியமைக்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு தனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தார்.
திருச்செந்தூர் டி.எஸ்.பி.யாக தான் பொறுப்பேற்ற பிறகு கலந்துகொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி இதுவென்று கூறிய அவர், பொதுவாக இதுபோன்ற உயர்கோபுர அறிவிப்புப் பலகைகளைக் காவல் துறைதான் நிறுவும்; அதற்காக அனுசரணையாளர்களைத் தேடும் என்றிருக்க, தாமாக முன்வந்து, முழு உழைப்பையும் கொடுத்து, தம் கைகளிலிருந்து பணத்தையும் செலவழித்து இதுபோன்ற நற்காரியங்களைச் செய்து, அதைத் திறந்து வைக்க தங்களையும் அழைத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றார் அவர்.
நிறைவாக, “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் எம்.கே.ஜஃபருல்லாஹ் நன்றி கூறினார்.
ஒருவழிப் பாதையைப் பொதுமக்கள் முழுமையாக மனதிலேற்றி மதித்து நடக்கும் வரை – நகரில் காவல்துறை சார்பில் அன்றாடம் போக்குவரத்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் என குழுமத்தின் சார்பில் காவல்துறையினருக்கு அவர் கோரிக்கை வைத்தார்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் ஒரு குறிப்பிட்ட சாராருக்கானதல்ல என்றும், காயல்பட்டினம் நகர்நலன் கருதி – அனைத்துப் பகுதி பொதுமக்களையும் இணைத்து, அவர்களிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகள் அடிப்படையிலேயே இக்குழுமம் இயங்குவதாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு குழுமத்தால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஒருவழிப்பாதையை உணர்த்தும் உயர்கோபுர அறிவிப்புப் பலகைகள் – காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடல் – முதன்மைச் சாலை முனை, ஜாஃபர் ஸாதிக் அப்பா தர்ஹா – பெரிய நெசவுத் தெரு முனை, தாயிம்பள்ளி சந்திப்பு, பேருந்து நிலையம் – கூலக்கடை பஜார் முனை ஆகிய 4 இடங்களில் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|