மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகரின் ஒருவழிப்பாதை வழித்தடத்தில் 4 இடங்களில் உயர்கோபுர வழிகாட்டுப் பலகைகள் நிறுவப்பட்டு, அவற்றின் திறப்பு விழா 05.05.2017. வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்டது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வழிகாட்டுப் பலகைகளைத் திறந்து வைத்தார்.
“ஒருவழிப் பாதையைப் பொதுமக்கள் முழுமையாக மனதிலேற்றி மதித்து நடக்கும் வரை – நகரில் காவல்துறை சார்பில் அன்றாடம் போக்குவரத்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ள வேண்டும்” என அப்போது “நடப்பது என்ன?” குழுமத்தின் சார்பில் காவல்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, மறுநாள் (06.05.2017. சனிக்கிழமை) முதல் காலையிலும், மாலையிலும் – காயல்பட்டினம் முதன்மைச் சாலை, கூலக்கடை பஜார், தாயிம்பள்ளி சந்திப்பு ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் முகாமிட்டு சீரான போக்குவரத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது, ஒருவழிப்பாதையைப் வாகன ஓட்டிகள் முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவதோடு, இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிப்போருக்கும், இதர விதிகளை மீறுவோருக்கும் அபராதமும் விதித்து வருகின்றனர். |