காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய வரி விதிப்பதற்கான அறிவிப்பு, நகராட்சியால் சில நாட்களுக்கு முன் செய்தித்தாளில் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது.
இப்புதிய வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் – நகர பொதுமக்களின் கைச்சான்றுகள் அடங்கிய ஆவணம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நகராட்சி ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
குப்பைகளை அள்ளுவதற்கு என புதிய வரியினை அறிமுகப்படுத்த உள்ளதாக - நகராட்சி சார்பில், ஏப்ரல் 20 அன்று நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் - இது தொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருப்பின், 15 தினங்களுக்குள் தெரிவிக்கும்படி கூறப்பட்டிருந்தது.
அவசியமில்லாத இந்த வரியை எதிர்த்து – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் - பொதுமக்களிடம் கைச்சான்று பெறப்பட்டு, 04.05.2017. வியாழக்கிழமையன்று - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்திடம் நேரில் சமர்ப்பிக்கப்பட்டது.
கைச்சான்றுகளுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
காயல்பட்டினம் நகராட்சியில் தனி அலுவலர் மூலம், 24 - 03 - 2017 அன்று தீர்மானம் எண் 1373 நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி - நகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ள - பொதுமக்கள் மற்றும் இதர நிறுவனத்தினர் புதிய வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய வரி - கீழ்க்காணும் காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஏற்புடையதல்ல:-
(1) நகராட்சியில் ஒவ்வொரு குடிமகனையும் பாதிக்கும் இப்புதிய வரியை, அக்டோபர் 2016 முதல் - நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தருணத்தில் அறிமுகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
(2) இப்புதிய வரியை - மத்திய அரசின் SWM RULES 2016 விதிமுறைகளை மேற்கோள்காட்டி அறிமுகம் செய்ய முயற்சி செய்யப்படுகிறது. SWM RULES 2016 விதிமுறைகள் – “உள்ளாட்சி மன்றங்கள் புதிய வரிகளை அறிமுகம் செய்யலாம்” என ஆலோசனை மட்டும் வழங்குகிறதே தவிர கட்டாயப்படுத்தவில்லை.
(3) நகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள குப்பைகள் அள்ள மாதிரி கட்டணங்கள், பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரி அடிப்படையில் அமைந்துள்ளது. பொதுமக்கள் செலுத்தும் சொத்து வரிக்கும், அவர்கள் வீடுகளில் உருவாகும் குப்பைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, இவ்வரிகள் வடிவமைக்கப்பட்டுள்ள முறையே ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
(4) நகராட்சியில் வெளியிடப்பட்டுள்ள துணை விதிகள், ஒரு வீட்டில் குப்பைகள் உருவாகிறதா, அவர்களே அக்குப்பைகளை நகராட்சிக்குத் தராமல் தாமாகவே அப்புறப்படுத்துகின்றனரா, குப்பையின் எடை எவ்வளவு போன்ற எந்த இயல்பான சூழல்களையும் கருத்திற்கொள்ளாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்டுள்ள காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக, இப்புதிய வரி அறிமுக முயற்சியை, காயல்பட்டினம் நகராட்சி கைவிட வேண்டும் என கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அள்ள சிறப்புக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கோரும் கடிதம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் ஏற்கனவே நகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொதுமக்களின் எதிர்ப்புக் கைச்சான்றுகளடங்கிய ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |