ஹிபா ஆவணங்கள் அடிப்படையிலான பெயர் மாற்ற (புள்ளி மாற்ற) முறை குறித்து விளக்கும் அரசுக் கடிதம், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஹிபா என்ற முறைப்படி சொத்துக்களை தானமாக வழங்கும் வழிமுறை முஸ்லிம் சமூகத்தில் உள்ளது. இம்முறைப்படி, தானமாக வழங்கப்படும் சொத்துக்களைப் பத்திரப்பதிவு செய்யத் தேவையில்லை.
காயல்பட்டினம் உள்ளாட்சி மன்றத்தில் அவ்வப்போது புதிய அலுவலர்கள் பொறுப்பிற்கு வரும்போதெல்லாம் - ஹிபா தொடர்பாக சில சந்தேகங்கள் அவர்களுக்கு எழுவதும், அதன் காரணமாக புள்ளி மாற்றும் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்படுவதும் வாடிக்கை.
பல ஆண்டுகளுக்கு முன்பு இது சம்பந்தமான பிரச்சனை நகரில் எழுந்தபோது – அது குறித்து பின்வருமாறு விளக்கக் கடிதம், அப்போதைய பேரூராட்சிகள் இயக்குனருக்கு, தமிழக அரசால் வழங்கப்பட்டது.
தற்போது, காயல்பட்டினம் நகராட்சியின் முழு நேர ஆணையராக பொன்னம்பலம் என்பவர் பொறுப்பேற்றுள்ள நிலையில் - அவரிடம், இக்கடிதம், அது தொடர்பான இதர ஆவணங்கள் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளால் 04.05.2017. வியாழக்கிழமையன்று நேரில் வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|